இதுவரை இல்லாத அளவு வர்த்தகப் பற்றாக்குறையில் இலங்கை

இலங்கையில் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள இடைவெளியான வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாகவுள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 2011 ஆம் ஆண்டு இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை 238 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் அறிக்கை கூறுகிறது.
இலங்கையின் பொருளாதாரத்தை பொறுத்தவரையில் இது ஒரு அபாயகரமான நிலையையே காட்டுகிறது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் பற்றாக்குறை குறுகிய காலத்தில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிப்பது ஆரோக்கியமான பொருளாதார நிலையாக கருத முடியாது எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததுள்ளதும், நாட்டில் நடைபெற்று வரும் பொருளாதார அபிவிருத்திக்கு கூடுதலாக இறக்குமதிகளை செய்ய வேண்டியுள்ளதும் இந்த வர்த்தகப் பற்றக்குறைக்கு ஒரு முக்கிய காரணம் என இலங்கை அரசு கூறுகிறது.

சர்வதேச அளவில் 2010 நவம்பர் மற்றும் 2011 நவம்பர் இடையேயான காலப்பகுதியில் கச்சா எண்ணெயின் விலை பாரல் ஒன்றுக்கு சுமார் 85 டாலர்களிலிருந்து 113 டாலர்களாக அதிகரித்தது என்பது இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை இருமடங்குக்கும் மேலாக உயர்வதற்கான ஒரே காரணமாக இருக்க முடியாது என்று கூறுகிறார், கொழும்பு பல்கலைகழக பொருளாதாரத்துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் கணேசமூர்த்தி.

“கடன் சுமையும் பணவீக்கமும் அதிகரிக்கும்”

அரசு முன்னதாக நெல் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் உரத்துக்கு மட்டும் மானியம் அளித்துவந்த நிலையில், தற்போது அனைத்து விவசாயத்துக்கும் அதை விரிவுபடுத்தியுள்ளதால், பெருமளவுக்கு உர இறக்குமதியும் செய்ய வேண்டிய சூழல் அரசுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறுகிறார்.

பெருமளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த வர்த்தகப் பற்றாக்குறையின் காரணமாக உள்நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும் என்றும், பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயர்வு மட்டுமல்லாமல், இறக்குமதி உள்ளீடுகளை பயன்படுத்தும் உள்ளூர் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் எனவும் அவர் கூறுகிறார்.

இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் ஏற்கெனவே குறைந்துள்ள நிலையில், இந்த வர்த்தகப் பற்றாக்குறை அதன் மதிப்பை மேலும் வீழ்ச்சியடையச் செய்யும் வாய்ப்புகளும் உள்ளன எனவும் சொல்கிறார் டாக்டர் கணேசமூர்த்தி.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply