இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளோம்: சீனா
இந்தியாவுடன் இருதரப்பு, ராணுவ ரீதியான உறவை வலுப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளோம். அதற்கான நடவடிக்கையை முனைப்பாக மேற்கொள்வோம் என்று சீனா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
சீனாவின் அரசு செய்தி நிறுவனமான ஜிங்குவாவுக்கு பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் லியூ ஜென்மின் இதைத் தெரிவித்தார். அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்துள்ள விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலையில் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாக சீனாவின் வெளியுறவு துணை அமைச்சர் லியூ ஜென்மின் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
அவர் மேலும் கூறியது: இரு நாடுகளுமே பரஸ்பரம் உறவை வலுப்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டும். இரு நாட்டு உறவை மேம்படுத்த இரு நாடுகளின் தலைவர்கள் ஏற்கெனவே பல ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளனர். இவற்றை தொடர்ந்து செயல்படுத்த இரு நாடுகளும் முனைப்பு காட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையே பல தருணங்களில் உரசல் ஏற்பட்டிருக்கலாம். அதை இரு நாடுகளும் மறந்துவிட வேண்டும். வரும் காலங்களில் எப்படி பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தி அதன் மூலம் உறவை வலுப்படுத்துவது என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்றார் லியூ ஜென்மின்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply