பேச்சுவார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் தேவை
இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், கொழும்பில் செவ்வாய்க் கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், நேர்மையான அரசியல் மீள் இணக்கப்பாட்டை எட்டும் நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபடும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் அவற்றை நடைமுறைப்படு்த்த வேண்டும் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா ஊடகவியலாளர்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.
அரசியல் தீர்வுத்திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு ஆக்கபூர்வமான வேகமான அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி அரசியலமைப்பின் 13ம் திருத்தத்துடன் இன்னும் சில ஏற்பாடுகளையும் சேர்க்கும் ஒரு அதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு சம்மதம் என்று தன்னிடம் கூறியதாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
நான்கு நாள் விஜயமாக திங்கட்கிழமை இலங்கை சென்ற எஸ்.எம்.கிருஷ்ணா, தெற்கிலும் வடக்கிலும் இந்திய முதலீட்டில் நடந்துவரும் வேலைத்திட்டங்களையும் சென்று பார்வையிடவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply