மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை

இந்தியா என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியமாகும். அதாவது இந்தியாவின் எல்லை என்பது அனைத்து மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியதாகும். பின்னர் இதனுடன் யூனியன் பிரதேசங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவ்வாறு மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை.

தயவுசெய்து நினைவில் கொள்க. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. எனவே மாநிலங்களின் நலன்களைப் பாதிக்கக்கூடிய விதத்தில், மாநிலங்களுக்கு எதிராக ஒரு சட்டம் உருவாக்க முயற்சித்தீர்களானால், அது இந்தியாவின் நலனுக்கே எதிரானதாகப் போகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் 29ம் திகதி லோக்பால் சட்டமுன்வடிவு பரிசீலனைக்காகவும், விவாதத்திற்குப் பின் நிறைவேற்று வதற்காகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது;

‘‘லோக்பால் சட்டமும் லோக் அயுக்தா சட்டமும் வலுவானதாக அமைந்திட வேண்டும். நான் முன்பே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப்போல நாம் ஒரு பக்குவமான ஜனநாயக அமைப்பைக் கொண்டிருக்கிறோம். அதனை உறுதி செய்யக்கூடிய விதத்தில் அவை அமைந்திட வேண்டும். அரசாங்கம் கொண்டு வந்திருக்கிற சட்டமுன்வடிவிலும், அன்னா ஹசாரே குழுவினர் கொண்டுவந்துள்ள ஜன்லோக்பால் சட்டமுன்வடிவிலும் உள்ள நல்ல அம்சங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு புதியதொரு சட்டமுன் வடிவை உருவாக்கிட வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின் ஜீவநாடி உயர்த்திப்பிடிக்கப்படக்கூடிய வகையில் அது அமைந்திட வேண்டும்.

நம் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை என்ன கூறுகிறது? ‘‘பாரத் எனப்படும் இந்தியா என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியமாகும். அதாவது இந்தியாவின் எல்லை என்பது அனைத்து மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியதாகும். பின்னர் இதனுடன் யூனியன் பிரதேசங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவ்வாறு மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. தயவுசெய்து நினைவில் கொள்க. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. எனவே மாநிலங்களின் நலன்களைப் பாதிக்கக்கூடிய விதத்தில், மாநிலங்களுக்கு எதிராக ஒரு சட்டம் உருவாக்க முயற்சித்தீர்களானால், அது இந்தியாவின் நலனுக்கே எதிரானதாகப் போகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே, நாட்டின் நலன்களைப் பாதிக்கும் எதையும் செய்யாதீர்கள். நம் அரசமைப்புச் சட்டத்தின் ஜீவநாடிக்கு எதிராக – அதாவது இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மறுதலிக்கக்கூடிய வகையில் – எதையும் செய்யாதீர்கள்.

நாம் ஓர் உயர்ந்த அரசமைப்புச் சட்டத்தைப் பெற்றிருக்கிறோம். அமெரிக்க அதிபர் ஒபாமா இங்கே வந்து நம் நாடாளுமன்றத்தில் பராமரிக்கப்படும் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திடும்போது, ‘‘உலகின் மாபெரும் நாட்டிற்கு, உலகின் மிகப்பழைய ஜனநாயக நாட்டின் வாழ்த்துக்கள்’’ என்று எழுதி கையொப்பமிட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அமெரிக்காவில், அவர் பிறந்த பின்னர்தான் அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது என்பதை அப்போது அவருக்கு நாம் நினைவுபடுத்த முயற்சித்தோம். ஆனால், நாம் சுதந்திரம் பெற்ற உடனேயே நாட்டில் வயது வந்த அனைவருக்கும் ‘‘ஒருவர் – ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு’’ என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நம் அரசமைப்புச்சட்டத்தின் தந்தை அம்பேத்கார் கூறினார்.

ஆனாலும் அவர், ‘‘ஒரு மனிதனுக்கு ஒரு மதிப்பு’’ இன்னும் கொடுக்கவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் கூறிப் புலம்பினார். நாட்டில் உள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு வசதிகளை அளிக்காதவரை நாம் நம் அரசமைப்புச் சட்டத்தின் ஜீவநாடியை முழுமையாக நிறை வேற்றியதாகக் கூறுவதற்கில்லை.

இந்தியா என்பது மாநிலங்களை உள்ளடக்கிய ஓர் ஒன்றியமாகும். எனவே இச்சட்டமுன்வடிவின் கூட்டாட்சித் தன்மை முதலில் சரிப்படுத்தப்பட வேண்டும். மாநிலங்களுக்கு லோக் அயுக்தா சட்டம் தேவை என்று நாம் கூறுகிறோம். இது தொடர்பாக இச்சட்டமுன்வடிவில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில சட்ட மன்றப் பேரவை பரிசீலிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதனைச் செய்திட வேண்டும். இது தொடர்பாக தரப்பட்டிருக்கும் திருத்தங்களை முறையாக அரசு இணைத்திட வேண்டும்.

இதற்காக ஒரு முன்மாதிரி சட்ட முன்வடிவை உருவாக்குங்கள். அவற்றை மாநிலங்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பி வையுங்கள். அவர்கள் லோக் அயுக்தா சட்டமுன்வடிவை உருவாக்கிக் கொள்ளட்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் அயுக்தா சட்டம் இருக்க வேண்டும் என் பதைக் கட்டாயமாக்கிட வேண்டும். ஆனால் எப்படி? என்ன முறையில்?

மத்திய-மாநில உறவுகள் சீர்கேடு அடையாதவிதத்தில், மாநில சட்டமன் றங்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய விதத்தில் அது அமைந்திட வேண்டும். நம் அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு அளித்துள்ள உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய விதத்தில் அது அமைந்திட வேண்டும்.

அடுத்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பது தடை செய்யப்பட வேண்டும். அரசியலில் ஊழல் உருவாவதற்கான மூலக் காரணம் இதுதான். எனவே கார்ப்பரேட்டுகளையும் அந்நிய நாடுகளிலிருந்து உதவி பெறும் அரசு சாரா நிறுவனங்களையும் இதன் அதிகாரவரம்பெல்லைக்குள் கொண்டு வர வேண்டும். இதனை நீங்கள் செய்யவில்லை என்றால், இந்தச் சட்டமுன் வடிவை உங்களால் வலுவான ஒன்றாக மாற்றிட முடியாது.

அடுத்து ஒரு முக்கியமான அம்சம், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) தொடர்பானதாகும். மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும். சுதந்திரம் என்றால், அரசின் கட்டுப்பாட்டிலிருந்து சுதந்திரம். அதே சமயத்தில் அது பதில்சொல்லக்கூடிய விதத்திலும் அமைந்தி ருக்க வேண்டும். அது தன் இஷ்டத்திற்கு செயல்படலாம் என்று நாங்கள் எப்போதுமே சொன்னதில்லை. எனவே அதன் இயக்குநர்கள் ஓர் குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட நடவடிக்கை எடுத்திட முன்வருவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.

நாட்டின் உயர்மட்டத்தில் நிலவும் ஊழல்கள் குறித்துப் புலனாய்வு செய்திட லோக்பால் அமைப்பே முன்வருவது என்பது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் எந்தப் புலனாய்வு அமைப்பையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. லோக்பால் அமைப்பே புலனாய்வும் மேற்கொள்ளும் என்பது சரியல்ல. இது சரிசெய்யப்பட வேண்டும். இல்லாவிடில் லோக்பால் என்னும் அமைப்பே வலுவற்றதாகிவிடும்.

மத்தியப் புலனாய்வுக் கழகம் எப்படியெல்லாம் அரசாங்கத்தால் துஷ்பிரயோகமாக உபயோகப்படுத்தப்பட்டன என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைச் சொல்ல முடியும்.

சிபிஐ, ஊழல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் தொடர்பான அனைத்து அம்சங்களும் லோக்பால் சட்டத்தின் அதிகார வரம்பெல்லைக்குள்ளும், கண்காணிப்பிற்குள்ளும் கொண்டுவரப்பட வேண்டும். இது தொடர்பாக நாங்கள் துல்லியமான திருத்தங்களைக் கொடுத்திருக்கிறோம்.

லோக்பால் சட்டம் வலுவானதாக அமைந்திட நாங்கள் முன்வைத்துள்ள திருத்தங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்திருத்தங்கள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு ஒரு வலு வான லோக்பால் சட்டத்தை நிறை வேற்றி, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ள அனைவருக்கும் இப்பிரச்சனையில் நாடாளுமன்றம் தன் பொறுப்பை செம்மையாக நிறைவேற்றி இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply