மசூதியை இடிக்க வந்த பொலிசாருடன் முஸ்லிம் கிராமவாசிகள் மோதல்
சீனாவின் வட மேற்குப் பகுதியில் மசூதி ஒன்றை இடிப்பதற்காக அனுப்பப்பட்டிருந்த கலவரக் கட்டுப்பாட்டுப் பொலிசாருடன் நூற்றுக்கணக்கான முஸ்லிம் கிராமவாசிகள் மோதியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
நிங்ஜியா என்ற என்ற பிரந்தியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தப் பிரச்சினை நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் அந்நாட்டு மக்களின் மதரீதியான செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருவது வழக்கம்.
அங்கு மசூதியோ தேவாலயமோ கட்டப்பட வேண்டுமென்றால், அந்தக் கட்டிடத்துக்கு அதிகாரிகள் தெளிவான முன் அனுமதி வழங்கிருக்க வேண்டும்.
ஹெக்ஸி என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு மசூதி சட்டவிரோதக் கட்டிடம் என்றும், ஆதலால் அதிகாரிகள் அதனை இடித்ததாகவும் நிங்ஜியா பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
முரண்பட்ட தகவல்கள்
சீனாவின் ஹுய் முஸ்லிம் சிறுபான்மையின்மைக் குழுவைச் சேர்ந்த கிராமவாசிகள் நூற்றுக்கணக்காருடன் கலவரக் கட்டுப்பாட்டுப் பொலிசார் சுமார் ஆயிரம் பேர் மோதியிருந்ததாக ஹொங்காங்கிலிருந்து இயங்கும் மனித உரிமை கண்காணிப்புக் குழு கூறுகிறது.
இந்த மோதலில் ஐம்பது பேர் வரை காயமடைந்ததாகவும், இதனையொட்டி நூற்றுக்கும் அதிகமானோர் தடுத்துவைக்கப்பட்டதாகவும் கிராமவாசிகளை மேற்கோள்காட்டி அக்குழு தெரிவிக்கிறது.
பலர் கைதுசெய்யப்பட்டிருப்பதை சீன அதிகாரிகள் உறுதிசெய்தாலும், சிறிய எண்ணிக்கையிலானோருக்குத்தான் காயம்பட்டிருப்பதாக அவர்கள் சொல்கின்றனர்.
இந்த மோதலில் பொலிசார் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
ஆனால் இந்த மோதலில் எவரும் உயிரிழக்கவில்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply