தமிழ் கட்சிகளின் ஒருமித்த குரலே அரசாங்கத்திற்கு உரிய பதில்
பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத தீர்வை திணிக்க முயல வேண்டாம் என்றும் போர் நடந்த வேளையில் உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்களை மேலும் கொண்டு நடத்தி தமிழ் பிரதேசங்களில் இராணுவ ஆட்சி நடத்த வேண்டாம் என்றும் தமிழ் கட்சிகள் ஒருமித்த குரலில் சொல்வது இன்று தமிழ் மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதுவே அரசாங்கத்திற்கு உரிய பதிலடி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ். ராஜேந்திரனின் ஏற்பாட்டில் வட கொழும்பு செயற்பாட்டாளர்கள் மத்தியில் மட்டக்குளியில் நடைபெற்ற நத்தார் தின நிகழ்வில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது:
பிரிக்கப்படாத இலங்கைக்குள்ளே கௌரவமான தீர்விற்கு தமிழர்கள் தயார். ஆனால் அரசாங்கம்தான் இதற்கு இன்று தயார் இல்லை. இதுதான் இன்றைய அடிப்படை உண்மை. அரசாங்கத்திற்கு காவடி தூக்குபவர்களை தவிர ஏனைய அனைவருக்கும் இந்த உண்மை இன்று விளங்குகின்றது. இந்த உண்மையை விளக்கி தமிழ் கட்சிகள் தொடர்ந்து ஒருமித்த குரலை எழுப்பி வந்தால் அதை உலகம் படிப்படியாக ஏற்றுகொண்டே ஆகவேண்டிய நிலைமைக்கு தள்ளப்படும்.
பொலிஸ், காணி, இராணுவமயம் ஆகியவை தொடர்பான தமிழர் நிலைப்பாடுகளுக்கு அரசாங்கம் புலி முத்திரை குத்துகின்றது. அரசாங்கத்தின் இந்த புலி முத்திரை கொள்கையை ஒருபோதும் நாம் ஏற்க முடியாது. தமிழ் மொழியில் தேசியகீதம் பாடியதற்கே புலிமுத்திரை குத்திய புண்ணியவான்கள் இவர்கள். இவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினால், தமிழ் மொழியில் நாம் கோவில்களில் தேவாரம் பாடுவதற்கும், தேவாலயங்களில் கீர்த்தனை பாடுவதற்கும் இவர்கள் நாளை புலி முத்திரை குத்துவார்கள். சோழர்களின் புலிக்கொடியிலிருந்து புலியை எடுத்துவிட்டு புது வரலாறு எழுதுங்கள் என்றும் சொல்வார்கள்.
பொலிஸ், காணி, இராணுவமயம் ஆகியவை தொடர்பில் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை அறிவித்துவிட்டது. எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை நாம் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம். அதேபோல் கூட்டமைப்புக்கு வெளியே புளொட் கூட்டணி ஆகிய அமைப்புகள் இவ்விவகாரங்கள் தொடர்பில் ஒருமித்து குரல் எழுப்பியுள்ளன.
இன்று அரசாங்கத்துடன் கூட்டமைப்புதான் தமிழர் சார்பாக பேசுகின்றது. இந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்க கூட்டமைப்பு பலமானதாக இருக்க வேண்டும். எனவே கூட்டமைப்பை பலவீனமாக்கும் எந்த ஒரு செயலையும் நாம் செய்ய கூடாது. அத்தகைய செயல்கள் தமிழ் மக்களைதான் பலவீனமாக்கும் என்பதை புரிந்துகொள்ளும் அரசியல் பக்குவம் எமக்கு வேண்டும். இன்று இந்த அரசாங்கம் என்ன செய்கிறது?
அது, கூட்டமைப்புக்கு ஒருபுறம் புலிமுத்திரை குத்திவிட்டு, மறுபுறம் அரசாங்கத்தில் இடம்பெறும் சில தமிழ் தரப்புகளை பயன்படுத்தி கூட்டமைப்பை கடுமையாக விமர்சிக்கின்றது. இந்த தமிழ் தரப்பினர் அரசாங்கத்தின் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் கருவேப்பிள்ளைகள். இயேசு கிறிஸ்துநாதர் சொன்னது போல தவறு செய்கிறோம் என்பதை அறியாமலே தவறு செய்பவர்கள் இவர்கள். இன்றைய புனித நத்தார் தினத்தில் இவர்களை மன்னித்து விடுவோம். ஆனால் வரலாற்றை மறக்காமல் இருப்போம்.
இன்று கொழும்பில் மலையகத்திலிருந்து, வட-கிழக்கிலிருந்து குடிபெயர்ந்த தமிழர்கள் வாழ்கிறார்கள். கொழும்பையே பிறப்பிடமாக கொண்ட தமிழர்களும் வாழ்கிறார்கள். இவ்விதம் கொழும்பை நிரந்தர வாழ்விடமாக கொண்ட அனைத்து தமிழர்களினதும் தலைமை கட்சி நாம். இதில் எவருக்கும் சந்தேகம் தேவையில்லை. ஜனநாயக மக்கள் முன்னணியின் முத்திரை இல்லாவிட்டால் கொழும்பில் தமிழர் மத்தியில் எவரும் அரசியல் செய்ய முடியாது. இந்த உண்மை கடைசி தேர்தல் வரைக்கும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையிலே வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற முறையில் நாம் வட-கிழக்கு மக்கள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைமைத்துவ பாத்திரத்தை புரிந்து கொண்டுள்ளோம். அதில் இரண்டு கருத்திற்கு இடம் இல்லை. வட-கிழக்கில் அமைதி ஏற்பட்டால்தான் தென்னிலங்கையிலும் தமிழர் வாழ்வில் நிலையான நிம்மதி ஏற்படும் என்ற அரசியல் முதிர்ச்சி எமக்கு இருக்கின்றது. அதற்காகத்தான் நாம் பாடுபடுகிறோம்.
அதேவேளையில் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு நாம் ஒரு கோரிக்கையை விடுக்கின்றோம்.
அது இதுதான். அனைத்து ஒத்த நிலைப்பாடுகளைகொண்ட தமிழ் கட்சிகளையும் அரவணைக்கும் பாங்கை கூட்டமைப்பினர் கடைப்பிடிக்க வேண்டும். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இருந்தபடி கூட்டமைப்பை கடுமையாக விமர்சிக்கும் கட்சிகளுடன் கூட்டமைப்பு பேச முடியாது. அதாவது பொலிஸ், காணி, இராணுவமயம் ஆகிய முக்கிய விடயங்கள் தொடர்பில் ஒத்த கருத்துள்ள தமிழ் கட்சிகளை அழைத்து கூட்டமைப்பு பேசவேண்டும். இன்று கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் பேசுவதாக ஊடக செய்திகள் வருகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருக்கும் கட்சியானாலும் அதை நண்பர் ஹக்கீம் பொறுப்புடன் வழி நடத்துகின்றார். எனவே இது நல்லது. ஆனால் ஒத்த கருத்துள்ள தமிழ் கட்சிகளுடன் பேசுவது அதைவிட இன்று முக்கியமானது.
பொலிஸ், காணி, இராணுவமயம் ஆகிய விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு கருத்து தெரிவிக்கும்போது அரசாங்கம் சுலபமாக புலிமுத்திரை குத்திவிடுகிறது. இது தமது நிலைப்பாடுகள் மாத்திரம் அல்ல. கூட்டமைப்பிற்கு வெளியே இருக்கும் பல தமிழ் கட்சிகளும் இதே நிலைபாடுகளை கொண்டுள்ளன. கடந்தகாலங்களில் புலிகளுக்கு எதிராக நின்ற பலரும் இன்று பொலிஸ், காணி, இராணுவமயம் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாடுகளை கொண்டுள்ளார்கள் என அரசாங்கத்திற்கும்இ சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்ட இதைவிட நல்ல வாய்ப்பு கூட்டமைப்பிற்கு கிடைக்காது. இது கூட்டமைப்புக்கு புலிமுத்திரை குத்தும் அரசாங்கத்திற்கும் உரிய பதிலடியாகவும் அமையும்.
ஜனநாயக மக்கள் முன்னணியுடன் பேசுங்கள் என்று நாம் அவசரப்படுத்தவில்லை. முதல் கட்டமாக வட-கிழக்கில் செயல்படும் ஒத்த கருத்துகள் கொண்ட தமிழ் கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டமைப்பு பேச வேண்டும். இதன்மூலம் கூட்டமைப்பு புதிய பலத்துடன் அரசுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளலாம். இதை கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply