மண்ணின் மைந்தர்களின் செயலால் குமுறும் கிளிநொச்சி மாவட்ட மக்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட காலமாக வைத்தியர்களுக்கான பற்றாக்குறை நிலவி வருகின்றமையால் தம்மால் மக்களுக்கு நிறைவான சேவையினை வழங்க முடியாதுள்ளதென கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினர் தெரிவிக்கின்றனர்.
வருடந்தோரும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து ஐந்து மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி செல்கின்றனர். இதன்படி வருடந்தோரும் ஐந்து மாணவர்கள் வைத்தியர்களாக பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுகின்ற போதும் எவரும் கிளிநொச்சிக்கு கடமையாற்ற வருதில்லை. மண்ணின் மைந்தர்களாக மதிக்கப்படும் இந்த வைத்தியர்களின் செயலால் கிளிநொச்சி மாவட்ட மக்கள் குமுறுகின்றனர்.
இம்மாவட்டத்தின் குறைந்தளவான வெட்டுப் புள்ளியினை பயன்படுத்தி பல்கலைக்கழகம் செல்கின்ற இவர்கள் வைத்தியர்களாக வெளியேறுகின்ற போது மாவட்டத்தினை மறந்து விடுகின்ற துரதிஸ்ட்டமே கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு சொந்தமான 121 வைத்தியர்கள் வசதி வாய்ப்புக்கள் நிறைந்த வெளி மாவட்டங்களில் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறிப்பிட்ட ஒருசில வைத்தியர்கள் தாமாக முன்வந்து கிளிநொச்சிக்கு சேவையாற்ற வருகின்ற வரவேற்கத்தக்க நிகழ்வுகளும் இடம்பெறுகிறன.
இதனைவிட வெளிநாடுகளில் தங்களுடைய சொந்த பணத்தில் பல இலட்சங்களை செலவு செய்து கற்ற வைத்தியர்கள் தாமாக விரும்பி கிளிநொச்சியில் சேவையாற்றுகின்றனர்.
ஆனால் கிளிநொச்சி மக்களின், இலங்கை மக்களின் வரிப்பணத்தில் கற்று வைத்தியரானவர்கள் சொந்த மாவட்டத்தை மறந்து விடுகின்றமை வேதனைகுரிய விடயமாகும். இந்த வேதனையான விடயம் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமன்றி நாட்டின் பல மாவட்டங்களிலும் இடம்பெற்று வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply