காணி பொலிஸ் அதிகாரப் பகிர்வுக்கு மலையகத் தலைமைகள் ஆதரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசு பேச்சில் இழுபறி நிலையை எட்டியுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்காமல், இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று அமைய முடியாது என்று மலையகத் தமிழ் அரசியல் வாதிகளும் வலியுறுத்தி உள்ளனர். எனவே அந்த அதிகாரங்களை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

77 சதவீத சிங்கள அரசியல் வாதிகளை திருப்திப்படுத்த முயலும் ஜனாதிபதி, 23 சதவீத தமிழ் அரசியல்வாதிகளின் எண்ணங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முழுமையான அதிகாரங்களை வழங்காவிட்டாலும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கி விரைவில் பிரச்சினையைத் தீர்க்குமாறும் அவர்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவது தொடர்பாக மலையக அரசியல்வாதிகள் கூறிய கருத்துகள் வருமாறு:

இராதாகிருஷ்ணன் எம்.பி.
மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் கட்டாயம் வழங்கப்படவேண்டும். முழுமையாக வழங்கப்படாவிட்டாலும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்குவதற்குத் தயாராகவேண்டும்.

மேற்கூறப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படும் பட்சத்திலேயே தீர்வை நோக்கி நகரமுடியும் என்பதுடன், முழுமையானதொரு தீர்வுக்கு அது வழிசமைக்கும்.

77 சதவீத சிங்கள அரசியல் பிரமுகர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் ஜனாதிபதி, தமிழ் அரசியல்வாதிகளின் அபிலாஷைகளையும் புரிந்துகொள்ளவேண்டும் எனக் கூறினார் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன்.

திகாம்பரம் எம்.பி.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் பட்சத்திலேயே இனப்பிரச்சினை முழுமையாகத் தீரும். இவை உள்ளடக்கப்படாது தீர்வு வழங்கப்பட்டால் மீண்டும் பிரச்சினைகள் எழக்கூடிய சாத்தியமுள்ளது.

தமிழர் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாததன் காரணமாகத்தான் வெளியாரின் தலையீடுகள் அதிகரிக்கின்றன.

மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டு, தீர்வு காணப்படவேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து எனக் கூறினார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பழனியாண்டி திகாம்பரம்.

வேலாயுதம்
மாகாண ஆட்சிக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் அதில் எவ்விதப் பயனுமில்லை. 13ஆவது அரசமைப்பில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 13ஆவது அரசமைப்பை ஏற்றுக்கொண்டுள்ள அரசு, அதனை ஏன் நடைமுறைபடுத்துவதற்கு மறுக்கின்றது?
எனவே, மேற்கூறப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டேயாக வேண்டும். இப்படிக் கூறினார் இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ஐ.தே.கவின் ஊவா மாகாணசபை உறுப்பினருமான வேலாயுதம்.

இராஜரட்ணம்
மாகாணசபைகளுக்குக் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால்தான் நாட்டில் சுமுகமானதொரு நிலை ஏற்படும். மேற்கூறப்பட்ட அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு அவசியம் என்பதே எனது கருத்தாகும்.

வெளிநாடுகளில் மாநிலங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இங்கும் வழங்கப்பட்டால் நாட்டில் முழுமையானதொரு அமைதி ஏற்படும் எனக் கூறினார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய மாகாணசபை உறுப்பினரும், மத்திய மாகாண தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளருமான இராஜரட்ணம்.

அதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக தேசிய காங்கிரஸ் உட்பட மலையகத்தின் முக்கிய சில கட்சிகளின் அரசியல் பிரமுகர்கள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply