பேருந்து தரிப்பிடம் இல்லாமல் தவிக்கும் முல்லைத்தீவு மக்கள்

‘அம்மா என்னம்மா இன்னும் பஸ்ஸை காணேல்ல? எப்போ பஸ் வரும்’
‘பொறம்மா! இன்னும் கொஞ்ச நேரத்தில பஸ் வந்திடும்…’

இந்த உரையாடல் முல்லைத்தீவு நகரத்தில் ஒரு தாயும் மகளும் பேசிக்கொண்டது. போக்குவரத்து என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததும் தவிர்க்க முடியாததும் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே. உள்நாட்டு வருமானத்தில் போக்குவரத்து பாரிய பங்களிப்பை செலுத்தி வருகின்றது. போக்குவரத்து சீராக இயங்காத நிலையில் பாதிக்கப்படுவதும் பொதுமக்கள்தான்.

இன்று முல்லைத்தீவு நகரத்தை அண்டி வாழும் மக்களினதும் முல்லைத்தீவை நோக்கி பயணிக்கும் மக்களினது நிலையும் பரிதாபத்திற்குரியதாக காணப் படுகின்றது. தாம் போகும் காரியம் கைகூடாவிட்டால் பஸ் தரிப்பிடத்திலாவது தங்கலாம் என்ற எண்ணத்தோடு வருபவர்கள் ஆலமரத்தடியில் படுத்துறங்கிச் செல்லவேண்டிய துயரமான சூழ்நிலைக்கு ஆளாகின்றார்கள்.

வணிகரீதியாகவும் பொருளாதார மையமாகவும் மாறிவரும் முல்லைத்தீவு மாவட்டமும் நகரப் பகுதியும் ஏராளமான அடிப்படை வசதிகளை இழந்த நிலையில்தான் காணப்படுகிறது. இந்நகரத்தை ஆக்கிரமித்துக்கொள்ள நினைக்கிறார்களே தவிர அபிவிருத்தி செய்ய நினைக்க யாருமில்லை. அந்தளவுக்கு மக்களது தேவைகள் பூர்த்திசெய்யப்படாமல் கிடக்கின்றன.

வியாபாரிகள், வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகள், பெரிய வர்த்தகர்கள் என அதிகளவான மக்களால் நிறைந்துதான் முல்லைநகரம் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த மக்களின் வருகைக்கு பிரதான காரணம் போக்குவரத்து. அதிலும் பேருந்துச் சேவை. ஆனால் இன்று முல்லைத்தீவு நகரத்திற்கென ஒரு நிரந்தரமான அத்தோடு பூரணமான வசதிகளையும் கொண்ட அரசுக்கு சொந்தமானதோ அல்லது தனியாரின் பேருந்து நிலையமோ இல்லை என்பதுதான் வலி தரும் விடயமாகும். இதுவரை விடுதலைப் புலிகளின் தமிழீழ போக்குவரத்துக் கழகமாக இயங்கிய பேருந்து நிலையம்தான் முல்லைத்தீவை நோக்கி வரும் அத்தனை பஸ்களுக்கும் அடைக்கலமாக இருந்தது. இப்போது அதன் இடப்பற்றாக்குறையை கருத்திற்கொண்டு முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக உள்ள ஆலமரத்தை அண்டிய பகுதிதான் முல்லை நகரத்திற்கான அரச தனியார் பேரூந்து நிலையமாக இயங்குகிறது. நாட்டின் அனைத்து பாகங்களிலும் கடும் மழை பெய்துவரும் இந்நிலையில் ஒரு பஸ் தரிப்பிடம் இல்லாதது மக்களுக்கு பெரும் சிரமத்தையே தருகின்றது.

மழைக்காலத்தில் பயணிகள் தங்கி நிற்பதற்கென தகரத்தால் வேயப்பட்ட தொரு மண்டபம் ஒன்று அண்மையில் கட்டப்பட்டது. ஆனால் இதுகூட வருகின்ற அனைத்து பயணிகளும் தங்கி நிற்பதற்கு போதுமானதாக இல்லை.

ஆலமரத்தின் அடிவாரமும் கீழே கிடக்கும் கற்களும்தான் பயணிகளுக்கான இருக்கைகள். ஆலமர நிழல்தான் முல்லைத்தீவு நகர பேரூந்து நிலையமாக காட்சியளிக்கின்றது. 128 தனியார் பஸ்கள் முல்லைத்தீவுக்கு சொந்தமான சங்கத்திலிருந்து தம் சேவையை செய்து வருகின்ற போதும் நிறைவானதொரு போக்குவரத்துச் சேவையை முல்லைத்தீவு மக்கள் இன்னும் அனுபவிக்கவில்லை. முல்லைத்தீவிலிருந்து தெற்கே திருகோணமலைக்கும் வடக்கே யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் என போக்குவரத்தும் அதன் சேவையும் விஸ்தரிக்கப்பட்டிருந்தாலும் அடிப்படைத் தேவையான நிரந்தரமானதும் வசதிகள் கொண்டதுமான பேரூந்து நிலையமானது ஏன் இதுவரை அமைக்கப்படவில்லை என்பதுதான் புரியாத புதிராக காணப்படுகின்றது. இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவரும் முன்னாள் வன்னிக்கான பாராளுமன்ற உறுப்பினருமான கனகரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினோம்.

‘நாங்கள் இதற்கான தீர்வுக்காகத்தான் இன்றுவரை பேசிக்கொண்டிருக்கிறோம். அதன்படி முல்லைத்தீவிலிருந்து புதுக்குடியிருப்பு ஊடாக பரந்தன் நோக்கிச் செல்லும் வீதியில் முல்லைநகருக்கு அண்மையில் அமையக்கூடியவாறு ஒரு இடத்தில்தான் இப்போது தனியார் பேரூந்து நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். பள்ளமான அந்த இடத்தில் இப்போது கிரவல் மண் போட்டு நிரப்பும் வேலைத்திட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை அடைமழை பெய்த காரணத்தினால் தடைப்பட்டிருந்த வேலிகள் இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாமல் நாங்கள் தனியார் பேரூந்து நிலையத்திற்கு அருகிலேயே அரச பேரூந்து நிலையத்தையும் அமைப்பதற்கு அரச தரப்பு அதிகாரிகளோடும் பேசியிருக்கிறோம். இவை இரண்டும் அருகில் இருப்பதால் சௌகரியமான போக்குவரத்தில் ஈடுபடமுடியும்’ என்றார்.
இந்த பேரூந்து போக்குவரத்து போக்குவரத்து சபையில் அடிக்கடி பல பிரச்சினைகள் எழுவதாக மக்கள் தெரிவித்தார்கள். அதுபற்றியும் அவரிடம் கேட்டோம். ‘அண்மையில் மாங்குளம் சந்தியில் இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் மிக நீண்ட நேரம் காத்திருந்தும் முல்லைத்தீவுக்கான பேரூந்து வரவில்லையென்றும் தாம் மழையில் நனைந்தபடி நிற்பதாகவும் தகவல் தந்தார்கள். அன்று சேவையில் இருந்த பேரூந்து பழுதடைந்த நிலையில் இடையில் நின்றதுதான் அதற்கான காரணம். நாங்கள் அதற்குப் பதிலாக மாற்றீடாய் இன்னொரு பஸ் விட கொஞ்சம் தாமதமாகிவிட்டது. அன்றையதினம் தவறு எங்கட சங்கத்தில். எது எப்படியோ பேரூந்து நிலையம் தொடர்பில் அதிகமான அக்கறையோடுதான் நாங்கள் சம்பந்தப்பட்ட தரப்போடு பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சிறிது காலத்திற்குதான் இந்த தற்காலிக பேரூந்து நிலையம் இயங்கும். மிகவிரைவில் புதிய பேரூந்து நிலையம் தனது சேவையை ஆரம்பிக்க காத்திருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் போதுமானதும் தேவைக்கு அதிகமான பேரூந்துகள் இப்போது சேவையில் ஈடுபடுகின்றன. முல்லைத்தீவு நகரத்திற்கு மிக விரைவில் நிரந்தர பேரூந்து நிலையம் வந்துவிடும். சில சமயங்களில் ஏற்படும் இடையூறுகளை இனி ஏற்படாமல் நாங்கள் இயன்றளவில் தவிர்க்க நடவடிக்கை எடுப்போம்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தனியார் பேரூந்துகள் சேவை தொடர்பாக நாம் கேட்டபோது ஓரளவு திருப்தியான பதில் கிடைத்தாலும் அரச சேவை தொடர்பாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அபிவிருத்தி நடவடிக்கைகளில் மக்களின் வருவாய்தான் பெரும் பங்காற்றி வருகின்றது. அதனைத் தரும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஏன் அரசு இவ்வளவு பின்னிற்கிறது என்றுதான் புரியவில்லை. திருப்திகரமான பூரணமான சகல வசதிகளையும் கொண்ட முல்லைத்தீவுக்கானதொரு பேரூந்து சேவை நிலையம் காலதாமதமாகாமல் எப்போது கிடைக்கும் என மக்கள் காத்திருக்கின்றனர். இவர்களின் காத்திருப்பு நிறைவேறுமா?

– இராமசாமி ரமேஷ்
இருக்கிறம்

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply