அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பொறுப்புக்கூற வேண்டும்
மக்களுக்கு இதுவரையில் ஏற்பட்ட தற்போது ஏற்படுகின்ற அவலங்களுக்கு அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பொறுப்புக்கூற கடமைப்பட்டவர்கள் என சிகரம் ஊடக இல்லப் பணிப்பாளர் கோ.றுஷாங்கன் தெரிவித்தார்.
ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று (07/02/12) செவ்வாய்க் கிழமை நடைபெற்ற விசேட விருந்துபசார ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இங்கே முன்னர் சிலர் பேசிக்கொண்டிருந்தபோது எனக்கருகிலிருந்த ஒரு நண்பர், 2009 மே மாதம் 15ம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து தப்பி வரும் வரையில் தாம் பட்ட அவலங்களுடன் தமக்கு அரசியலே வேண்டாம் என்றாகிவிட்டது என்று சொன்னார். அந்தளவுக்குத் தமிழ் மக்கள் இந்த நாட்டில் துன்பங்களைச் சந்தித்துவிட்டார்கள். இதேபோன்றுதான் 1990ம் ஆண்டு ஒரு மணித்தியாலத்துக்குள் வடக்கு மண்ணைவிட்டுப் பெயர்த்தெறியப்பட்ட முஸ்லிம்களும் மோசமான துன்பங்களைச் சந்தித்துள்ளனர். இந்தத் துன்பங்களுக்கெல்லாம் ஒரு வகையில் இந்த நாட்டின் அரசியல்வாதிகள்தான் பதில் சொல்லியாகவேண்டும்” என்று கூறிய றுஷாங்கன்,
சிங்கம் மட்டும் சட்டம் முதல், இந்த நாட்டில் நடைபெற்று முடிந்திருக்கும் அனைத்து விடயங்களுக்கும் அரசியல்வாதிகளது குறுகிய நோக்கம் கொண்ட செயற்பாடுகள்தான் காரணமே தவிர, மக்கள் இவற்றில் எதற்கும் பொறுப்பல்ல என்று தெரிவித்தார்.
“தமிழ் மக்களோ, முஸ்லிம் மக்களோ, சிங்கள மக்களோ தமக்குள் முரண்பாடுகளின்றி ஒற்றுமையாக வாழத் தயாராகவே உள்ளனர் என்பதை, இந்த நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்து எல்லா இன மக்களுடனும் நெருக்கமாகப் பழகியவன் என்ற வகையில் நான் அறிவேன்” என்றார் அவர்.
அரசியல்வாதிகளுக்கு அடுத்ததாக ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் மக்களுடைய துயரங்களுக்குக் காரணமாக இருந்தள்ளனர் என்று தெரிவித்த அவர், அரசியல்வாதிகளை வழிநடத்தவேண்டிய ஊடகங்கள், அவ்வாறன்றி அவர்களுக்குப் பின்னே சென்றதால் மக்களுடைய துயரங்களை அதிகரிக்கச் செய்துள்ளன என்று குற்றஞ்சாட்டினார். போரின் இறுதி நாட்கள் வரையில் ஊடகங்கள், குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மக்களுக்கு என்ன சொல்லி வந்தன என்பது இதற்குச் சான்று என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகவியலாளர்கள் தமது ஊடகச் செயற்பாட்டின்போது சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாதெனவும், மக்களுடைய நலன்களை முன்னிறுத்தியே செயற்படவேண்டும் எனவும் கூறிய றுஷாங்கன், ஊடகங்களை விலை கொடுத்து நுகரும் மக்களுக்கு ஊடகவியலாளர்கள் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டவர்கள் என்றம் தெரிவித்தார்.
மக்கள் நலன் சார்ந்து, அவர்களுக்கு்ப பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகாதவர்களாக ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் செயற்பட்டால், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், நிரந்தர சமாதானத்தையும் இலகுவாக ஏற்படுத்தலாம் என்றும் சிகரம் ஊடக இல்லப் பணிப்பாளர் கோ.றுஷாங்கன் மேலும் இங்கு தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply