ஆணைக்குழு அறிக்கை அர்த்தமற்றது சர்வதேச விசாரணை ஒன்றே தேவை

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கை அர்த்தமற்றது என்று கூறி நிராகரித்திருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இத்தகைய உள்ளூர் கட்டமைப்புக்கள் பொறுப்புக்கூறத் தவறியுள்ளதை கவனத்தில் எடுத்து, சர்வதேச சமூகம் சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு “பொறுப்புக்கூறும் விடயத்தை வினைத்திறனுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கையாள்வதில் ஆணைக்குழு வெளிப்படையாகவே தோல்வி கண்டுள்ளது” என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட்டது. கடந்த மூன்று நாள்களாக அதனை ஆராய்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேரும் இணைந்து நேற்று ஆங்கிலத்தில் அறிக்கை ஒன்றை விடுத்தனர்.

மூன்று பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பான் கீ மூனும் அரசும் இணைந்து விடுத்த கூட்டறிக்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் மற்றும் அதற்கு வழங்கப்பட்ட ஆணை என்பன தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே ஆட்சேபனை கொண்டிருந்தது. அது பற்றி கூட்டமைப்பு ஏற்கனவே இது தொடர்பில் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச் செயலாளர் பான் கீமூனுடன் சேர்ந்து அரசு 29 மே 2009 அன்று விடுத்த கூட்டறிக்கையில், இலங்கை ஏற்றுக்கொண்ட சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக சர்வதேச மனித உரிமை நியமங்களுக்குத் தக்க வகையில் உள்நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவுமான தனது உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி இருந்தது.

இந்தக் கூட்டறிக்கையில், சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களும் மனிதாபிமானம் என்பன மீறப்பட்டமை தொடர்பில் பொறுப்புக்கூறப்பட வேண்டியதன் அவசியத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் கோடிட்டுக் காட்டியிருந்தார். ஆனால் இது தொடர்பான மனக்குறைகளைத் தீர்ப்பதில் அரசு தனது பொறுப்பைச் சரிவர நிறைவேற்றி இருக்கவில்லை. ஒரு வருடம் கடந்து 15 மே 2010 அன்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்தார். அத்தோடு பொறுப்புக்கூறுதலை இந்த ஆணைக்குழு செய்யும் என்றும் உலகுக்கு எடுத்துக் கூறினார்.

பிரச்சினைகளுக்குப் பொறுப்புக் கூறுவதில் வினைத்திறனுடனும் அர்த்தமுள்ள வகையிலும் செயற்படுவதில் ஆணைக்குழுவின் அறிக்கை வெளிப்படையாகவே தோல்வி கண்டுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கை அர்த்தமற்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply