நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு தமிழ்க் கூட்டமைப்பு விமர்சனம்
இலங்கைப் போருக்குப் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டது.
போர்க்கால குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து இலங்கை அரசை விடுவிக்கும் முயற்சியாகவே இந்த விசாரணை அறிக்கையை நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது.
எனவே, இலங்கைப் போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பில் நியாயம் கிட்ட வேண்டுமானால் சர்வதேச மட்டத்திலான விசாரணையொன்றை நடத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் அந்தக் கட்சியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் படிமுறைகளும் நடைமுறைகளும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்லத் தவறிவிட்டதாகவும், அவை சர்வதேச நியமங்களை பின்பற்றியிருக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.
அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித ஏற்பாடுகளும் இருக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
‘ஆணைக்குழுவின் அணுகுமுறை அடிப்படையிலேயே பிழையானது: தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் சாட்சிகளை ஆணைக்குழு பயன்படுத்திக் கொண்டுள்ளது, உண்மைத் தகவல்களுக்கு ஏற்ப சட்டம் பிரயோகிக்கப்படவில்லை’ என்றும் ஆணைக்குழு தொடர்பில் பிபிசி தமிழோசையிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply