வைரஸ் தொற்றியதால் குருநாகல் பண்ணையில் 5000 கோழிகள் அழிப்பு
குருநாகல் மாவட்டத்திலுள்ள பிங்கிரிய பிரதேசத்தில் இருக்கும் கோழிப் பண்ணையொன்றில் சளிச் சுரத்தையொத்த நோய் காரணமாக கோழிகள் உயிரிழந்துள்ளன. அதனால் அக்கோழிப் பண்ணை ‘சீல்’ வைத்து மூடப்பட்டிருப்பதாக மிருக வளர்ப்பு மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டபிள்யூ.கே.த.சில்வா நேற்றுத் தெரிவித்தார்.
இதன் விளைவாக இப்பண்ணை யிலுள்ள சுமார் ஐயாயிரம் கோழிகள் நீதிமன்ற அனுமதியைப் பெற்று சட்டப்படி இன்று 2ஆம் திகதி அழிக்கப்படும். பண்ணையின் உரிமையாளருக்கு நஷ்ட ஈடும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேநேரம், இப்பண்ணையிலுள்ள கோழிகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரி கள் மேலதிக பரிசோதனைக்காக நேற்று ஐக்கிய இராச்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இப்பிரதேசத்திலுள்ள கோழிப் பண்ணைகளில் எமது மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்தும் பரிசோதனையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கோழிகள் உயிரிழந்த பண்ணையிலிருந்து பெறப்பட்டுள்ள மாதிரிகளை நாம் தொடர்ந்தும் பரிசோதனை செய்து வருகின்றோம் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, சுகாதார அமைச்சு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய இரண்டு குழுக்களை பிங்கிரிய பிரதேசத்திற்கு நேற்று காலையில் அனுப்பிவைத்ததாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார். இக்குழு வினரும் அப்பிரதேசத்தில் பரிசோதனை களை மேற்கொண்டுள்ளதாகவும் அவ்வதிகாரி கூறினார்.
இதேவேளை, பணிப்பாளர் நாயகம் டொக்டர் சில்வா மேலும் குறிப்பிடுகையில்; குறித்த பண்ணையில் கோழிகள் உயிரிழப்பதாக எமக்கு அறிவிக்கப்பட்டது. அங்கு எமது மருத்துவர்கள் உடனடியாகச் சென்று பரிசோதனைகளை மேற் கொண்டனர். அப்போது ‘சிக்கன் அனீ மியா’ நோயே அக்கோழிகள் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தது.
அதன் பின்னர் கடந்த வாரம் இப் பண்ணையில் கோழிகள் உயரிழப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எமது மருத்துவர்கள் அங்கு சென்று தொடர்ந்தும் சோதனைகளை மேற்கொள்கின்றனர். இப்பரிசோதனையில் சளிச் சுரத்தையொத்த நோயினால் இக்கோழிகள் உயிரிழந்துள்ளன. இவற்றிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதித்தபோது அவற்றில் எச் 5 என் 2 என்ற வைரஸ் வகை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளவே அங்கு பெறப்பட்ட மாதிரிகளை ஐக்கிய இராச்சியத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.
அதேவேளை, குறித்த பண்ணையைத் தவிர்ந்த அப்பிரதேசத்திலுள்ள வேறு எந்தப் பண்ணையிலும் எந்தவொரு கோழியுமே உயிரிழக்கவில்லை. என்றாலும் வீண் சந்தேகம் நிலவக் கூடாது என்பதற்காகவே அப்பண்ணையிலுள்ள கோழிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
மற்றம்படி வேறு எந்த காரணமுமே இல்லை என்றார்.
இதேவேளை, அகில இலங்கை கோழிப்பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் டொக்டர் ரி.டி.வணசிங்க கூறுகையில், குறித்த பண்ணையில் கோழிகள் உயிரிழந்ததற்கு பண்ணைகளில் காணப்படும் சாதாரண நோயே காரணம். மற்றம்படி எதுவுமே இல்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply