விமானத்தள விஸ்தரிப்பால் குடிநீருக்கு அலையும் குடும்பங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பின்தங்கிய பிரதேசமே வலையிறவுக் கிராமம். சுற்றிலும் நீர்வளம் பொருந் தியதாக அக்கிராமம் காணப்பட்டாலும் அம்மக்கள் குடிநீருக்காக காத்துக்கிடக்கவேண்டிய நிலையே இன்று காணப்படுகின்றது.
வலையிறவுக் கிராம மக்கள் பொதுவில் ஒரு குழாய்க்கிணறை அமைத்து அதிலிருந்தே நீரைப் பெற்று வருகின்றனர். சேத்துக்குடா திமிலைத்தீவு; புது நகர்; வவுணதீவு பத்தரைக்கட்டை ஆகிய கிராமங் களைச் சேர்ந்த மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள் வதற்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் பல மைல் தூரங்கள் சென்று அதனைப் பெற வேண்டிய நிலையும் காணப்படுகிறது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அம்மக்கள் குடங்களையும் வாளிகளையும் தூக்கிக் கொண்டு தலையில் வெயிலுக்காக ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு நடந்து சென்றனர். ‘இங்க வந்து தண்ணி சரியான பற்றாக்குறையாக இருக்குது. ஒரேயோரு பொது நீர்க்குழாய் மட்டும்தான் இருக்குது. அதில வந்து டைமுக்குத்தான் நீர் வருகுது. வாற தண்ணியக்கூட வரவிடாமல் சில பட்டிகள் தடுத்துக் கொண்டிருக்கு. அத நீங்கதான் வெளிப்படுத்தணும் எண்டு கேட்டுக் கொள்றம். அதுமட்டுமில்ல ஒவ்வொரு ஒழுங்கைக்கும் நீர்ப்பாசனக்குழாய் அமைச்சுக் கொண்டு போறாங்க. ஆனால் எங்கட கிராமத்தக்கு மட்டும் நீர்ப்பாசனக்குழாய் அமைக்கப்படல்ல. அது என்ன காரணம் என்ன எண்டுதான் விளங்குதில்லை’ என்று கூறிய அப்பிரதேசவாசியொருவர் தமக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று எம்மிடம் கூறி வருந்தினார்.
வலையறவுப்பிரதேசத்தில் இருக்கின்ற விமானப்படைத்தளப் பகுதியை விஸ்தரிப்பு செய்ததினால் அங்கு குடியிருந்த 475 குடும்பங்கள் வசித்த அக்கிராமத்தில் இப்போது 48 குடும்பங்கள்தான் இருக்கின்றன. இலங்கை விமானப்படையின் மட்டக்களப்பு படைத்தளம் விஸ்தரிக்கப்பட்டதாலேயே அங்குள்ள மக்கள் வேறு பிரதேசங்களுக்குச் சென்றுவிட்டனர். இதனால்தான் தாம் சிறியளவிலான நீரைப் பெறுகிறோம் என்று அம்மக்கள் கூறுகின்றனர். வெறும் ஐந்து லீற்றர் கொள்ளளவு உடைய இரண்டு போத்தல் குடிநீர்தான் தங்கள் குடிநீராக இருப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
‘எங்களுக்கு இந்த பாதுகாப்பு வலயத்துக்கெண்டு எடுத்த 30 குடும்பத்து வீட்டுத் திட்டமும் பள்ளமும் படுகுழியா இருக்குதே தவிர அத வந்து ஒருவரும் பாரத்ததுமில்ல கேட்டதுமில்ல. எது செய்யோணுமெண்ட தீர்மானமெடுத்ததுமில்ல. அந்த முப்பது குடும்பமும் இருக்க இடமில்லாம அங்கையும் இங்கையும் இருந்து கொண்டே இருக்குது. அதால பெரிய கஸ்டமா இருக்குது. பயிர் செய்ய வசதியில்ல. எங்களுக்கு வாய்க்கால் பாதையை திருத்தி போறத்துக்கு வழியமைச்சுத் தரோணும். குடி நீர்ப்பிரச்சினை பாம்புகள் பற்றைகள் எல்லாம் துப்பரவாக்கித் தரவேணும்’ என்கிறார் இன்னொருவர்.
திமிலைத் தீவு கிராம மக்களும் இக்குடிநீர்ப் பிரச்சனைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தற்போது குடிநீர் வழங்குவதற்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அம்மக்கள் கூறுகின்றனர். அதிலும் அம்மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
அக்கிராமவாசி ஒருவர் ‘திமிலை தீவுக் கிராமத்தில வந்து குழாய் நீர் குடுத்து வாறாங்க. அதில வந்து எங்கட ஏழு டானியல் சதுக்கத்துக்கு வந்து ஏழு ஒழுங்கைகளுக்கு குழாய் நீர் பதிக்கப்படவில்லை. அடுத்த மாதம் தண்ணி குடுக்கக்குள்ள குழாய்கள பதிக்கச் சொல்லி சொல்றாங்க. அதுக்கும் மேலதிகமா காசு கட்டணும் எண்டு சொல்றாங்க. அதால எங்கட சனங்கள் சரியான கஸ்டப்படுகுதுகள். மற்றது ஒவ்வொரு ஆளுக்கும் 22 ஆயிரம் 27 ஆயிரம் ரூபா கேட்கிறாங்க. அந்தக் காசு இல்லாத நிலையில் சனங்கள் கஸ்டப்படுறாங்க. அந்தக் காசையும் குறைக்கவேணுமெண்டு கேட்டுக்கொள்றம்’ என்றார்.
இந்த விடயம் குறித்து மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீதா பிரபாகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது…. ‘இங்கு சேத்துக்குடா வலையறவு புதூர் போன்ற கிராமங்களுக்கு குடிநீர்ப் பிரச்சினை காலம் காலமாக இருந்துகொண்டு வந்திருக்குது. மட்டக்களப்பு மாநகர சபையும் பொது இடங்களில தாங்கிகள வச்சி கூடுமானவரை குடிநீர் விநியோகம் செய்துகொண்டு வந்தனாங்க. இப்பவும் செய்துகொண்டு வாறம். நான் நினைக்கிறன் இன்னும் ஓரிரு மாதங்களில் அந்தப் பிரச்சினை முற்றுமுழு
தாக தீர்ந்துவிடும். ஏனென்றால் இப்போது வந்து உன்னிச்சையிலிருந்து நீர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தமாத மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திலும்கூட நாங்கள் இது தொடர்பாக கதைத்தம். நீர்ப்பாசன அதிகாரியுடனும் கதைத்திருக்கம். விரைவில் அது மக்களது பாவனைக்காக விடப்படும்’ என்று உறுதியுடன் கூறினார்.
திமிலைத்தீவு மக்கள் குழாய் பதிப்பதற்காக தம்மால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த கஷ்டப்படுவதாக் கூறுகின்றனர். இதற்கு ஏதாவது தீர்வு உண்டா?
‘அந்தக் குடியிருப்பாளர்கள் அவர்களது கிராம அபிவிருத்தி சங்கத்தினூடாக அல்லது கிராம சேவையாளர் ஊடாக தங்கள் கோரிக்கைகளை பிரதேச செயலாளரிடம் கையளித்து, அரசாங்க அதிபரிக்கு முன்வைப்பார்களாயின் நிச்சயமாக இவர்களது பிரச்சினைக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளலாம்’ என்றார் சிவகீதா பிரபாகரன்.
காலம் காலமாக குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டாத நிலையில் இம்மக்கள் வறையறுக்கப்பட்ட சிறியளவு நீரைக் கொண்டு தம் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார்கள். மாநகர சபை மேயர் குறிப்பிட்டதைப் போன்று விரைவில் அம்மக்கள் சுதந்திரமாக நீரைப் பெற்றுக் கொள்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
நா. ராஜா (irukkiram)
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply