அரசு – கூட்டமைப்பு பேச்சுவார்த்தை தீர்வுக்கு சிறந்த தளம்

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான பேச்சுவார்த்தை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குச் சிறந்த களமாக அமையுமென தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, இவ்விடயத்தில் லங்கா சம சமாஜக் கட்சி தமது பூரண ஆதரவினை எப்போதும் வழங்கத் தயாராகவுள்ளதெனவும் தெரிவித்தார்.

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் லங்கா சம சமாஜக் கட்சியின் சார்பில் கருத்துத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எதற்கு நேரடி தீர்வு காண்பது எதற்கு திருத்தங்களைக் கொண்டு வருவது போன்ற விடயங்கள் பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்மானிக்க முடியும். அதனால் பேச்சுவார்த்தைகள் மூலம் கருத்துக்கள் பரிமாறப்படுவது இதில் முக்கியம் பெறுகிறது. அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் நடைமுறைப்படுத்தலில் அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இதற்கும் கூட பேச்சுவார்த்தை மூலமே தீர்மானமொன்றை எட்ட முடியும்.

பேச்சுவார்த்தை மூலமே ஒரு சிறந்த அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்பது லங்கா சம சமாஜக் கட்சியின் முழுமையான நம்பிக்கை. அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் தீர்வு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களையும் திருப்திப்படுத்துவதாக அமைய வேண்டும்.

சர்வ கட்சிக் குழுவைக் கூட்டி அரசியல் தீர்வொன்றுக்கான அடித்தளத்தை எம்மால் இட முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்ததாகவே அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமான பேச்சுவார்த்தையைக் குறிப்பிட முடியும்.

அதனோடிணைந்ததாக தற்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு பற்றி பேசப்படுகிறது. இப்பிரச்சினை தீர்வுக்கு அது மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கும் என நாம் நம்புகிறோம்.

அரசு – தமிழ்க் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையானது சகல பிரச்சினைகள் தொடர்பிலும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு சிறந்த தளமாகவுள்ளது. கருத்துக்கள் பரிமாறப்படும் போதே தீர்வுகளைப் பெற அது வழிவகுக்க முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடர்வதோடு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து செயற்பட வேண்டும். இந்த இரு விடயங்களிலுமே லங்கா சம சமாஜக் கட்சி தமது பூரண ஆதரவினை வழங்கும் எனவும் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply