இந்தியாவும் அமெரிக்காவும் எல்லை மீறிச் செயற்படுகின்றன
இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை விடயத்தில் எல்லை மீறிச் செயற்படுகின்றன. காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளையும் போர்க்குற்றங்களையும் இலங்கை ஒரு போதும் பேசவில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் வழங்குவதாக இலங்கையின் எந்த அரசாங்கம் உறுதிமொழி வழங்கியது என்று இந்தியா கூறவேண்டும்.
தற்போதைய அரசாங்கம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை ஒரு போதும் மாகாண சபைகளுக்கு வழங்காது. அதற்கு இடமளிக்கவும் போவதில்லை என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பிரதி பொதுச் செயலாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி உதய கம்மன்பில கூறுகையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்தும், அரசியல் தீர்வுத் திட்டம் குறித்தும் அண்மையில் இந்தியா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதனை எல்லை மீறிய செயற்பாடாகவே ஜாதிக ஹெல உறுமய காணுகின்றது. ஏனெனில் தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் உள்ளூர் விவகாரமாகும். இதில் தலையிடும் உரிமை இந்தியா உட்பட எந்தவொரு நாட்டிற்கும் கிடையாது.
வடக்கு கிழக்கை மீள் இணைப்பது மற்றும் பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவது என்பதெல்லாம் வெறும் பகல் கனவுகளாகும். தேசிய தீர்வுக்கான நகர்வுகளை உள்நாட்டு அரசாங்கம் முன்னெடுக்கின்றது. அதேபோன்று மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்திடமிருந்த வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்யும் பணியினையும் அரசு முன்னெடுக்கின்றது.
இந்நிலையில் அநாவசியமான விசாரணைகளுக்கு அழுத்தங்களை கொடுப்பது நியாயமற்ற விடயமாகும். நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்ட கட்டமைப்பு உள்ளது. இதற்கு அமைவாக தேசிய விசாரணைகள் தேவைப்படின் அரசு முன்னெடுக்கும் என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply