தாய் மொழி எதுவானாலும் தமிழக பள்ளிகளில் தமிழ் கட்டாயம்
தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தாய் மொழி எதுவாக இருந்தாலும், கட்டாயம் தமிழ் மொழியை படித்தே தீர வேண்டும்.
கர்நாடகத்தில் கன்னடம் படித்தாக வேண்டும், ஆந்திராவில் தெலுங்கு படித்தாக வேண்டும். அதுபோல் தமிழ்நாட்டில் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்பதில் எந்த தவறும் அல்ல. இதில் மாற்றமும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
கோபிநாத் (காங்கிரஸ்) (தெலுங்கிலும், கன்னடத்திலும் அவர் பேசியதாவது): தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என உள்ளது. இதனால் வேறுமொழி பேசும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம்: சிறுபான்மை மாணவர்கள் 6ம் வகுப்பில் இருந்துதான் தமிழ் படிக்க வேண்டும். தமிழ் மொழியை படிப்பவர்கள் எந்த மதிப்பெண் எடுத்தாலும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே அவர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் தான் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. ஆந்திராவில் கண்டிப்பாக தெலுங்கு படித்து ஆக வேண்டும். கர்நாடகாவில் கண்டிப்பாக கன்னடம் படித்தாக வேண்டும், கேரளாவில் மலையாளம் படித்தாக வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் படிப்பதில் எந்த தவறும் இல்லை.
கோபிநாத்: தமிழ் படிக்க மாட்டோம் என்று நாங்கள் சொல்லவில்லை. பல பள்ளிகளில் தமிழை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லை.
அமைச்சர் சண்முகம்: கடந்த திமுக ஆட்சியில் அனைவரும் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால் அதற்கான தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவில்லை. அதை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோபிநாத்: தமிழ் மொழியை கட்டாயம் படிக்க செய்வதால் சிறுபான்மை மாணவ- மாணவிகளுக்கு இருக்கும் பிரச்சனையை தெரிவித்தேன். நாங்கள் தமிழ் மொழிக்கு எதிரி அல்ல. எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா: தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்கள் தாய்மொழி எதுவாக இருந்தாலும் கட்டாயம் தமிழ் மொழி படித்தாக வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கர்நாடகத்தில் கன்னடம் படித்தாக வேண்டும், ஆந்திராவில் தெலுங்கு படித்தாக வேண்டும். அதுபோல் தமிழ்நாட்டில் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்பதில் எந்த தவறும் அல்ல. இதில் மாற்றமும் இல்லை.
உறுப்பினர் பேசும்போது, தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று குறிப்பிட்டார். அந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
விவாதத்தின்போது எம்எல்ஏ கோபிநாத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தெலுங்கிலும், கன்னடத்திலும் பதில் தந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply