காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கியே தீர்வு வரவேண்டும்

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்போது அதில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நிச்சயம் உள்ளடக்கப்பட்டே ஆகவேண்டும் என்றும் அவ்வாறு இல்லாதபட்சத்தில் அது பிரச்சினையைத் தீர்க்கும் முழுமையான தீர்வாக அமையாது என்றும் அமைச்சர் திஸ்ஸ விதாரண யாழ். “உதயன்’ பத்திரிகைக்கு கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

அரசியல் தீர்வு விடயத்தில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்தான் சர்ச்சைக்குரிய விடயங்களாக உள்ளன. அவை தீர்வுடன் உள்ளடக்கப்படவேண்டும் என்று சிலரும், தேவை இல்லை என்று சிலரும் கூறிவருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அதேவேளை, வேறு சில தமிழ்த் தலைவர்கள் அவை தேவை இல்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். சிங்கள அரசியல்வாதிகளின் மத்தியிலும் மேற்படி இரண்டு கருத்துகள் நிலவுகின்றன.

என்னைப் பொறுத்தவரை காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கட்டாயம் தேவை என்றே கூறுவேன். ஆனால், உச்சமட்டத்தில் இல்லாது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கவேண்டும். இந்திய மாநிலங்களில் இருப்பதுபோல் அவை உச்ச அதிகாரம் கொண்டவையாக இருக்கக்கூடாது.

இந்திய மாநிலங்கள் எமது நாட்டைவிடவும் பல மடங்கு பெரியவை. எமது நாட்டின் மாகாணங்களுடன் ஒப்பிடும்போது அவை இன்னும் பெரியவை. ஆகவே, அளவுக்கு ஏற்ப பிரச்சினைகளின் தன்மைக்கு ஏற்ப இந்தக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.

மாகாண மட்டங்களில் பொலிஸ் ஆணைக்குழுக்களை அமைக்காது, தேசிய மட்டத்தில் மாத்திரம் பொலிஸ் ஆணைக்குழுவொன்றை வைத்துக்கொண்டு ஓரளவு பொலிஸ் அதிகாரத்தை மாகாணத்திற்கு வழங்கமுடியும்.அரசியல் தீர்வுடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை இணைப்பதன் மூலமே அரசியல் தீர்வு முழுமை பெறும் என்பது எனது கருத்து.சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகள் முற்றாகத் தீர்க்கப்படக்கூடியவாறுதான் தீர்வுத்திட்டம் அமையவேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply