என்ன செய்யவேண்டும்?
பத்திரிகை செய்திகளை வைத்து பார்க்கும் போது, முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் யாழ்ப்பாண விஜயம் உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாகத் தோன்றுகிறது. இது, அவரது வருகைக்கு முன், அதனை எதிர்த்து தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் எழும்பிய விமர்சனங்களுக்கு விடையாகவும் அமைந்துள்ளது.
இலங்கை தமிழ் மக்களிடையே இந்திய ஆதரவு நிலைப்பாடு என்பது ஒரு விடயம். அதுவே, விடாமுயற்சியால் வாழ்கையின் ஒவ்வொரு படியிலும் வெற்றிபதித்து, ஓர் பெருமைக்குரிய, அதேசமயம் தமிழ் இனமே பெருமிதம் அடையவேண்டிய முன்மாதிரியாக டாக்டர் கலாம் அடையாளம் காணப்படுவது வேறொருவிடயம்.
இன்று இனப்போர் முடிந்தும் வாழ்க்கைப்போர் தொடங்கியும் தொடங்காத தற்போதைய சூழ்நிலையில், நெல்சன் மண்டேலா போன்றோரின் அரசியல் முன்மாதிரி ஒருபுறம் இருந்தாலும் அத்தகைய முன்மாதிரிகள் தான் அப்பாவி தமிழ் மக்களுக்கு, அதுவும் குறிப்பாக இளைஞர்களுக்கு உடனடி தேவை.
இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு என்று தனி அதிகாரமோ அந்தஸ்தோ கிடையாது. என்றாலும், அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் அப்பால், கடந்த கால் நூற்றாண்டில் இலங்கை வந்த முதன்மை இந்தியர் என்ற பெருமை அப்துல் கலாமையே சேரும். ‘மும்மொழி திட்டம்’ குறித்து அவர் முன் வைத்துள்ள கருத்துக்கள் காலத்தோடு ஒத்துப்போகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமிழ் இளைய சமுதாயம் அதிகளவில் வேலைவாய்ப்பு பெற்று, தொலைந்துபோன தங்களது கடந்த காலத்தை, பிரகாசமான எதிர்காலத்தின் மூலம் நிவர்த்தி செய்வதற்கான அரியவாய்ப்பு. இன்னும் சொல்லப் போனால், போரின் தாக்குதல்களுக்கும் தாக்கத்திற்கும் அப்பால், ஏழ்மையான பின்னணியில் பிறந்தும், தனது வாழ்கையில் உழைப்பால் மட்டுமே முன்னேறி காட்டிய ஒரு தனி மனிதனின் கருத்தாகவே, தமிழ் இனம் – அப்துல் காலாமின் ஆலோசனையை கருதி, செயல்படவேண்டும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில், கல்விதான் தமிழர்களின் சொத்து. அதன் மூலம் கிடைக்கப் பெற்ற அரசு பணியே அவர்களது சமூகத்திற்கு என ஒரு சமுதாய அந்தஸ்தை வழங்கியது. இதன் காரணமாகவே, கிழக்கில் உள்ள வசதிபடைத்த தமிழர்கள் கூட தங்கள் பிள்ளைகளை யாழ்பாணம் பகுதிக்கு அனுப்பி நல்ல கல்வி கிடைக்க வழிவகை செய்தனர். இரு பிரதேசங்களிலும் உள்ள வசதிகுறைந்த குடும்பத்தினர் கூட, தங்கள் பிள்ளைகளின் கல்வி செலவுக்காக பல்வேறு தியாகங்களை செய்தனர். அதிலும் வசதிபடைத்தோர் இந்தியா, அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டிற்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைத்து உயர் கல்வி அளித்து, அவர்கள் சிறப்படைய வழி செய்தனர்.
ஆனால், இன்றைய நிலை என்ன?
எந்த கல்விக்காகவும் அதனோடு சார்ந்த வேலைவாய்ப்பிற்காகவும் ‘இனப் பிரச்சினை’ உருவெடுத்து இனப் போராக வடிவம் பெற்றதோ, இன்று அந்த இரண்டிலும் தமிழ் இனம், இந்த காரணங்களினாலேயே பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. தமிழர் பகுதிகளில், அதுவும் குறிப்பாக வடக்கில் யாழ்பாணம் நீங்கி அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும், கல்வி கூடங்களும், வாழ்விடங்களும், இளைய தலைமுறையினரின் எதிர்காலமும் இல்லாமல் ஆகிவிட்டது. கல்விக் கட்டமைப்புகளை போர்காலவேகத்தில் மீளக்கட்டி எழுப்பினாலும், இல்லாமல் போன இன்றைய இளைய தலைமுறையினரின் எதிர்காலம் இல்லாமலேபோய்விட்டது. அவர்களது எதிர்கால சந்ததியினர் மீண்டும் அடிப்படையில் இருந்தே தங்களது வாழ்வாதாரத்தை தொடங்கவேண்டிய துர்பாக்கியசாலிகளாகிவிட்டனர்.
அரசின் கணக்குப்படியே தமிழர் பகுதிகளில் இனப்போரினால் விதவைகளாக்கப்பட்ட 90,000 பெண்கள் உள்ளனர். இது விடுத்து, போரினால் அனாதைகள் ஆக்கப்பட்டோர், அனாதரவாக விடப்பட்டோர் என்று வயோதிபரும் இளைஞர்களும், பெண்களும், சிறுவர்களும் என்று ஆயிரமாயிரம் பேர் உள்ளனர்.
இவர்களுக்கு எல்லாம், அவர்களது முந்தைய தலைமுறையினருக்கு கிடைக்கப்பெற்ற தரமான கல்வி கிடைக்குமா என்பது சந்தேகமே. அதிலும் சமகால வேலைவாய்ப்போடு ஒட்டிய கணினி சார்ந்த கல்வி அவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கவேண்டும். ஆனால், இது பற்றி எதுவுமே தமிழ் அரசியல் தலைமைகள், அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆர்வம் காட்டுவதாகவோ, முனைந்து செயல்படுவதாகவோ தெரியவில்லை.
இனப் பிரச்சினை தலைதூக்கிய காலம் தொட்டு, ஏன் அதற்கு முன்பே கூட, படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்வதும், அந்த நாடுகளின் குடியுரிமை பெற்று, அங்கேயே தங்கிவிடுவதும் நடைமுறையில் இருந்துவருகிறது. அதிலும் குறிப்பாக, 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேறிய கொலைவெறிக்குப் பின், இவ்வாறு வெளிநாடு செல்வதற்கான காரணமும் நியாயப்படுத்தலும், வாய்ப்புகளும் கூட அதிகரித்தன. ஆனால், இதனால் பயனடைந்தவர்கள் யாழ்பாணத்தின் மத்தியதர வர்க்கத்தினரே. அதற்கு முந்தைய தலைமுறையில் தமிழ் மக்களிடையே இருந்து, தலைநகர் கொழும்பில் சென்று நிலைகொண்ட குடும்பங்களின் அங்கத்தினர்களே அதிகமாக இருந்தனர்.
கல்வித் தரத்தையும் வேலை வாய்ப்பையும் அடிப்படையாகக் கொண்டால், இன்று வெளிநாடு சென்று ‘செட்டில்’ ஆகியுள்ள தமிழர்கள் தங்களது தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பார்கள். உலகின் பிற பகுதிகளில் நடப்பதுபோல், அவர்களில் பலரும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குடியேறியும் இருப்பார்கள். அது இயற்கையின் நீதி என்பது போன்ற சித்தாந்தமும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இருந்து சென்ற தமிழர்களுக்கு, போர் அகதிகள் என்ற ஏற்புடைய காரணத்தினால், பலநாடுகளின் கதவுகளும் தாராளமாகவே திறந்தன. அதுவும், அப்போதைய காலகட்டத்தில், அறிவுசார்ந்த தொழிலாளர்கள் வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்த அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் இருகரம் விரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.
இதில் தவறோ, தார்மீக மன உளைச்சல்களுக்கோ இடமில்லை. அதேசமயம், தாங்கள் விட்டுச்சென்ற தாய்நாட்டை தங்களது காலத்திய மனப்போக்கில் காண்பது, வெளிநாட்டு வாழ் மக்களின் வழக்கமாகிவிட்டது. அதற்கு பல காரணங்களை கூறலாம். அவர்களது நாட்டுப்பற்றை குறைகூறவோ, சந்தேகிக்கவோ தேவையில்லை. ஆனால், தங்களது தற்போதைய வாழ்க்கை முறையின் அடிப்படையில், தங்களது தாய்நாட்டின் நிகழ்காலத்தை கணக்கிடுவதில் அவர்கள் தவறு இழைக்கிறார்கள்.
இனப்போர் முடிவடைந்த இந்த காலகட்டத்திலும், ஏன் போரின் இரத்த காயங்கள் ஆறும் முன்னே கூட அரசு முகாம்களில் தங்கவைக்கபட்ட பலரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதிலேயே குறியாக இருந்தனர். அப்போதும் கூட அரசு தங்களை இன ரீதியாக குறிவைக்கிறது என்று குற்றம் சாட்டுவதிலேயே அவர்கள் மேலும் குறியாக இருந்தனர். ஆனால் தாங்கள் போர்க்களத்தின் முனைகளில் விட்டுவிட்டுவந்த இலட்சோப இலட்சம் அப்பாவி தமிழ் மக்களின் நிலைகுறித்து அவர்களும் சரி, வெளிநாடுகளில் இருந்துகொண்டு அவர்களை வெளியே கொண்டுவர பணம் அனுப்பிக் கொண்டிருந்த உறவினங்களோ கவலைப் படவில்லை. இந்த அவலநிலை இன்றும் தொடர்கிறது.
இவற்றிற்கு எல்லாம் முத்தாய்ப்பாக இவர்கள் முன் வைக்கும் தமிழ் இனத்தை அரசு தொடர்ந்து இன ரீதியாக பழிவாங்குகிறது என்ற முகமூடி கிழிந்து வருகிறது. இனப் பிரச்சினையின் அரசியல் அலகை அலசிப்பார்ப்பது என்பது ஒன்று. போருக்கு பிற்பட்ட காலத்தில் அப்பாவி தமிழ் மக்களின் அவலங்களுக்கு, அவர்களது அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்பது மற்றொன்று. ஆனால், இது எதுவுமே இன்றி, பரமசிவன் கழுத்து பாம்பாக, இனப் பிரச்சினையை தங்களது கடந்தகாலத்தின் பிரதிபிம்பமாக இன்றும் பார்த்து வெளிநாடுவாழ் தமிழ் மக்கள் தொடர்ந்து அரசியல் (மட்டுமே) செய்வது பேதமை. அதிலும் அவர்களால் பின்னணியில் இருந்து இயக்கப்படுபவர்கள் என்று கருதப்படும் தமிழ் தலைவர்கள் தங்களது குடும்பத்தாரை வெளிநாடுகளுக்கு தாரைவார்த்துவிட்டு, உள்நாட்டில் உரிமை குறித்து மட்டுமே பேசுவது தவறான முன்னுதாரணம்.
அல்லலுறும் அப்பாவி தமிழ் மக்களுக்கு, அண்டையில் உள்ள இந்திய அரசு, செயற்கை கால்கள் தொடங்கி, அவசரகால தங்கும் வசதிகள், பின்னர் வீடுகள், பள்ளி கட்டிடங்கள், மருத்துவசாலைகளுக்கு வேண்டிய கட்டிகங்கள், உயர்தர உபகரணங்கள் மற்றும் இரயில் பாதைகள் ஆகியவை அமைத்துக் கொடுத்தவண்ணம் உள்ளது. ஏன், இலங்கைவாழ் தமிழ் மக்களின் விரும்பிய வாகனமான இருசக்கர வண்டிகளையும், அண்மையில் யாழ்பாணம் வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பயனாளிகளிடம் வழங்கினார். இது போன்றே பிறநாடுகளும் உதவிசெய்துவருகின்றன. ஆனால், இவை அனைத்துமே அந்தந்த நாடுகளின் அதிகாரிகளால் மட்டுமே அடையாளம் காணப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களோடும் சரி, இலங்கை அரசோடும் சரி, அரசியல் உரிமை குறித்து அன்றாடம் பேசிவரும் தமிழ் அரசியல் தலைமை தங்களது மக்களின் அன்றாட தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்காதது வேதனைக்குரிய விடயம்.
இந்த பின்னணியில், புலம்பெயர்ந்த தமிழர்கள், யாழ்பாண மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்த உதவிபுரியவேண்டும் என்ற யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜா கூறியுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு மூத்த அரசு அலுவலரே இதை கூறியிருப்பதால், அதன் அடிப்படையில் வெளிநாடு வாழ் தமிழர்கள் இதுபோன்ற முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டும். இதில் தடைகள் வரலாம். தடைக்கற்கள் வைக்கப்படலாம். அரசை எதிர்த்து போர்புரிந்த காலகட்டத்தில் உலகளாவிய அத்தனை தடைக் கற்களையுமே உடைத்து வந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், தங்களது மக்களின் அன்றாட தேவைகளை கொண்டுசேர்க்க சிலபல தடைக்கற்களை தாண்டுவதில் தவறில்லை.
எல்லாவற்றையுமே அரசியலாக பார்க்காமல், எல்லாவற்றையுமே அரசியல் ரீதியாக (மட்டுமே) அணுகாமல் இருக்க அவர்கள் பழகிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலப்போக்கில் அன்றாட அவலங்களுக்கு பதில் காணமுயலும் தமிழ் மக்கள் மனதில் இருந்து அவர்கள் காணாமல் போகும் துர்பாக்கியமான சூழல் எழலாம்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply