வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குகிறார் இலங்கை ஜனாதிபதி

அதிகாரப்பகிர்வு குறித்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.

தற்போது வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வி ஒன்றின்போது, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முன்னைய வாக்குறுதியில் இருந்து பின்வாங்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

“போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் அதிகாரப் பகிர்வு குறித்து கூறியிருந்தார்.

இந்தநிலையில் கடந்த புதன்கிழமை இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் காணி, காவல்துறை அதிகாரங்களைப் பகிர்வது நடைமுறைச் சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறார்“ என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, ஜனவரி 17, 18, 19ம் நாட்களில் சிறிலங்கா அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply