வட கிழக்கு இணைப்பு காணி பொலிஸ் அதிகாரம் என்பவற்றை வழங்கினால் கூட்டமைப்பு அரசியல் செய்ய வேண்டியிராது

வடக்கு கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்பவற்றை அரசாங்கம் வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு வழங்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்ய வேண்டிய தேவைப்பாடு இருக்காது.

இதன் பின்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் கிழக்கு மாகாண தலைமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் மற்றுள்ளவர்களுமே அபிவிருத்திப் பணிகளை வடக்கு கிழக்கில் செய்ய அரசியலில் ஈடுபட வேண்டி ஏற்படும். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் இயங்கும் அன்னை திரேசா, பராசக்தி, மாணிக்கி ஆகிய தாய்மார் பள்ளிகளில் அங்கம் வகிக்கும் தாய்மார் பயனடையும் வகையில் மண்டூர் 13ஆம் கிராமத்தில் “ஆரோக்கியமாக வாழ்வது எப்படி’ என்ற தலைப்பிலான பயிற்சிப் பட்டறை தாய்மார் பள்ளி தலைவரும், இணைப்பாளரும், மட். பட். கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலய அதிபருமான க. பிரபாகரன் தலைமையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அயரிநேத்திரன், சீ. யோகேஸ்வரன் ஆகியோரும் கௌரவ அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வ புள்ளநாயகம், பயிற்சிப் பட்டறையின் வளவாளராக பெரியகல்லாறு மத்திய கல்லூயின் பிரதி அதிபர் த. தேவராசாவும், இப்பட்டறையின் நெறியாளராக கவிஞர் கோவிலூர் தணிகாவும் கலந்து சிறப்பித்தனர்.

அங்கு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மேலும் பேசுகையில், தமிழ் மக்களுக்குள்ள ஒரேயொரு தனித்துவமான அரசியல் பலமாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் அரங்கில் இருந்து அகற்றிவிட்டால் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் எவரும் பேச முன் வர மாட்டார்கள்.

இதற்கான சதி வலை விரிக்கப்பட்டு, பேரினவாதிகளின் கரங்களும் அவர்களின் அடியாட்களின் கரங்களும் ஓங்க முற்படுவதை நாம் எமக்கு உணர்வுபூர்வமாக வாக்களித்த மக்களும் நன்கறிவார்கள்.

இன்று தமிழ் சிவில் சமூகம் என்ற பெயரில் எழுபத்தைந்து பேர் கையொப்பமிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது பல வினாக்களைத் தொடுத்து விளக்கம் கோரியுள்ளனர். இதில் யார் கையொப்பம் இட்டார்கள் என்பது முக்கியமல்ல. என்ன கேட்டுள்ளார்கள் என்பதுதான் முக்கியம். இவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. இதனை எமது தலைவர் இரா. சம்பந்தன் ஐயா தமிழ் சிவில் சமூகத்திற்கு அவர்கள் ஊடகங்கள் வாயிலாக கேட்டதற்கு ஊடகங்கள் வாயிலான பதில் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் அஹிம்சை வழிப் போராட்டம், ஆயுதவழிப் போராட்டம் என்பன அறுபத்து இரண்டு வருட காலமாக இடம் பெற்றும்கூட எந்தவிதமான தீர்வும் எட்டப் படவில்லை. ஆனால் உலக வரலாற்றை எடுத்து நோக்கும்போது பல இழப்புக்களை சந்தித்த சமூகம் என்றோ ஒரு நாள் விடுதலை பெற்றே தீரும். தர்மம் வெல்லும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பதினான்கு பாராளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றது. இதில் பொடியப்புவின் புதல்வர் தாய் வீட்டை மறந்துவிட்டு தந்தையின் உறவுகளை நாடி விட்டார். இருந்தாலும் எஞ்சியுள்ள பதின்மூன்று பேரும் சம்பந்தன் ஐயாவின் தலைமையில் கூட்டுப் பொறுப்புடனேயே உள்ளோம்.

சர்வதேச சமூகத்தினதும் குறிப்பாக அமெரிக்காவினதும் இந்தியாவினதும் வற்புறுத்தலின் பேரில் கடந்த ஒரு வருட காலமாக அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதினேழு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் எதுவும் இதுவரை நடைறைப்படுத்தப்படவில்லை. இருப்பினும் வெளியுலக சக்திகளின் அழுத்தம் காரணமாக பேச்சுக்களில் இருந்து விலக முடியாத சூழலில் நாம் உள்ளோம். நாம் முதலில் விலகினால் நாமே பேச்சுக்களை முறித்தோம் என்று அரசாங்கம் எம் மீது குற்றம் சுமத்தக் கூடும். கடந்த கால அனுபவங்களைப் படிப்பினையாகக் கொண்டு நாம் பொறுமை காத்து வருகின்றோம்.

இந்நாட்டில் வாழும் சிங்கள மக்களினது பேராதரவைப் பெற்ற தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளதைப் போன்று வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பேராதரவினைப் பெற்ற தலைவராக இரா. சம்பந்தன் ஐயா உள்ளதை எவராலும் மறுதலிக்க முடியாது.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை இரை மீட்டிப் பார்க்கும்போது தந்தை செல்வா, ஜீ.ஜீ. பொன்னம்பலம், அண்ணன் அமிர்தலிங்கம் வரையிலான தமிழ் தலைவர்கள் தொடக்கம் இன்றுள்ள தலைவர் இரா. சம்பந்தன் ஐயா வரைக்கும் மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு வந்த வரலாறு உள்ளது.

இருப்பினும் இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தினை இல்லாமல் செய்வதற்காக இலங்கைக்கு இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் உதவி நல்கின. இந்நாடுகள் இன்று ஆயுதப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்த பின் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எமது தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எல்லாம் இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச சமூகம் இந்தியாவும் இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான உறவுகளை இழந்த தமிழ் சமூகம், எண்பத்து ஒன்பதாயிரம் விதவைகளைக் கொண்டுள்ள தமிழ் கோடிக்கணக்கான சொத்திழப்புக்களை சந்தித்த சமூகம். இதை விடவும் மேலாக கல்விச் செல்வத்தை இழந்து நிர்க்கதியான சமூகம் ஏமாற்றப்படுவதை இந்தியா வும், சர்வதேச சமூகமும் அனுமதிக்க மாட்டாது.

இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பேச்சுக்களில் பங்கேற்கும் அமைச்சர்கள் ஒன்றையும், ஜனாதிபதி ஒன்றையும், சம்பிக்க ரணவக்க, கெஹலிய ரம்புக்வெல ஒன்றையும் என பலரும் பலவாறு கூறுகின்றனர்.

யார் எதைக் கூறினாலும் நாம் கூறுவது ஒன்றுதான். எமது பூர்வீக நிலத்தில் நாம் சுய நிர்ணய உமையைப் பெற்று இணைந்த வடக்கு கிழக்கில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பெற்று கௌரவமாக வாழ வேண்டும் என்பதுதான். இந்த விடயம் தொடர்பில் எமக்கிடையே மாறுபட்ட கருத்து கிடையாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பொது நல சிந்தனையில் இயங்கும் அரசியல் கூட் டமைப்பு. சுயநல சிந்தனையாளர்களுக்கும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களுக்கும் இங்கு இடமில்லை.

ஆகவே, நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் வரையும் எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அரசியல் பயணத்தில் இருந்து ஓய மாட்டோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply