மூன்று இலட்சம் தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியவர்கள்
1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி. சுமார் அறுநூறு வருடகால வரலாற்றைக் கொண்ட யாழ்ப்பாண நகரம் என்று மில்லாதவாறு அன்று வெற்றிச்சோடிக் காணப்பட்டது. வீடுகளுக்குள்ளும் மக்கள் இல்லை. வீதிகளிலும் மக்கள் இல்லை. புலிகள் இயக்கத்தினர் விடுத்த கடுமையான எச்சரிக்கை மற்றும் மிரட்டல், தாக்குதல் ஆகிய வற்றையடுத்து சுமார் மூன்று இலட்சம் மக்கள் யாழ். நகரத்தைவிட்டு வெளி யேறியிருந்தனர்; வெளியேற்றப்பட்டனர். ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் போன்ற வளர்ப்பு மிருகங்களையெல்லாம் அப்படி அப்படியே விட்டுவிட்டு மக்கள் வெளியேறிவிட்டனர்.
நான்காவது ஈழப்போர் மையம் கொண்டது வன்னிக்குள். மூன்றாவது ஈழப்போர் யாழ்ப்பாணத்துக்குள் மையம் கொண்டது. சந்திரிகா அரசாங் கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த புலிகள் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி திருகோணமலைக் கடற்பரப்பில் வைத்து புலிகள் இரு கடற்படைக் கப்பல்கள் மீது திடீர்த் தாக்குதலை நடத்தினர். இதுவே மூன்றாவது ஈழப் போருக்குப் பிள்ளையார் சுழிபோட்டது.
1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாகப் பதவியேற்றார். ஜனாதிபதி பிரேமதாசா அரசுடன் தேனிலவு கொண்டாடிய புலிகள், சுமார் பதினான்கு மாதங்கள் அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே கிழக்கில் திடீரெனப் பொலிஸ் நிலை யங்களைத் தாக்கி சுமார் அறுநூறு பொலிஸாரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் தமிழ் பொலிஸாரை மட்டும் விடுவித்துவிட்டு ஏனைய சிங்கள, முஸ்லிம் பொலிஸாரை வரிசையாக நிற்கவைத்துப் புலிகள் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பத்தாம் திகதி நடைபெற்றது. இதுவே இரண்டா வது ஈழப் போருக்குக் காரணமாக அமைந்தது.
1987 ஜுலை பிற்பகுதியில் இலங்கை யின் வடக்கு, கிழக்கு பகுதியில் நிலை கொண்ட இந்தியப் படையினர் 1990 மார்ச் இறுதியில் இலங்கையை விட்டு வெளியேறினர். பிரேமதாசா அரசாங் கமும் புலிகளும் இணைந்து மேற் கொண்ட அழுத்தம் காரணமாகவே இந்தியப் படை இலங்கையை விட்டு வெளியேறியது. இந்தியப் படை இலங்கையில் நிலைகொண்டிருந்த போது வன்னிக் காட்டுக்குள் புலிகள் ஓரங்கப்பட்டிருந்தனர். இந்தியப் படை வெளியேறிய பின்னர், வடக்கு, கிழக் கில் கணிசமான பகுதிகளைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். 1994 இல் ஆட்சிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்கவும், ஜனாதி பதி பிரேமதாசாவைப் போல புலிகளுக் குச் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு நேசக்கரம் நீட்டினார். சந்திரிகா அரசு டனும் புலிகள் சமாதானப் பேச்சுகளில் ஈடுபட்டிருந்தனர். சுமார் நூறு நாட்க ளாகச் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த வேளையில்தான் கடற்படைக் கப்பல்கள் மீதான திடீர் தாக்குதலைப் புலிகள் திருகோணமலைக் கடற்பரப்பில் நடத்தினர்.
மூன்றாவது ஈழப்போர் முடுக்கி விடப்பட்டதற்கான கள நிலைகளைப் புரிந்து கொள்வதற்காகவே இந்த முன் னோட்டங்கள் இங்கே தரப்படுகின்றன. சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவ டைந்ததையடுத்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் போர் நடவடிக்கைகளை இலங்கை அரசு ஆரம்பித்தது. 1995 ஜுலையில் கிழக்கு மாகாணத்தின் மணலாறு பகுதியில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் பயங்கர மோதல் இடம்பெற்றது. இம்மோதலில் சுமார் இருநூறு புலிகள் கொல்லப்பட்டனர்.
வடக்கின் அளவெட்டியில் ஜுலை மாதம் 14ம் திகதி படையினருக்கும் புலிகளுக்குமிடையில் பாரிய மோத லொன்று இடம்பெற்றது. புலிகள் தரப்பில் சுமார் அறுபது பேர் கொல் லப்பட்டனர். மோதல்கள், ஷெல் தாக்குதல்கள் அதிகரித்ததால் பெரும் பாலான மக்கள் யாழ்ப்பாணத்தை நோக்கித் தப்பிச் சென்றனர். ஜுலை மாதம் 19ம் திகதி வடக்கில் படையினர் தந்திரோபாய ரீதியாகத் தாக்குதலை நிறுத்தினர். யாழ்ப்பாணத்தைப் புலி களின் பிடியிலிருந்து விடுவித்து அங்கு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதே அரசின் திட்டமாக இருந்தது. மக்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் அவர்களுடன் சுமுக மாகப் பழகும் தந்திரோபாயங்களைப் படையினர் கடைப்பிடித்தனர். மோதல் களின் போது புலிகள் பாரிய இழப்பு களைச் சந்தித்தினர். இதனால் அரச படையினரிடம் ‘துரோகிகள்’ சிலர் தமது செயற்பாடுகளைக் காட்டிக் கொடுத்துவிட்டனர் என்று புலித் தலைமை நம்பியது. சுமார் 29 தமிழர் களைப் புலிகள் கைது செய்து வன்னிக் குக் கொண்டு சென்று சிறைகளில் அடைத்து வைத்தனர். இராணுவத்துக் குத் தம்மைப் பற்றிய தகவல்களை வழங்கினார்களென்று குற்றஞ்சாட்டியே புலிகள் இவர்களைக் கைது செய்தனர். இவர்களில் பாடசாலை அதிபரொரு வரும், முதியவரொருவரும் அடங்குவர். மூக்கு முட்ட மது அருந்தும் வேளை களில் மட்டும் புலிகள் இயக்கத்தினரை தாறுமாறாக இந்த முதியவர் திட்டுவாராம். இது அவர் செய்த குற்றமென்று அவரது நெருங்கிய உறவினர்கள் கூறினர். அக்டோபர் மாதம் பதினைந் தாம் திகதி இந்த 29 பேரையும் புலி கள் வன்னியில் வைத்து சுட்டுக்கொன் றனர். ‘துரோகிகள் சுட்டுக்கொல்லப்பட் டனர்’ என்ற தகவலையும் புலிகள் வெளிப்படையாகவே அறிவித்தனர்.
அக்டோபர் மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் இராணுவம் மீண்டும் படை நடவடிக்கைகளை ஆரம்பித்தது. பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களில் மக்களை தஞ்சமடையுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களை விமானப்படையினர் விமானங்களிலிருந்து கீழே போட்டனர். புலிகள் இருக்கும் இடங்களை நெருங்க வேண்டாமென்றும் மக்களுக்கு அறி வுறுத்தப்பட்டது. ஜுலை மாதத் தாக்கு தல்களில் புலிகள் பாரிய இழப்புகளைச் சந்தித்தால் ஏற்கனவே தமது பல முகாம்களையும் அலுவலகங்களையும் கிளிநொச்சிக்கு இடம் மாற்றியிருந்தனர். ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி இராணுவம் புத்தூரைத் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தது. புத்தூர் மோதலில் 150க்கு மேற்பட்ட தமது உறுப்பினர்களைப் புலிகள் இயக்கம் இழந்தது. மோதலின் உக்கிரத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் பாதுகாப் புத் தேடி தப்பியோடிய மக்கள் சிலர் தம்மோடு கூட்டிச் செல்ல முடியாத நோயாளர்களையும், நடமாட முடியாத வயோதிபர்களையும் கைவிட்டுச் சென்றனர். இவர்களில் பலர் புத்தூர் மிஷன் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தனர். இந்த ஆஸ்பத்திரி மீது ஒன்பதாம் திகதி புலிகள் ஷெல் தாக்குதல்களை நடத்தினர். இச்சம்பவத்தில் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர். இராணுவம் நிலை கொண்டிருக்கும் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு ஏற்கனவே புலிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். தமது உத்தரவை மீறியவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புலிகள் அறிவித்தனர். இந்த மிஷன் ஆஸ்பத் திரிக்கு ஷெல் தாக்குதல்கள் நடத்தப் படுவதற்குச் சில நாட்கள் முன்னதாக இராணுவ அதிகாரிகள் சிலர் விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டி ருந்தனர். இது அரசாங்க தொலைக் காட்சிகளிலும் காண்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் உறுதியான நோக்கோடு அக்டோபர் மாதம் பதினேழாம் திகதி ஒப்பரேசன் ரிவிரச (சூரியக்கதிர்) தாக்குதல் நடவடிக்கையை இராணுவம் ஆரம் பித்தது. மோதல்களுக்கு மத்தியிலும் வெளியேற முடியாமலும் வெளியேற விரும்பாமலும் மக்கள் பலர் தத்தம் வீடுகளிலும் பாதுகாப்பான இடங்களி லும் தங்கியிருந்தனர். ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி அளவில் சுமார் இரண்டு இலட்சத்துக்கு மேற் பட்ட மக்கள் யாழ். குடாநாட்டின் மேற்குப் பகுதியில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்தனர். யாழ்ப்பாண நகரப் பகுதி உட்பட கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்கள், பாடசாலைகள் ஆகியவற்றில் மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். நல்லூர் கந்த சாமி கோயில் வளாகமும் அகதிகளுக் காகத் திறந்துவிடப்பட்டிருந்தது. யாழ் பல்கலைக்கழகத்திலும் மக்கள் தங்கியிருந்தனர்.
ஜுலை மாதம் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது புலிகள் இரண்டாவது தடவையாக மக்களிடமிருந்து ‘பாதுகாப்பு வரி’ என்ற போர்வையில் வலுக்கட்டாய மாக பணம் மற்றும் நகைகளை அறவிட ஆரம்பித்தனர். முதலாவதாக இந்த ‘வரி’ அறவிடல் நடவடிக்கை 1990 இல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒவ்வொரு குடும்பத்தின ரிடமிருந்தும் தலா பத்தாயிரம் ரூபா அல்லது இரண்டு பவுண் நகை அறவிடப்பட்டது. கஷ்டப்பட்ட குடும்பங்களிடமிருந்து கூட இந்தக் கட்டாய வரி அறவிடப்பட்டது. இந்த ‘வரி’ செலுத்தாத சிலரைப் புலிகள் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர். இந்த வரி வாங்கும் நடவடிக்கை சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றது. ஆனால் 1995 ஜுலையில் இடம்பெற்ற வரி வசூலிப்பு நடவடிக்கையின் போது இரண்டாவது தடவையாக தஞ்சமடைந்த குடும்பங்களுக்கு விலக்களிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் குடும்ப அங்கத்தவர்கள் யாராவது இருப்பார்களேயானால் அந்தக் குடும்பங்களிடம் கூடுதல் பணம் வரியாக அறவிடப்பட்து. சுவிற்சலாந்தில் மகளோ அல்லது மகனோ ஒருவர் இருப்பாரேயானால் அத்தகைய குடும்பம் 45 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும். இந்தக் கட்டாய வரி வசூலிப்பு நடவடிக்கை களின் போது இருதய நோயால் பாதிக்கப்பட்டு ஐந்து பேர் வரையில் மரணமடைந்தனர்.
யாழ்ப்பாண நகரம் அகதிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி பின்னேரம் புலிகளின் ஒலிபெருக்கி கள் எச்சரிக்கை அறிவித்தல்களை விடுத்தன. ஒலிபெருக்கி பூட்டிய வாகனங்களில் பல இடங்களுக்குச் சென்ற புலிகள் கீழ்க்கண்ட எச்சரிக்கைகளை விடுத்தனர்.
‘இந்த அறிவித்தலை எவரும் சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு பிசாசுப் படையுடன் நாம் வீரத்துடனும் துரிதமாகவும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறோம். அந்தப் படைகள் பல்வேறு திசைகளிலிருந்தும் எம்மைத் தாக்கும். அதற்கு நாம் அதே பாணியில் பதிலடி கொடுப்போம். இனவெறிக்குள் மூழ்கியிருக்கும் இந்த அரசுக்கு எதிராக, ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாப்பதற்காக நாம் போராடுகிறோம். ஆகையால் யாழ். மக்களே! நீங்கள் இன்றே இரவோடிரவாக தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடம்பெயர வேண்டும்.’
இப்படித்தான் புலிகள் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை அறிவித்தல்களை விடுத்தார்கள். வீடு வீடாகச் சென்றும் மக்களை வெளியேறுமாறு புலிகள் எச்சரிக்கை விடுத்தார்கள்.
‘யாழ்ப்பாண நகரம் விரைவில் யுத்த பூமியாகிவிடும். அதிகாலை நான்கு மணிக்கு நாவற்குழிப் பாலத்தை வெடிவைத்து தகர்க்கப்போகிறோம். அதற்குள் நீங்கள் வெளியேறாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும்.’
இவ்வாறு யாழ் நகர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நள்ளிரவு 12.00 மணியளவில் நாவற்குழிப் பாலத்தைத் தகர்க்கப் போவதாக உடுவில் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது. அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்களை இருக்க அனுமதிக்ககூடாது என்பதே புலிகளின் நோக்கம். ஜுலை மாத இராணுவ நடவடிக்கைகளிலிருந்து தொடர் தோல்விகளைப் புலிகள் சந்தித்து வந்தனர். இதனால் வன்னிப் பகுதிகளுக்குப் பின்வாங்குவதற்காகவே இவ்வாறு மிரட்டல்களை மக்களுக்கு விடுத்தனர். வன்னிக்குப் பின்வாங்கிய பின்னர் அரச படையினர் மீது கெரில்லாத் தாக்குதல்களைத் தொடர்வதற்குப் புலித் தலைமை முடிவெடுத்தது. கெரில்லாத் தாக்குதல்களை நடத்திவிட்டுத் தப்பிச் சென்று பாதுகாப்பாகத் தங்குவதற்கு தளப் பிரதேசம் தேவை. யாழ்ப்பாணம் அரச படையினரின் கைகளுக்குள் சிக்குமென்பது உறுதியாகிவிட்டது. எனவே வன்னிக்கு மக்களை விரட்டிச் சென்று அங்கு தமது தளப் பிரதேசத்தை நிறுவித் தமது நிர்வாகக் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் நோக்குடன்தான் புலிகள் மக்களை மிரட்டி விட்டனர்.
நிலைமைகளைச் சரிவரப் புரிந்து கொள்வதற்கு வட பகுதியின் பூகோள நிலைமைகளைப் புரிந்துகொள்வது அவசியம். நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலப் பரப்பு ‘தீவு’ என அழைக்கப்படுகிறது. மூன்று பக்கங்கள் கடலால் சூழப்பட்ட நிலப்பரப்பு ‘குடாநாடு’ என்று அழைக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் ஒரு குடாநாடு. யாழ் குடாநாட்டுக்கு அண்மித்ததாக அனலைதீவு, மண்டைதீவு, நெடுந்தீவு, எழுவைதீவு, நயினாதீவு உட்பட பல தீவுகள் உள்ளன. 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இத்தீவுகளை இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போதைய இராணுவ நடவடிக்கையின்போது தீவுப் பகுதிகளை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும் தீவுப் பகுதிகளுக்குச் செல்லப் புலிகள் அனுமதிக்கவில்லை.
யாழ். குடாநாட்டின் வட திசையிலுள்ள பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகள் வடமராட்சி என்று அழைக்கப்படுகிறது. குடாநாட்டின் தென்புறத்தேயுள்ள சாவகச்சேரி உள்ளிட்ட பகுதிகள் தென்மராட்சி என்று அழைக்கப்படுகிறது. யாழ். குடாநாட்டையும் வன்னி உட்பட நாட்டின் பெருநிலப் பரப்பையும் இணைப்பதற்கான ஒரேயொரு தரைவழிப் பாதைதான் உண்டு.
நாவற்குழியிலுள்ள தரைவழிப் பாதையே அது. நாவற்குழிப் பாலமே அது. அதனைச் செம்மணிப் பாலமென்றும் அழைப்பதுண்டு. கடலேரியொன்று யாழ். குடாநாட்டையும் நாட்டின் பெருநிலப் பரப்பையும் பிரிக்கிறது. சாவகச்சேரியிலிருந்து மறுமுனையிலுள்ள சங்குப்பிட்டிக்கு வள்ளங்கள் மூலம் கடலேரியைத் தாண்டிச் செல்ல முடியும். இதனால்தான் யாழ்ப்பாணத்திலிருந்து மக்களை மிரட்டி, விரட்டிய புலிகள், தப்பிச் செல்லும் மக்களை மறுமுனையில் கொண்டு சென்று விடுவதற்கு இலவச படகுச் சேவையையும் நடத்தினர்.
அக்காலகட்டத்தில் ‘புலிகளின் குரல்’ என்ற வானொலி சேவையைப் புலிகள் நடத்தி வந்தனர். அன்றோ அதற்குப் பின்னரோ செம்மணிப் பாலத் தகர்ப்புச் சம்பந்தமான மிரட்டலைப் ‘புலிகளின் குரல்’ ஒலிபரப்பவில்லை. அவர்கள் அறிவித்தபடி செம்மணிப் பாலம் தகர்க்கப்படவில்லை.
ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி மாலை ஆறு மணியளவில் கண்டி வீதி மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பீதியடைந்த மக்கள் கால் நடையாகவும் மாட்டு வண்டில்கள், சைக்கிள்கள் மூலமாகவும் யாழ். நகரத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். கையில் அகப்பட்ட பொருட்களை மூட்டை முடிச்சுகளாகக் கட்டிக்கொண்டு மக்கள் அடித்துப் பிடித்து வெளியேறிக்கொண்டிருந்தார்கள். முந்நூறு யார்களைக் கடப்பதற்கு இரண்டு மணித்தியாலங்கள் தேவைப்பட்டன. முத்திரைச் சந்திக்கும் நாயன்மார்க்கட்டுக்கும் கால் மைல் இடைவெளியே இருக்கும். அன்று சில சந்தர்ப்பங்களில் இந்தத் தூரத்தைக் கடப்பதற்கு நான்கு மணி நேரங்கள் பிடித்தன. யாழ் நகரத்தை விட்டு வெளியேறாமல் தங்கியிருக்கும் மக்கள் ‘துரோகிகள்’ என்றும், ‘இராணுவத்தின் ஒற்றர்கள்’ என்றும் புலிகள் மிரட்டியதால் மக்கள் பீதியடைந்திருந்தனர். காணி உறுதிப் பத்திரங்கள், கல்வித் தராதரப் பத்திரங்களைக் கைவிட்டுச் சென்றாலும் புலிகளின் தேசிய பாதுகாப்பு நிதிக்குப் பணம் வழங்கியதற்கான ரசீதை மக்கள் எடுத்துச் செல்ல மறக்கவில்லை.
கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் புலிகளின் கொடூரங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்த யாழ். குடாநாட்டு மக்கள் சிலர் கொதிப்படைந்திருந்தனர். சில இடங்களில் புலிகளின் காவல்துறைக்கும் மக்களுக்குமிடையில் மோதல்களும் இடம்பெற்றன. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரிக்கு இடையிலான சுமார் பத்து பன்னிரண்டு மைல்களைக் கடப்பதற்கு இருபது மணித்தியாலங்கள் சென்றனவென்றால் மக்கள் எத்தனை கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். முப்பதாம் திகதி இரவு ஏற்பட்ட சனநெரிசலில் கிட்டத்தட்ட பத்து பேருக்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். இவர்களில் மூவர் சிறுபிள்ளைகள். ஏனையோர் நோயாளிகளும் வயோதிபர்களுமாவர். மக்கள் வெளியேறிக் கொண்டிருந்த போது மழையும் பெய்து கொண்டிருந்தது. அந்த மழையை மக்கள் வரவேற்றார்கள். ஏனென்றால் அந்த மழை நீரால் தமது வரண்டுபோன நாவை ஈரப்படுத்திக்கொண்டார்கள். குடைகளில் நீரைத் தேக்கி பிள்ளைகளுக்குப் பருக்கினார்கள். நடந்து கொண்டே இதனை அவர்கள் செய்ய வேண்டியிருந்தது.
அக்டோபர் முப்பதாம் திகதி பெருமளவு மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினர். இருந்தாலும் கணிசமான மக்கள் யாழ். நகரத்திலேயே தங்கியிருக்கத் தீர்மானித்திருந்தனர். யாழ். ஆஸ்பத்திரி வளாகப் பகுதி மோதல்களற்ற பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமையும், செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டியின் பிரசன்னமும் சிலருக்கு நம்பிக்கையை ஊட்டியிருந்தன. யாழ். மக்களின் அவலங்கள் குறித்து நவம்பர் மாதம் மூன்றாம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் கீழ்க்கண்டவாறு கூறினார். செயலாளர் நாயகம் புட்றோஸ் காலியின் பேச்சாளர் விடுத்த அறிவிப்பு மனதை உருக்கும் வகையில் அமைந்திருந்தது.
“இலங்கையின் வடபகுதியில் பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனரென்று வெளிவரும் அறிக்கைகள் செயலாளர் நாயகத்துக்குப் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் துயரங்களைக் குறைப்பதற்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் அவசியமாகத் தேவைப்படுகின்றன”
இந்த அறிவிப்பு யாழ். மக்கள் சந்தித்த அவலங்களுக்கு இரத்த சாட்சியமாகும். ஆனால் மக்களை மிரட்டியும், ஷெல் தாக்குதல்களை நடத்தியும் வெளியேற்றிய புலிகள் இராணுவ ஆட்சியின் கீழ் இருக்க விரும்பாமல் மக்கள் தாமாகவே வெளியேறினர் என்று கதையளந்தனர். புலிகளின் பத்திரிகையான ‘ஈழநாதம்’ அப்போது கிளிநொச்சியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. மக்களை மிரட்டி வெளியேற்றிய புலிகள், மக்களின் வெளியேற்றம் குறித்துக் கீழ் கண்டவாறு ‘ஈழநாதம்’ பத்திரிகையில் அறிவிப்பொன்றினை வெளியிட்டிருந்தனர். நவம்பர் மாதம் எட்டாம் திகதி இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.
‘தமக்குத் தேவையான அவசர பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு, இரண்டு பக்கங்களும் நீரினால் சூழப்பட்ட ஒரு ஒடுக்கமான பாதையூடாக ஒரே இரவில் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறினர். கர்ப்பிணிப் பெண்கள், சிசுக்கள், தாய்மார்கள், வயோதிபர்கள், நோயாளிகள், காயமுற்ற போராளிகளும் இதிலடங்குவர். சன நெரிசலுக்கு மத்தியில் அவர்கள் இருந்து நடந்து, வீழ்ந்து, எழும்பி, தவழ்ந்து வந்தார்கள். இராணுவ ஆட்சியின் கீழ் எமது மக்கள் வாழ முடியாது, வாழ விரும்பவில்லை என்ற உண்மையை உலகுக்கு அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்’
இதில் ஐந்து இலட்சம் மக்கள் வெளியேறினார்கள் என்பது அப்பட்டமான பொய். மக்கள் இராணுவ ஆட்சியின் கீழ் வாழ விரும்பாமல் தாமாகவே வெளியேறினார்கள் என்பதும் படுபொய். இதே அறிக்கையின் இறுதிப் பகுதியில், மக்களை வெளியேறுமாறு தாம் உத்தரவிட்ட உண்மையை புலிகள் ஏற்றுக்கொண்டார்கள்.
“எதிரிப் படை மீது காத்திரமான முறையில் நாம் தாக்குதல் நடத்துவதற்கு எவ்வித தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக மக்களை வெளியேறுமாறு உத்தரவிட வேண்டிய நிலை எமக்குத் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டு விட்டது”
இப்படியும் கூறியது புலிகளின் அறிக்கை.
யாழ். ஆஸ்பத்திரி வளாகப் பகுதி பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்பட்டிருந்ததால் அங்கு ஆயுதங்களுடன் எவரும் நடமாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டிருந்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டியின் கண்காணிப்பில் யாழ். ஆஸ்பத்திரியும் அதனை அண்டிய பகுதிகளும் இருந்தன. மண்டை தீவிலிருந்து இராணுவம் யாழ்ப்பாண நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகப் புலிகள் வதந்திகளைப் பரப்பிவிட்டனர். இதனால் யாழ். ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த பெருமளவு நோயாளர்களும், கனிஷ்ட தரத்திலான டாக்டர்களும் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினர். நவம்பர் மாதம் மூன்றாம் திகதி அப்போதைய புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் யாழ். ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தார். யாழ். ஆஸ்பத்திரியை மூடிவிடுமாறும், அங்குள்ள நோயாளர்களைப் பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆஸ்பத்திரிகளுக்கு இடமாற்றுமாறும் வலியுறுத்தினார். இதற்கு முதல் நாள் அதாவது இரண்டாம் திகதி யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கு சென்ற புலிகள் மிகுதியாக அங்கு தங்கியிருந்த அகதிகளையும் மிரட்டி வெளியேற்றினர்.
புலிகளின் மிரட்டல் மற்றும் யுத்தச் சூழ்நிலை காரணமாகப் பெரும்பாலான நோயாளர்கள் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறியிருந்தனர். நவம்பர் பத்தாம் திகதி அளவில் முன்னூறு நோயாளர்களே அங்கு தங்கியிருந்தனர். பதினான்காம் திகதி அனைத்து நோயாளர்களையும் புலிகள் வெளியேற்றிய பின்னர் ஆஸ்பத்திரி மூடப்பட்டது. யாழ்ப்பாண ஆஸ்பத்திரி ஆயிரம் கட்டில் வசதிகளை அப்போது கொண்டிருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து மருந்துப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்கள் யாவும் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டன. யாழ். ஆஸ்பத்திரியிலிருந்து காயமுற்ற புலி உறுப்பினர்கள் சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணம் கோவில் வீதி றக்கா றோட் சந்தியிலுள்ள சென் ஜோன் பொஸ்கோ பாடசாலையில் பல்லாயிரக் கணக்கான அகதிகள் தங்கியிருந்தனர். இவர்களை அங்கிருந்து விரட்டுவதற்காக அந்தப் பாடசாலைக்கு அண்மித்ததாகப் புலிகள் ஷெல் தாக்குதல்களை நடத்தினர். சுண்டிக்குளி மகளிர் கல்லூரியிலும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் தங்கியிருந்தனர். நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில் புலி இயக்க உறுப்பினர்கள் அக்கல்லூரிக்குள் புகுந்து அங்கிருந்த அகதிகளை மிரட்டி வெளியேற்றினர். தூங்கிக் கொண்டிருந்த வயோதிபர்கள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரையும் புலிகள் தரதரவென இழுத்து வந்து வெளியே வீசினர்.
பெரும்பாலான மக்கள் சாவகச்சேரி, கிளிநொச்சி, வடமராச்சி ஆகிய பகுதிகளுக்குச் சென்றனர். வீடுகளையோ, சொத்துக்களையோ அல்லது பெருமளவு பணத்தையோ புலிகளுக்குத் தாரை வார்த்தவர்கள் கொழும்புக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போதெல்லாம் புலிகளிடம் பாஸ் நடைமுறை இருந்தது. புலிகளிடம் அவர்களின் நிபந்தனையின் பேரில் அனுமதி பெற்றவர்களே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். நவம்பர் 17 ஆம் திகதி இந்தப் பாஸ் வழங்கும் அலுவலகங்களை புலிகள் மூடிவிட்டு கொடிகாமத்தில் அலுவலகங்களைத் திறந்தனர்.
சாவகச்சேரியில் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பொன்று கூட்டத்தை நடத்தி மாணவர்களை புலிகளுடன் இணைந்துகொள்ளுமாறு கோரியது. மாணவர்கள் இணைந்து கொள்வதன் மூலம் விடுதலை துரிதப்படும் என அவர்கள் அறிவித்தனர்.
மூன்றாவது ஈழப்போர் முடிவில் 1996 ஆம் ஆண்டு மே மாதமளவில் யாழ்ப்பாண குடாநாடு இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. வன்னிக்குள் புலிகளின் கெடுபிடிக்குள் அகப்பட்டவர்கள், புலிகளின் மூளைச்சலவைக்கு தமது பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள் போக பெரும்பாலானவர்களும் தென்மராட்சி வடமராட்சியில் தங்கியிருந்தவர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினர்.
– எஸ்.அருளானந்தம்
முன்னாள் பிரதம ஆசிரியர் – தினகரன்
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply