தமிழ் மக்கள் புதுநிமிர்வு கொள்ள புத்தாண்டு மலர வேண்டும்
மலரும் புதிய ஆண்டில் எமது மக்களின் வாழ்வானது சுபீட்சமானதாகவும் ஒளிமயமானதாகவும் அமையவேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக சிறிரெலோ தலைவர் ப.உதயராசா தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஒரு சமுதாயத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் விட்டுக்கொடுப்புகள் பேச்சு வார்த்தைகள் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது.
பலமிக்கவன் பலமற்றவனை அன்புடனும் பண்புடனும் நேசிக்கத் தெரிய வேண்டும். இதன் மூலம் நாம் எத்தனையோ விடயங்களை சாதிக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த காலத்தில் மக்களை நேசித்தவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவைகள் உணர்வுகளை உணர்ந்தவர்களும் பலர் இன்று சர்வதேச மட்டத்தில் வாழ்த்தப்படுபவர்களாகவும் வரலாற்று நாயகர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
எமது நாட்டிலும் கூட இன்று விட்டுக்கொடுப்புகள் இன்றியும் பாதிக்கப்பட்டவனின் எண்ணங்கள் சிந்தனைகளை புரிந்துகொள்ள முடியாமலும் பேச்சு வார்த்தைகளில் காணப்படும் நம்பிக்கையீனங்களும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொள்ளும் மனப் பக்குவமும் இந்நாட்டின் வளர்ச்சி அபிவிருத்திகளை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்தவர்கள் தமது சுயநலனுக்காக மூக்கை நுழைக்கும் நிலையும் காணப்படுகின்றது.
இந் நிலையில் இருந்து மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பும் கடமையும் ஆகும். அதனை விடுத்து வீம்பு பேசி வாக்குவாததத்தில் ஈடுபடுவது என்பது எம்மை நாமே அழித்துக்கொள்வதாகவே அமைய முடியும். இதனை ஆட்சியல் உள்ளவர்களும் சரி பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்களும் சரி புரிந்துகொண்டு செயல்பட வேண்டியது அவசியமாகும். எம்மக்களின் நல்வாழ்வுக்காக இந் நடவடிக்கையை அனைவரும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பிறந்துள்ள புத்தாண்டு இவ்வழகிய நாட்டில் வாழும் அனைவருக்கும் நல்வாழ்வையும் நல்லறிவையும் வழங்கி, மக்களுக்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்க வேண்டும். தமிழ் மக்கள் புதுநிமிர்வு கொள்ள புத்தாண்டு மலர வேண்டும்
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply