யுத்தம் நடந்த பகுதிகளில் இப்போது என்ன நடக்கிறது
விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்தபின், அந்த போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது என்ன நிலையில் உள்ளார்கள்? பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வெவ்வேறு வழிகளில் வழங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
அவை எந்தளவுக்கு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதாரண வாழ்க்கையை பெற்றுக் கொடுத்திருக்கிறது? இல்லது, பெற்றுக் கொடுக்க முடிந்திருக்கிறதா?
ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகளான பின்னரும், வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை என்பதே நிஜம். அதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், 25 ஆண்டுகால யுத்தத்தால் தலைகீழாக மாற்றப்பட்ட வாழ்க்கையை, இரண்டரை ஆண்டுகளில் முழுமையாக இயல்பு நிலைக்கு கொண்டுவரும் மந்திரம் யாரிடமும் இல்லை.
சில அமைப்புக்களும், தனிப்பட்டவர்களும் வெளியேயிருந்து குரல் மட்டும் கொடுக்கிறார்கள். வேறு சிலர் வெத்துக் குரல் கொடுப்பதைவிட உதவி செய்கிறார்கள். 10 பேர் உதவி செய்தால், 100 பேர் அதில் குறை கண்டுபிடித்துச் சொல்ல இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப என்று யாராவது முன்வந்தால், விமர்சித்து கட்டுரை எழுத அதிக ஆட்கள் இருக்கிறார்கள்.
சுருக்கமாகச சொன்னால், கட்டுமான எந்திரங்கள் எழுப்பும் சத்தத்தைவிட, கதை விடுபவர்களின் சத்தம் அதிகம்!
வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் என்பது யார்?
இரு தரப்பில் இருந்தும் பீரங்கிகள் வெடித்தபோது, நடுவே தலையோடு தரையாகப் படுத்து உயிர் தப்பிய ஆட்கள்! தலையை உயர்த்திய குடும்ப உறுப்பினர் கண்முன்னே இறந்து விழுந்ததை பார்த்த ஆட்கள் இவர்கள். இரு தரப்பும் யுத்தத்தை முடித்துக் கொண்ட போது, உடல் மாத்திரம் எஞ்சியவர்கள் புதைக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ விட்டார்கள். உடலில் உயிர் இருந்தவர்கள் இப்போதும் வாழ்கிறார்கள். இவர்களைத்தான் போரில் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறோம்.
இவர்களுக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதற்கே, நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன. நீங்கள் ஸ்ரீலங்கா தொடர்பான செய்திகளை படிக்கும் வழக்கம் உடையவராக இருந்தால், நிவாரணப் பணிகள் என்ன நடைபெறுகின்றன என்ற செய்திகளைவிட, அவற்றை விமர்சிக்கும் அல்லது குறை கண்டுபிடிக்கும் செய்திகளை அதிகமாக படித்திருப்பீர்கள். போரால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெளியே அதுதான் நடக்கிறது. ‘மீடியா நிவாரணம்’ என்று சொல்லலாம்.
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெளி உதவிகள் பெரிதாக இல்லாவிட்டாலும் முடிந்தவரை நிவாரண வேலைகள் நடக்கின்றன. அங்குள்ள மக்கள், வெளியே ஒலிக்கும் காட்டுக் கூச்சல்களை கேட்கும் மனநிலையில் இல்லை. யுத்தத்தால் தொலைத்துவிட்ட வாழ்க்கையை மீண்டும் பழைய ட்ராக்குக்கு கொண்டுவரும் முயற்சியில் உள்ளார்கள். ஆனால், அதற்கான பசிலிடேஷன்தான் குறைவாக உள்ளது.
தொழிற்பயிற்சி பெற்றவர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பருத்தித்துறை கண்காட்சியில்..
இந்திய அரசும், வேறு சில நாடுகளின் அமைப்புகளும் சில கட்டுமானச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அவற்றில் சில ஒழுங்காக நடக்கின்றன. வேறு சில திட்டமிடப்பட்டதைவிட தாமதமாக உள்ளன. ஆனால், இவர்கள் செய்து கொடுப்பது வெறும் பில்டிங்குகளையே.
பிலிடிங் இலவசமாகக் கிடைத்தாலும், அதற்குள் இருக்கப்போகும் ஆட்களின் வாழ்க்கைக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? அவற்றைச் செய்து கொடுக்க பெரிதாக யாரும் முன்வரவில்லை.
யுத்தத்தால் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் கல்வியைத் தொடர வேண்டும். அரசாங்கம் இலவசக் கல்வி கொடுத்தாலும், குழந்தைகளின் உணவு, சீருடை, புத்தகங்கள், போக்குவரத்து என்று பல விஷயங்களுக்கு உதவி தேவை. மிகச் சில அமைப்புகளே இதைச் செய்துகொடுக்க அங்கே உள்ளன. யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அந்த அமைப்புகள் ஊடாகவே உதவிகள் செல்ல வேண்டும் என்பது அங்குள்ள சட்ட நடைமுறை.
குறைந்தபட்சம் அடுத்த 5 ஆண்டுகளுக்காவது அதே நிலைதான் இருக்கப் போகின்றது.
அதை விமர்சித்துக் கொண்டு காலத்தை ஓட்டிவிட்டால், உதவி செய்யாமல் தப்பித்துக் கொள்ளலாம். நிலைமை மாறியபின் உதவி செய்ய வருகிறோம் என்று கதை விட்டுக் கொண்டிருந்தால், 5 வருடங்களின்பின் யாருடைய உதவியும் அவர்களுக்கு தேவைப்படாது! யாவரும் நலம்.
யுத்தத்தில் கல்வியைத் தொலைத்தவர்கள், மற்றும் இடை நிறுத்தியவர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட உதவிகள் கிடைக்கின்றன. நேர்டோ அமைப்பின் பயிற்சி மையங்கள் வன்னியில் ஒட்டிசுட்டான், முளங்காவில், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறையில் இயங்குகின்றன.
கடந்த வாரம், இங்கு பயிற்சியை முடித்துக்கொண்டு 200 பேர் சான்றிதழ்கள் பெற்று வெளியேறியுள்ளனர். வேறு நான்கு பேட்ஜ்கள் அடுத்த 3 மாதங்களில் பயிற்சியை நிறைவு செய்கின்றன. இவர்களுக்கு தொழிற்பயிற்சியும், ஆங்கில மொழிப் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.
நேர்டோ அமைப்பின் தொழிற்பயிற்சி பிரிவினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட்ட ஆங்கில பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயற்சி, கேக் செய்முறை பயற்சி, பயின்ற மாணவர்களில் முதலாவது பிரிவினருக்கான பரீட்சை முடிவடைந்ததை தொடர்ந்து 200 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பொருட்காட்சியும், தைப்பொங்கல் நிகழ்வும் கடந்த 15-ம் தேதி பருத்தித்துறையில் நடைபெற்றது.
பயிற்சி முடித்தால் போதுமா? அதில் வழங்கப்படும் சான்றிதழ் சோறு போடுமா? அவர்களுக்கு வேலை வாய்ப்பு தேவை. தொழில் தொடங்குவதற்கு உதவிகள் தேவை. வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் மிக மட்டுப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகளே உள்ளன. புதிய தொழில்கள் தொடங்க யாரும் முன்வருவதில்லை.
நேர்டோ அமைப்பு தம்மிடம் பயிற்சி பெற்று முடித்தவர்களில் சிலருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளனர். யுத்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் விதவையான பெண்கள் சிலருக்கு அடுத்த மாதம் கிளிநொச்சியில் வேலை வாய்ப்புகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிக தொழில் முயற்சிகள் தொடங்கப்பட்டால்தான் இதற்குமேல் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு வெளி உதவிகள் அவசியம்.
யாரோ தங்களால் முடிந்ததை அங்குள்ள மக்களுக்கு செய்து கொடுக்கிறார்கள். வேறு யாரோ அதில் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். குற்றம் கண்டு பிடிப்பவர்கள், “இதற்கெல்லாம் என்ன அவசரம்? கொஞ்சம் பொறுங்கள், ‘அவர்’ வருவார், ‘இவர்’ வருவார். உங்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்துவிட்டு, அதன்பின் வாழ்க்கை கொடுக்கிறாம்” என்று காதுக்கு குளிர்மையாக சொல்கிறார்கள்.
‘அவர்’ ‘இவர்’ எல்லாம் எப்போது வந்து ஈழத்தைச் சுற்றி சுவர் எழுப்புவார்கள்? சொல்பவர்களிடம் அதற்கு பதில் கிடையாது. ஆனால், சொல்பவர்களுக்கு ‘அவர்’ ‘இவர்’ வருவார்களா? என்ற கேள்விக்கான பதில் நிச்சயம் தெரியும். வெளியே சொல்ல மாட்டார்கள்! அது அவர்களது வயிற்றுப் பிழைப்பு! அதற்காக யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். வாழ்க வளமுடன்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு உள்ளே யாரோ செய்யும் உதவிகளை நீங்கள் திட்ட வேண்டுமா? தாராளமாகத் திட்டுங்கள். அதற்குமுன், “10 தடவைகள் திட்டுவது என்றால், பாதிக்கப்பட்ட 1 குடும்பத்துக்கு உதவி செய்து விட்டுதான் திட்டலாம்” என்று ஒரு சட்டம் கொண்டு வந்திருந்தாலே, போரால் பாதிக்கப்பட்ட பாதி குடும்பங்களுக்காவது நிவாரணம் கிட்டியிருக்கும்!
-பருத்தித்துறை, ஸ்ரீலங்காவிலிருந்து தயாபரனின் குறிப்புகளுடன், ரிஷி (விறுவிறுப்பு)
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply