தமிழர்களின் பூர்வீக நிலத்தில் புத்த விகாரைகள்

வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினை தீர்வுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் வேளையில் தமிழ் மக்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்வதானது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேக நிலையை தோற்றுவித்துள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கச்சக்கொடிசுவாமிமலை கிராம சேவையாளர் பிரிவில் உள்ள புராதன காலத்து அடையாளங்கள் உள்ள பகுதியிலும் மக்கள் இல்லாத பகுதியிலும் இராணுவம், பொலிசாரின் உதவியுடன் சிங்களப் பொதுமக்கள் ஒரு சில பௌத்த துறவிகளின் உதவியுடன் சிரமதான வேலைகள் மேற்கொள்வதுடன் பௌத்த விகாரைகள் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்னும் சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் பூர்வீக பகுதியில் சுமார் 25 ஏக்கர் விஸ்தீரணமுள்ள மலையும் மலைசார்ந்த காணியில் இந்த அத்துமீறிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்புராதன காணி ஊடாகவே கெவிழியாமடுக் கிராமத்திற்கு மக்கள் சென்று வருவது வழமையாகும். இப்பகுதியில் தமிழ் மக்கள் இருக்கும் போது வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்களைக் கொண்டுவந்து இப்பணியைச் செய்வதில் உள்நோக்கம் உள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இப்பகுதியைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பகுதியாகும். இப் பகுதியில் 140 சிங்களக் குடும்பங்கள் கடந்த நான்கு வருடங்களுக்குள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டவை குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பகுதி புராதன காலத்து பல அடையாளங்கள் இருந்ததை இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் நீண்டகாலமாக பாதுகாத்து வந்தனர். யுத்த காலத்தில் கூட எந்த சேதமும் இதற்கு விளைவிக்கப்படவில்லை.

இப்பகுதியில் புராதன அடையாளங்களை அழித்து பௌத்த விகாரைகள் அமைத்து புதியதொரு வரலாற்றை உருவாக்குவதென்பதை தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இச்செயலானது இரு சமூகத்திற்கும் உள்ள உறவைத் திட்டமிட்டு சீர்குலைக்கும் முயற்சியாகும்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபராலும் பிரதேச செயலாளராலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஓரளவு அத்துமீறிய குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பல நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டன. தற்சமயம் 120 தமிழ் குடும்பங்களும் 220 சிங்களக் குடும்பங்களும் உள்ளன.

இந்நிலையில் 75க்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் அத்துமீறி வாழ்ந்து வருகின்றன. இவைமட்டுமன்றி இப்பகுதியான கெவிழியாமடுவில் 7 தமிழர்களின் வயல்காணிகளை சிங்கள சகோதரர்கள் அத்துமீறிப் பயிர்செய்து வருகின்றனர்.

குறிப்பிட்ட சில தினங்களாக இராணுவமும் பொலிஸாரும் ஓர் இனத்தின் அடையாளத்தை, மதச்சின்னத்தை நிறுவுவதற்கு ஒருபக்கச் சார்பாக சட்டத்தைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குவதென்பது இந்த நாட்டில் முப்படையினர் சிங்கள மக்களுக்கு மட்டும் உரியவர்கள் என்பதைப் புடம் போட்டுக் காட்டுகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. _

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply