ஏகதலைமைத்துவம் என்ற விடாப்பிடியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கி வர வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய பின்னர் நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் நிலைப்பெறச் செய்து, மக்களின் வாழ்க்கையில் புதியதோர் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்லெண்ணத்தை நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சகல தமிழ் அரசியல் கட்சிகளும் தேசப்பற்றுடன் ஒத்துழைக்க வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும், ஈ. பி. டி. பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தினகரன் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றில் வலியுறுத்தினார்.

அந்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்ததாவது; கடந்த 30 ஆண்டு காலமாக துன்பத்திலும், துயரத்திலும் மூழ்கி கண்ணீர் மல்க வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு இன்றைய சமாதான சூழலில் சுதந்திரக்காற்றை அனுபவிக்கும் அரியதோர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை தமிழ் மக்களும், தமிழ் கட்சிகளும் கைநழுவ விடக்கூடாது.

சாதனை வீரரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்நாட்டு மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

அதற்கு அடுத்தபடியாக நாட்டு மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்நோக் கியிருக்கும் இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நியாயபூர்வமான நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் தங்கள் பூரண ஆதரவை அளிப்பது அவசியம்.

ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் இருக்கின்ற போதிலும் நாட்டு மக்களின் பிரதிநிதிகள் அனைவரது அங்கீகாரத்துடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற உயரிய நோக்கத்துடன் ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்தத் தெரிவுக்குழுவில் நாட்டு மக்கள் அனைவரின் பிரதிநிதிகளுக்கும் உறுப்பினர்களாக கலந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்படும்

ஜனாதிபதி நியமிக்கவிருக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இதுவரை காலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பிரதிநிதிகளின் பெயர்களை முன்மொழியாமல் தயக்கம் காட்டி வருவது, நாட்டில் உண்மையான சமாதானத்தை விரும்பும் மக்கள் அனைவரையும் வேதனையில் ஆழ்த்துகிறது.

கடந்த காலத்தில் நடைபெற்ற துன்பகரமான நிகழ்வுகளை நாம் மறந்து, எமது மக்களின் மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வது அவசியம். தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் தாங்கள் மாத்திரமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற நிலையில் இருந்து இறங்கி, நாமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வது அவசியமாகும்.

அதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுக்குமிடையில் பாராளு மன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்வது பற்றிய ஒரு பொது உடன்பாட்டை ஏற்படுத்தி, இந்த தெரிவுக்குழுவின் ஊடாக தமிழர் பிரச்சினைக்கு நியாயபூர்வ மான சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை ஏற்படுத்த முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையில்லை, பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நாம் கலந்து கொள்ள தயார் இல்லை என்ற பிடிவாதப் போக்கை கடைப்பிடித்து வந்தால் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை காணமுடியாமல் போகும்.

கடந்த 30 வருடங்களாக இருந்தது போன்றதொரு நிலைமை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஜனாதிபதி நீட்டும் நேசக்கரத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான நாம் இறுக்கமாக பிடித்து, அவருடன் நியாயபூர்வமான வாதங்களை முன்வைத்து இந்தப் பிரச்சியை சமாதானமாக தீர்த்துக் கொள்வது அவசியம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply