நிமல்-சம்பந்தன் அடுத்த சுற்று பேச்சு நிரல் குறித்து பேசத் தீர்மானம்
அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வாவும் பேச்சுநடத்தித் தீர்மானிப்பார்கள் என பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கும் அரசாங்கக் குழுப் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜயசிங்க தெரிவித்தார்.
இரு தரப்புக்குமான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது ஆரம்பிக்கும். அடுத்த மாத இறுதி வாரத்தில் மூன்று நாட்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதென்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
எனினும், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட விருக்கும் விடயங்கள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும், சபைமுதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால.டி.சில்வாவும் உத்தியோக பற்றற்ற ரீதியில் சந்தித்துத் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், கடந்த மார்ச் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த விடயங்கள் குறித்தே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் ரஜீவ விஜயசிங்க மேலும் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு மிடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை கள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பூர்த்தி யடைந்துள்ள. மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், வடக்கு-கிழக்கு இணைப்பு உள்ளிட்ட முக்கியமான மூன்று விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதால் இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் எதுவித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்திருந்த நிலையில், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜனவரியில் ஆரம்பமாகவுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply