இலங்கையை தண்டனைக் களத்துக்கு இழுக்கப் போகிறதா அமெரிக்கா

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவேண்டியது தவிர்க்க முடியாத விடயம் என்று அமெரிக்கா உணர்ந்துள்ளது. போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

கடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார்.

இதற்கு முன்னதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் பல்வேறு விதமான எச்சரிக்கைகளை கொடுத்திருந்தனர். அவையெல்லாம் ஏதோ ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டவை அல்லது அறிக்கையாக வெளியிடப்பட்டவை தான். அவற்றை முற்றிலும் அதிகாரபூர்வமான எச்சரிக்கையாகக் கருத முடியாது.

இப்போது ஹிலாரி கிளின்டன் அனுப்பியுள்ள கடிதம் முறைப்படியாக எச்சரிக்கை செய்யும் வகையிலானது. எழுத்துமூலமாக கொடுக்கப்பட்டுள்ள முன்னறிவித்தல் இது.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கப் போகிறது என்ற தகவல் பரிமாறப்பட்டுள்ளதற்கு தனியே எச்சரிக்கும் நோக்கம் மட்டும் காரணமல்ல.
அதற்கும் அப்பால் இலங்கைக்கு மேலும் சந்தர்ப்பம் அளிக்கும் வாய்ப்பையும் அமெரிக்கா நிராகரிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும். அதனால் தான் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை வோஷிங்டனுக்கு விளக்கமளிக்க வருமாறு கேட்டுள்ளார் ஹிலாரி கிளின்டன்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கொண்டு வரத் தயாராகியுள்ள அமெரிக்கா, அதனைச் சத்தமின்றி செய்து விட்டுப் போயிருக்கலாம். அதாவது, ஈரானைப் போன்று, ஈராக்கைப் போன்று லிபியாவைப் போன்று இலங்கையைத் தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா கருதியிருந்தால், அப்படித் தான் செய்திருக்கும்.

ஆனால் இலங்கையைத் தண்டிக்கும் நோக்கத்தை மட்டும் அமெரிக்கா கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அதற்கும் அப்பால் அமெரிக்காவிடம் இன்னொரு திட்டம் உள்ளது. ஹிலாரியின் கடிதம் கிடைத்த பின்னர், கடந்தவாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்தே அதிகம் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பல பொது மேடைகளில் அவர், மேற்குலகம் தனது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்வதாகக் கூறியிருந்தார். எவ்வாறாயினும் அமெரிக்காவின் இப்போதைய நகர்வுகளை அரசாங்கம் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சியாகவே கருதுகிறது போலுள்ளது. அதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது போனாலும் அமெரிக்காவின் இப்போதைய இலக்கு அதுவாக இருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கையில் நிலையான அமைதியை உருவாக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறது. அப்படிச் செய்யாது போனால் அது தெற்காசியாவில் இந்தியா, சீனா, அமெரிக்கா என்ற பல்வேறு நாடுகளும் தொடர்புபட்ட ஒரு சிக்கலைத் தோற்றுவித்து விடும்.

சீனாவின் பிடியில் இருந்து இலங்கையை விடுவிக்க முடியாது. மீண்டும் போர் ஒன்று இலங்கையில் எந்த வடிவத்திலும் உருவாவதை அமெரிக்கா அனுமதிக்கப் போவதில்லை. ஏனென்றால், அது சீனாவின் நலன்களை வலுப்படுத்தி விடும்.

இப்படிப்பட்ட நிலையில், இலங்கையில் நிலையான அமைதியை உருவாக்குவதற்காக சில அரசியல் நகர்வுகள் அவசியம் எனக் கருதுகிறது அமெரிக்கா.

போர் முடிவுக்கு வருவதற்கு சில நாட்கள் முன்னதாக கிட்டத்தட்ட புலிகளின் அழிவு உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், அதுபற்றி அமெரிக்கா என்ன கருத்தை முன்வைக்க வேண்டும் என்ற ஆலோசனை ஒன்றை வாஷிங்டனுக்கு முன்வைத்திருந்தார் அப்போதைய தூதுவர் றொபேட் ஓ பிளேக்.

அதில் அவர், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள், பொறுப்புக்கூறுதல், மற்றும் உறுதியான அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு போன்றவற்றை வலியுறுத்த வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்களை இலங்கை அரசிடம் இருந்து எதிர்பார்ப்பதாக போர் முடிந்தவுடன் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதையே தான் பெரும்பாலான நாடுகளும் கூறின. ஆனால் அவை எதுவும் அரசாங்கத்தின்ன் காதுகளுக்கு எட்டவேயில்லை. அப்படி எட்டியிருந்தால் இந்த மூன்று ஆண்டுகளிலும் அரசாங்கம் சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றிருக்க முடியும்.

போர் முடிவுக்கு வந்தபோது உலகமே இலங்கையைப் பார்த்து வியந்தது. இது எப்படிச் சாத்தியமானது என்று அறியும் ஆவல் பிறந்தது. ஆனால் இப்போது அந்த வியப்பு தொலைக்கப்பட்டு விட்டது.
இப்போதும் அமெரிக்கா, பொறுப்புக்கூறும் விடயத்தில் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள், வடக்கு மாகாணசபைக்கு எப்போது தேர்தல் நடத்தப்போகிறீர்கள், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான அரசியல்தீர்வை எப்போது கொண்டு வரப் போகிறீர்கள் என்று தான் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை அழைத்து கேட்கப் போகிறது. இந்தக் கேள்விகளுக்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எந்த வகையில் பதில் சொல்லப் போகிறார் என்பது தெரியவில்லை.

ஆனால் ஒன்று. இனிமேலும் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை வைத்து செயற்படும் நிலையில் அமெரிக்கா போன்ற நாடுகள் இருக்காது என்பது தெளிவு.
ஏற்கனவே சர்வதேச சமூகத்துக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நம்பகமான முறையில் நிறைவேற்றவில்லை என விமர்சிக்கப்ட்டுள்ளது . இதனால் தான் அமெரிக்கா நேரடியாகவே களத்தில் இறங்கத் தீர்மானித்து விட்டது. அந்த முடிவை எடுத்த பின்னர் தான் ஹிலாரி கிளின்ரன் ஒரு முன்னறிவித்தலை கொடுத்தார்.

இந்த முன்னறிவித்தலைக் கண்டு இலங்கை அரசாங்கம் பதறிப்போகும் என்பதும் பேசுவதற்காக ஓடி வரும் என்பதும் எதிர்பார்த்த விடயம் தான். அதன்படியே நடக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்து அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி அதன் மீது தடைகள் விதிக்கப் போகிறதா அல்லது பொறுப்புக் கூறுவதற்கான சர்வதேசப் பொறிமுறை ஒன்றை உருவாக்கப் போகிறதா அல்லது போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் போகிறதா ?
இவையெல்லாம் பொதுவாக உலகில் கையாளப்படும் வழிமுறைகள் தான்.

ஒருமுறை பிளேக், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு உரிய வகையில் பதிலளிக்கப்படாது போனால், சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு இலங்கை இழுத்து வரப்படும் என்று வெளிப்படையாகவே எச்சரித்திருந்தார்.

ஆனால் அமெரிக்காவின் இறுதியான நோக்கமும், இலக்கும் இலங்கையைத் தண்டனைக் களத்துக்குள் கொண்டு செல்வதாகவே இருக்கும் என்று கருத முடியாது. அதற்குக் காரணம் நெதர்லாந்து வானொலிக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பேச்சாளர் டேவிட் கென்னடி அளித்துள்ள செவ்வி.

இந்தச் செவ்வியில் அவர், நல்லிணக்கம் மனிதஉரிமைகள் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக இந்தத் தீர்மானம் பயன்படும் எனக் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆக, இந்தத் தீர்மானத்தை ஒரு கருவியாகப் பாவித்து இலங்கை அரசை பணிய வைத்து சில காரியங்களை நிறைவேற்ற அமெரிக்கா முனைகிறது.

பொறுப்புக்கூறுதல், மனிதஉரிமைகளை உறுதி செய்தல், அதிகாரப்பகிர்வு, அரசியல்தீர்வு என்பனவே அந்த இலக்குகள். அதற்கான கருவியாகவே போர்க்குற்ற விவகாரங்களை அமெரிக்கா கையில் எடுக்கப் பார்க்கிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறுதல் தொடர்பான உறுதியான திட்டங்களை அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அறிக்கை அமையவில்லை. அதனை அமெரிக்கா எப்போதோ கூறியும் விட்டது. இந்தநிலையில் தான் அமெரிக்கா ஜெனிவாவில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரும் முடிவுக்கு வந்துள்ளது..

இப்போதும் கூட அரசாங்கம் இந்த இலக்குகளை எட்டுவதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு முழு உத்தரவாதம் அளிக்குமேயானால், ஜெனீவாவில் இலங்கை மீதான பிடி தளரக் கூடும். இல்லையேல் ஜெனீவாவில் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் அமெரிக்காவின் பிடி இறுக்கமடையவும்கூடும்.

கே.சஞ்சயன் (தமிழ்மிரர்)

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply