இலங்கைக்கு பல வழிகளிலும் இந்தியா உதவிகளைச் செய்துவருகின்றது
இந்தியா இலங்கைக்கு பல வழிகளிலும் உதவிகளை செய்துவருகின்றது என யாழ் இந்திய துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்தார். சர்வதேச வர்த்தக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியா மீள் நிர்மானம், மற்றும் மீள் புனரமைப்பு வழிகளில் உதவிசெய்கின்றது. அவற்றில் வீட்டுத்திட்டம் மிகப்பெரும் உதவியாக அமைந்துள்ளது. இவ்வீட்டுத் திட்டத்தில் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட இருக்கின்றது.
இலங்கைக்கு இந்தியாவின் உதவிகள் மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது முன்னிலையில் உள்ளது. உட்கட்டுமான வேலைகளுக்கு 270 மில்லியன் அமெரிக்க டொலர், புகையிரதப் பாதை அமைப்பிற்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர், காங்கேசன்துறை துறைமுகத்தில் உடைந்த கப்பல்களை அகற்றும் பணிகள் 200 மில்லியன் ரூபா செலவில் நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
இத்துறைமுகப் புனரமைப்பின் மூலம் இலங்கையின் பொருளாதார நடவடிக்கைக்கு உதவியாக அமையும் எனத் தெரிவித்த இந்திய துணைத்தூதுவர்,பலாலி விமான நிலையம் சிவில் போக்குவரத்திற்காக புனரமைக்கப்படவிருக்கின்றது. இதன் மூலம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்தை மேற்கொள்ள முடியும்.
தொழிற்சாலைகளின் அபிவிருத்தியில் முக்கிய அம்சமாக அச்சுவேலி கைத்தொழில்பேட்டை 30 வருடங்களுக்கப் பின்னர் புனரமைப்பு மேற்கொள்ளப்பட இருக்கின்றது. இதன் மூலம் 40 தொழிற்சாலைகள் இயங்கக் கூடியதாக அமைகின்றது.
வடமாகாண மாணவர்களின் விளையாட்டுச் செயற்பாடுகளுக்காக யாழ் துரையப்பா விளையாட்டரங்கு நவீன மயப்படுத்தப்பட உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளில் முதற்தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இச் துவிச்சக்கர வண்டிகளை வழங்குபவர்களிடம் வவுனியாவில் துவிச்சக்கர வண்டியைப் பொருத்தும் நிலையத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதன் மூலம் பலர் தொழில்வாய்ப்பை பெறமுடியும். அத்துடன் யாழ் கலாச்சார நிலையம் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்படவிருப்பதாக இந்திய துணைத்தூதுவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply