தமிழிலும் அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

அமைச்சரவைப் பத்திரங்களை இனி தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அனைத்து அமைச்சர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்தே வாசுதேவ இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தமிழ் மொழி உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பிக்க இதுவரை காலமும் நடவடிக்கை எடுக்காமை மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் அவர் அங்கு கூறினார்.”தமிழ் மொழியும் அரசகரும மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறிவருகின்ற நாம் அவ்வாறு கூறுவதோடு மாத்திரம் நின்றுவிடக்கூடாது. அதை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.”

” அந்த வகையில் அமைச்சரவை போன்ற அரசின் உயரிய இடங்களில் தமிழ்மொழி பயன்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அரசகரும மொழி என்ற சம அந்தஸ்தை தமிழ் மொழியும் பெறும். ஆகவே, இனி தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் அமைச்சரவைப் பத்திரங்களைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமையாலேயே மூன்று மொழிகளிலும் பத்திரங்களை சமர்ப்பிக்க முடியாதுள்ளது என்று அமைச்சர்கள் அங்கு தெரிவித்தனர்.

மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என்றால் நான் தருகிறேன் என்று வாசுதேவ கூறினார்.வாசுதேவ நாணயக்காரவின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனி மொழிபெயர்ப்பாளர்களை அமர்த்தி மூன்று மொழிகளிலும் அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சரவைப் பத்திரங்கள் தற்போதுவரை சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில்தான் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த இரண்டு மொழிகளில்தான் அமைச்சரவை முடிவுகளும் அரச தகவல் திணைக்களத்தில் வெளியிடப்படுகின்றன.

அமைச்சரவை முடிவுகளைக்கூட தமிழ் மொழியிலும் வெளியிடுமாறு அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிற்குச் செல்லும் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் ஊடக அமைச்சரிடம் அவ்வப்போது கோரிக்கை வைப்பதுண்டு.
அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் பதிலளித்து வருகின்றபோதிலும், அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில்தான் அமைச்சரவைத் தீர்மானங்கள் வெளியிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply