கருணை உள்ளத்துடன் எங்கள் பிள்ளைகளை மன்னித்து விடுதலை செய்க
அங்கவீனர்களாக சிறையில் வாடும் தமது பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்கள். தமது பிள்ளைகள் எந்தவித நீதி விசாரணை இல்லாமல் வருடக்கணக்காக சிறையில் வாடுவதையிட்டும் அவர்கள் தமது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இது தொடர்பாக அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இன்று வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
‘கடந்த மூன்று தசாப்தகாலமாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்குள் கொண்டுவரப்பட்டு இன்று வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல மாவட்டங்களிலும் தேசியப் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலற்ற சூழ்நிலையே காணப்படுகிறது.
மேலும் இந்த கொடிய யுத்தத்தினால் கண், கால், கைகளை, இழந்தும் இடுப்போடு உணர்ச்சிகளை இழந்த நிலையிலும் எங்களுடய பிள்ளைகளும் உறவினர்களும் தாங்கமுடியாத துன்பங்களோடு சிறையில் வாடுகின்றார்கள்.
இவர்களை ஏனைய சக கைதிகளுடன் ஒன்றாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறதால் இவர்கள் ஏனைய கைதிகளால் மன வெறுப்புக்குள்ளாக வேண்டிய துர்ப்பாக்கிய சூழலுக்குள்ளாகிறார்கள். இட வசதியற்ற காரணத்தால் இவர்கள் தங்களுடைய அடிப்படையிலான தேவைகளைக்கூட செய்ய முடியாமல் தவிக்கின்றார்கள்.
எங்களுடய பிள்ளைகள் சிலருக்கு காயங்கள் கூட இன்னும் சரியாக குணமடையாததால் இன்னும் காயங்களிலிருந்து இரத்தம், ஊணம் வடிந்த வண்ணம் இருக்கின்றது. ஒழுங்கான முறையிலே இவர்களுக்கான மருத்துவ வசதிகள் இல்லாததால் இவர்கள் மேலும் மேலும் நோய்களால் துண்பப்படுகிறார்கள். சி.ஆர்.பி., நியூமகசின், வெலிக்கடை பெண்கள் பிரிவு, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற சிறைகளில் எங்களுடய பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
இவர்களில் அனேகமானவர்கள் இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதியினை நம்பி படைத்தரப்பினரிடம் சரணடைந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதி யுத்தத்தில் சரணடைந்த குறிப்பிட்ட ஒரு தொகுதி முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு அளித்து அவர்களை சமுக மயப்படுத்தியுள்ளீர்கள். இது எங்களுக்கும் மிக மிக மகிழ்ச்சியினை தந்திருக்கின்றது. இருந்தாலும் இதுபோன்று எங்களுடய பிள்ளைகளையும் நீங்கள் விடுதலை செய்யும் போதுதான் எங்கள் அனைவருடய மனங்களிலும் முழுமையான சந்தோசங்களை காணமுடியும்.
இதற்கு முன்பு நாங்கள் பல தடவை நீதிமன்றங்களிலும், இது சம்பந்தமான அரச அதிகாரிகளுடனும் பல முறை தெரிவித்திருந்தும் எந்தப் பலனும் எங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை.
அங்கவீனத்துடன் சிறைக்குள் வாடித் தவிக்கின்ற எங்களுடய பிள்ளைகளையும் உறவுகளையும் இப்புத்தாண்டிலாவது எங்களோடு சேர்ந்து வாழ்வதற்கு ஓர் சந்தர்ப்த்தை வழங்குங்கள்.
கருணை உள்ளத்துடன் எங்கள் பிள்ளைகளை மன்னித்து அனைவருடய மனங்களிலும் நிரந்தரமான சமாதானத்தையும் சந்தோசத்தையும் வழங்குமாறு மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்’ என இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியாக பெற்றோர், உறவினர்கள் இக்கடிதத்தை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்தனர். இதன் பிரதி ஒன்று இலங்கையின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply