கேள்விக்குறியாகும் இன்றைய கல்வி
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் நாளைய இளைஞர்கள் பெரும் பங்காற்றவுள்ளனர். இவர்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். பாடசாலையை பொறுத்தமட்டில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் இந்த பொறுப்பை வகிக்கின்றனர்.
அண்மையில் வெளியாகியிருந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் பெரும் குளறுபடியாக அமைந்திருந்தமை அனைவரும் அறிந்த விடயமே. பல மாணவர்கள் தமது பெறுபேறுகள் மாற்றமடைந்து வெளிவந்திருந்தமையையிட்டு பெரிதும் குழப்பமடைந்திருந்தனர்.
இவ்வாறான கவனயீனமான பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாக கஷ்டப்பட்டு தமது பெற்றோரின் செலவில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் தன்னம்பிக்கையை இழப்பதுடன், தொடர்ந்தும் தமது உயர்கல்வியை தொடர்வதா, பல்கலைக்கழகம் செல்லும் கனவு நனவாகவில்லையே எனும் குழப்பத்துக்கும் ஆளாகிறார்.
இந்த நிலையானது சமூக பிரச்சனையாக கூட மாற்றமடையக்கூடியது. இவ்வாறான ஒரு தவது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுவது இது முதற்தடவையல்ல. இதற்கு முன்பும் சுமார் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் இடம்பெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கூட வினாக்களில் தவறுகள் இடம்பெற்றிருந்தமை பின்னர் கண்டறியப்பட்டிருந்ததுடன் பலரின் விமர்சனங்களுக்கும் ஆளாகியிருந்தது. இவ்வாறு சட்ட மன்றக்கல்லூரிக்கான தெரிவு பரீட்சை திருத்துவதிலும் தவறுகள் இடம்பெற்றிருப்பதாக பரீட்சைக்கு தோற்றிய பலர் சுட்டிக் காட்டியிருந்தனர்.
இவ்வாறு அரசாங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பரீட்சைகளில் முறைகேடுகள் மற்றும் தவறுகள் இடம்பெறுகின்றமையானது, வரவேற்கத்தக்க ஒரு விடயமல்ல. ஆசியாவின் ஆச்சரியமாக திகழும் நோக்கில் செயற்படும் அரசின் சில அமைச்சுக்கள் தூர நோக்கில் சிறந்த வழிகாட்டலுடன் செயற்படுகிறது. ஆயினும் பிரதான அமைச்சுக்களில் ஒன்றான கல்வி அமைச்சில் இது போன்ற சில பொறுப்பற்ற செயற்பாடுகள் எந்த விதத்திலும் வரவேற்கத்தகுந்த விடயமாக அமையாது. ஜனாதிபதி இந்த தவறுகள் குறித்து ஆராய்வதற்காக ஆய்வுக்குழுவை நியமித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இந்த ஆய்வுக்குழுவின் பரிந்துரைகள் நீண்ட கால நோக்கம் கொண்ட நாட்டின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டதாக பக்கசார்பற்றதாக அமைந்திருப்பது கட்டாயமாகும்.
மற்றொரு விடயமாக இரத்மலானை இந்து கல்லூரியின் அதிபர் நியமனம் குறித்த பிரச்சனை சூடுபிடித்திருந்தது. மதத்தை காரணம் காட்டி புதிதாக நியமனம் பெற்ற அதிபரை பொறுப்பேற்க விடாமல் தவிர்க்க சிலர் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தனர். இதில் முன்னாள் அதிபரின் பாரியாரும் முக்கிய பங்காற்றியிருந்ததாக அறிந்து கொள்ள முடிந்தது. அதிபர் தரமற்ற ஒரு சாதாரண ஆசிரியர் அதிபரின் பொறுப்புகளை எப்படி வகிப்பது? இதை கருத்தில் கொண்டே கல்வி அமைச்சின் மூலம் இந்த அதிபர் நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
பாடசாலை நிர்வாகத்தை மேற்பார்வை செய்வதாக கூறும் வித்தியா விருத்திச் சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஒரு அங்கமாக செயற்படுகின்றமை பலர் அறிந்தது. இந்த சங்கத்தின் செயலாளர் தாம் பாடசாலை விடயங்களில் அரசியல் தலையீடுகளை ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என கருத்து வெளியிட்டிருந்தார்.
அப்படியாயின் முன்னைய அதிபர் கடமையாற்றிய காலத்தில் ஆசிரியர்களையும் மாணவர்களையும், அரசின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு வலுக்கட்டாயமாக வரச்செய்திருந்தமை போன்ற விடயங்கள் எந்தளவு பாரதூரமான விடயங்கள் என்பதை எவரும் சிந்தித்திருக்கவில்லை. அரசியல் யாப்பு சட்டதிட்டங்களுக்கு அமைவாக பாடசாலை மாணவர்களையும், அரச துறையை சார்ந்தவர்கள் எவரையும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என ஏன் சட்டத்தரணியான இந்த செயலாளருக்கும், அனுபவம் வாய்ந்த முன்னாள் அதிபருக்கும் தெரிந்திருக்கவில்லை?. இனிவரும் காலங்களிலாவது, கல்வித்துறையில் காணப்படும் இது போன்ற குளறுபடிகள் சீர்செய்யப்பட்டு நாளைய தலைமு முறையாக நேர்த்தியாக தயார்ப்படுத்த சகலரும் பொறுப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.
: ஆசிரியர் கருத்து (பிஎன்தமிழ் இணையம்)
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply