தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை முட்டாளாக்கியது போதும் : ஆனந்தசங்கரி
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் தமது கடமையை செய்ய வேண்டும் அன்றேல் தமது பாராளுமன்ற பதவிகளை கண்ணியமான முறையில் துறக்க வேண்டுமென கோருகிறேன். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறி மக்களை முட்டாள்களாக்கியது போதும். ஏனெனில் அவர்கள் ஒருபோதும் மக்களுக்காக பேசவில்லை. பதிலாக மோசடி மூலம் தமக்கு பாராளுமன்ற பதவிகளை பெற்றுத்தந்த விடுதலைப் புலிகள் சார்பாகவே பேசி வந்துள்ளனர். சர்வதேச சமூகத்தை, குறிப்பாக தமிழ் நாட்டவர்களை, தவறான முறையில் வழிநடத்தியுள்ளனர். சுயமாக செயற்பட தமிழ் நாட்டை அனுமதித்திருந்தால் அல்லது உண்மையான வழிநடத்தலை மேற்கொண்டிருந்தால் தமிழ் நாடு தமிழ் மக்கள் ஏற்கக்கூடியதொரு தீர்வை முன்வைத்திருக்கும். இலங்கை மக்களை பகைக்க வேண்டியோ, அல்லது நியாயமற்ற அமுல்படுத்த முடியாத கோரிக்கைகளை முன்வைத்து தமது மத்திய அரசை சங்கடப்படுத்தக் கூடிய நிலைமையோ ஏற்பட்டிருக்காது.
இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி இன்று (11) விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
துரதிஸ்டவசமாக தமிழ் நாட்டு மக்கள் யுத்தத்தை நிறுத்தும்படி கோராது நட்பு முறையில் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்குமாறு கோரியிருப்பின், அம் முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டிருப்பர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் கௌரவ டாக்டர் மு.கருணாநிதி அவர்களை இலங்கைக்கு வருமாறு அழைத்திருந்தேன். இரு மாதங்களுக்கு முன் தமிழ் நாட்டு ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் முதலமைச்சர் டாக்டர் மு. கருணாநிதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ; இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அவ் அழைப்பை ஏற்று அவர் வருகை தந்து மத்தியஸ்தம் வகிக்க முன் வந்திருந்தால் ஜனாதிபதி அதை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பார். நாம் இழந்த வாய்புக்களில் இதுவும் ஒன்றாகும். இச் சந்தர்ப்பத்தை எமக்கு சாதகமாக உபயோகிக்கத் தவறிய த.தே.கூ பொறுப்பேற்க வேண்டும்.
எத்தனை ஆண்டு காலமாக, ஏறக்குறைய கால் நூற்றாண்டு இவ்வளவு துன்பத்தையும் அனுபவிப்பதற்கு நாம் என்ன பாவம் செய்தோம். என்றும், இன்னும் எவ்வளவு காலம் இது நீடிக்கும். என்றும் இடம் பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமமாகிய தருமபுரத்தில் வசிக்கின்ற மக்கள் கேட்கின்றார்கள். நான் அவர்களுடன் வாழ்ந்தவன் என்ற காரணத்தாலும் அவர்களை பாராளுமன்றத்தில் பல ஆண்டுகள் பிரதிநிதித்துவப்படுத்தியதாலும், அவர்களில் அநேகரை நான் அறிவேன். இதைத் தவிர ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் ஆண். பெண் பிள்ளைகள், நோயாளிகளும், பச்சிளம் குழந்தைககளும் உட்பட அனைத்து மக்களின் சகவாழ்வு பறிக்கப்பட்டு, ஈவிரக்கமின்றி விலங்குகள் போல் அயல் மாவட்டங்களாகிய மன்னார், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் இருந்து கிளிநொச்சிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்துடன் மோத முடியாது வாபஸ் பெற்று வந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இவர்களை கிளிநொச்சிக்குள் பலாத்காரமாக புகுத்தியுள்ளனர். தத்தம் இஷ்டப்படி செயற்பட அனுமதிக்கப்பட்டிருந்தால் அநேகர் தமது சொந்த வீடுகளில் தங்கியிருப்பர். இன்னும் பலர் தத்தம் வீடுகளுக்குச் சென்று கொள்ளையிடப்பட்டும், களவாடப்பட்டும எஞ்சிய தமது பொருட்களை பாதுகாத்திருப்பர். ஏற்கனவே இடம் பெயர்ந்த மக்களால் நிறைந்துள்ள இச் சில கிராமங்களுக்குள் இவர்களும் தள்ளப்பட்டுள்ளனர். எவ்வித குற்றமும் செய்யாத இவர்களை தமது பாதுகாப்புக்காக மனித கேடயமாக உபயோகிப்பதற்கு இவர்களை பயணக் கைதிகள் போல் தடுத்து வைத்துள்ளனர்.
இந்த துர்ப்பாக்கிய மக்களின் அவலக் குரல் தமிழ் நாட்டுக்கு எட்டவில்லை போலும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு; பிரதேசத்தில் வாழும் மக்களின் மனித உரிமை மீறல்கள் பற்றியும் சர்வதேச சமூகம் அக்கறை கொண்டிருந்தும,; தமிழ் நாடு இலங்கையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்திருந்த காரணத்தினால் போலும், சர்வதேச சமூகம் மௌனம் சாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகி உள்ளது. தமிழ் நாட்டின் கோரிக்கை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக அமைந்ததே அன்றி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுள்ள மக்களின் நன்மை கருதியல்ல என்பது தெளிவாகும்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் அகப்பட்டுள்ள இரண்டரை லட்சம் மக்களின் விடயத்தில் தமிழ் நாடோ, தமிழ் தேசிய கூட்டமைப்போ அக்கறை கொள்ளாது வேண்டா வெறுப்பாக செயல்படுகின்றன. ஆனால் மக்களோ, யுத்த முனையில் பலி கொடுக்க விடுதலைப் புலிகளால் ஆட்கள் சேர்ப்பது ஒரு புறமும், மறுபுறம் பாம்புகளாலும், நுளம்புத் தொல்லையாலும் மக்கள் துன்பப்படுகின்றனர். நூற்றுக்கணக்கானோர் பாம்பினால் தீண்டப்பட்டு சிலர் இறந்தும் உள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபுறமிருக்க இயற்கையே மக்களுக்கு விரோதமாக செயற்படுகின்றது. கடும் மழையால் அப் பிரதேசம் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு உயரமான இடங்களைத் தேடி மக்கள் அலைகின்றனர். பாம்புக்கடி ஒருபுறமிருக்க நுளம்பினால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பெருமளவில் பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் இத்தகைய துன்பங்கள் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அண்மையில் பெரும் கிளர்ச்சியை தமிழ் நாட்டில் ஏற்படுத்திய சில தமிழ்நாட்டு தலைவர்களோ அக்கறை கொள்ளவில்லை.
ஆனால் அவர்கள் தமக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு இருப்பதாக பெருமையாக பேசி வருகின்றனர். சிங்கள மக்களுக்கும் தமிழ் நாட்டின் மதுரையில் வாழும் தமிழ் மக்களுக்கும் அத்தகைய தொப்புள் கொடி உறவு இருப்பது இவர்களுக்கு தெரியாது போலும். யுத்தத்தை நிறுத்துகின்ற சாட்டில் விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதே அவர்களுடைய பிரதான நோக்கமாகும். அண்மையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் 190 பாடசாலையைச் சேர்ந்த 55,000; மாணவர்கள் கல்வியை இழந்துள்ளதாக முறைப்பட்டுள்ளார்.
இது ஏன் நடந்தது? யாரால் நடந்தது? எங்கே நடந்தது என்று கூறுகின்ற தைரியம் அவருக்கு இருக்கவில்லை. இது சம்பந்தமாக மேலும் கூறுவாராயின் கிழக்கு மாகாணத்தில் 6000 பிள்ளைகள் அரிச்சுவடியே தெரியாமல் உள்ளனர். அரசிடம் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் சிலர் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து யுத்த முனையில் செயற்படுகின்றார்கள் என்பதை இந்த பாராளுமன்ற உறுப்பினர் கூறவில்லை. இப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சிறந்த கல்வியை பெற்று வருகின்றனர். இதில் வேடிக்கை என்னவெனில் அவுஸ்திரேலியாவில் தனது மனைவி மக்களை வசதியாக வாழ வைத்து த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற ஒருவர் என்னை துரோகி என வர்ணித்தமையே.
விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் வரை யுத்தம் தொடர்வதையே மக்கள் விரும்புகின்றனர். இருநூறு மைல்களுக்கு மேல் வழி வழியே மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவித்து வந்த இராணுவத்திற்கு எஞ்சியுள்ளது இன்னும் சில மைல்களே. மக்கள் விரும்புவதெல்லாம் இராணுவம் பொது மக்களை இலக்கு வைப்பதையும் இரவு வேளையில் குண்டு வீசுவதை தவிர்க்க வேண்டும் என்பதையே. விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் சில தினமும் அவர்களுடைய தலைமையிடம் ஒப்படைக்குப்படி ஐ.சி.ஆர்.சி யிடம் கையளிக்கப்படுகிறது. அவர்கள் எல்லோரும் பலாத்காரமாக இணைக்கப்பட்ட ஏழை மக்களின் பிள்ளைகளாகிய இளைஞர்களும், யுவதிகளுமே. எதுவித பயிற்சியுமற்ற அல்லது மிக சொற்ப பயிற்சியுடன் யுத்த முனைக்கு அனுப்பப்பட்டவர்களாவர்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்தவும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைப்பதற்குமாகவே த.தே.கூ இனர் மௌனம் சாதிக்கின்றனர். ஆனால் கலாச்சாரத்திலும் நாகரீகத்திலும் மேம்பட்டும,; பய பக்தியுடனும், இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது மிக்க அனுதாபமும், தமக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவுபற்றி பிரமாதப்படுத்தி பேசும் தமிழ் நாடு அநாகரிகமாகவும், கொடூரமாகவும் மக்களை நடத்தும் மிருகத்தனமாக செயற்படும் புலிகள் பற்றி ஏன் மௌனம் சாதிக்க வேண்டும். பெரும்பகுதி காடாக உள்ள பகுதியில் பாம்புகள், நுளம்புகள் ஆகியவற்றின் தொல்லைகளுக்கு மத்தியில், தாங்க முடியாத குளிரிலும், கொட்டும் மழையிலும் நேரத்திற்கு உணவோ, முறையான இருப்பிடமோ இன்றி நாடோடிகள் போல் தமது தற்காலிக இருப்பிடங்களை அடிக்கடி இடம் மாற்றி வாழும் மக்களை கட்டாயப்படுத்தி தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை தமிழ்நாடு ஏன் கண்டுகொள்ளவில்லை. தமக்கு வேண்டிய அத்தனையையும் முன் கூட்டியே எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றையே பொது மக்களுக்கு விநியோகிக்கும் பழக்கம் உடையவர்களே புலிகள். இதுவே இன்றும் நடைமுறையில் உள்ளது. அண்மையில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய எண்ணாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களை, பயிற்சிக்கு செல்லுமாறு விடுதலைப் புலிகள் பணிக்கும் போது த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் சாதிக்க, கத்தோலிக்க திருச்சபையினர் தமது அநாதை இல்லத்தில் இருந்து விடுதலைப் புலிகள் சில அநாதை பிள்ளைகளை பலாத்காரமாக கொண்டுச்; சென்ற போது தமது கடும் எதிர்ப்பினை கத்தோலிக்க திருச்சபையினர் காட்டியுள்ளனர்.
இங்கே குறி;ப்பிடப்பட்டுள்ள அத்தனை விடயங்களும் எமது மக்கள் படும் துன்பத்தின் மிகச் சிறியவொரு பகுதியே. இன்றைய நிலைக்கு ஓரளவு பொறுப்பேற்க வேண்டிய தமிழ்நாடு, தமது ஆழ்ந்த துயிலில் இருந்து விழித்தெழுந்து விடுதலைப் புலிகள் பலாத்காரமாக பிடித்து வைத்துள்ளவர்களை சமயோசிதமாக விடுவிக்க வேண்டும். அதை மீறி முரண்படுவார்களேயானால் மக்களை விடுவிக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
தமிழ் நாடு அடம் பிடித்து மௌனம் சாதித்தால் அன்றி விடுதலைப் புலிகள் சார்பான சில தமிழ்நாட்டு தலைவர்களுக்கு பயப்பட்டால் அல்லது தப்பாக தமிழ்நாட்டை தட்டியெழுப்பிய த.தே.கூ இனர் இத்தனை பணிவான வேண்டுகோளை மதித்து தமிழ் நாட்டை இயங்க வைக்க தவறினால், விடுதலைப் புலிகளுக்கு பெரும் தொகையான பண உதவி கொடுத்து அவர்களை வளர்த்தெடுத்த பிற நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உதவியைத்தான் நாட வேண்டும். அவர்கள் தலையிட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இம் மக்களை விடுவிக்க உதவ வேண்டும். விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். அவர்கள் இழந்த அத்தனையையும் மீளப் பெறுவார்கள் என எண்ணுவது கேளிக்கைகுரியதாகும்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிடுவார்களேயானால், அவர்கள் அவ்வாறு செய்து அரசுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை காணலாம். அத் தீர்வானது சகல இன மக்களும் சமமாக எதுவித பாகுபாடுமின்றி சகல உரிமைகளையும் அனுபவிக்கக் கூடிய ஓர் தீhவாக அமைய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின், “கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட” கதைபோல், பழி பாவங்களுக்கு அஞ்சாத கொள்கையில்லாத சிலர் அதிகாரத்தை கைப்பற்ற வழி வகுத்துக் கொடுத்ததாக அமையும். இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் மக்கள் எண்ணெய் சட்டியிலிருந்து நெருப்புக்குள் விழ விடாது பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை உண்டு. த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்ய வேண்டிய தமது கடமையில் இருந்து தவறி விட்டார்கள் என நான் விசுவாசமாக நம்புவதால் அவர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு எதுவித பதவியிலும் அக்கறையில்லை என்பதையும், எனது முழு அக்கறையும் கடந்த கால்நூற்றாண்டு காலமாக துன்பத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் எம் மக்களுக்கு பணியாற்றுவது என்பதே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can skip to the end and leave a response. Pinging is currently not allowed.
Leave a Reply