முல்லை பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் மீளிணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டில் 81 மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகியமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 67 பேர் மீண்டும் பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
எஞ்சியுள்ள 14 பேரும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களாக காணப்படுவதால் இவர்களை முல்லைத்தீவு தொழில்நுட்பக் கல்லூரியில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் மேற்கொண்டு வருவதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலக அதிகாரிகள் கிராமங்கள் தோறும் சென்று பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை கண்டறிந்து இவர்களை மீண்டும் பாடசாலைகளில் இணைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதம் சிலாவத்தை தியோநகர், தீர்த்தக்கரை ஆகிய பகுதிகளுக்கு சென்ற தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலக அதிகாரிகள் பாடசாலையிலிருந்து இடைவிலகிய 40 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை மீண்டும் பாடசாலையில் இணைத்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
மீன்பிடித் தொழிலைக் கொண்டுள்ளவர்களின் பிள்ளைகள் கற்றல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாது தொழிலில் ஈடுபடுவதையே ஆர்வமாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு தொழில் மற்றும் வருமானம் ஈட்டுவதே குறிக்கோளாகவுள்ளது. அத்துடன், பெற்றோருக்கு கல்வி சார்ந்த அறிவின்மை, அலட்சியப்போக்கு ஆகியவை காரணமாகவும் பிள்ளைகள் கல்வியில் நாட்டம் காட்டாதுள்ளனர் எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டில் 15 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பங்களே இடம்பெற்றுள்ளதாகவும் 2010ஆம் ஆண்டை விட இது சற்று குறைவடைந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply