கூட்டமைப்பு கூறியது என்ன?
அதிகார பகிர்விற்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பிழையானது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக இத்தகைய செய்தி, சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதேசமயம், தமிழ் பத்திரிகைகளில் இதே செய்தி வேறுவிதமாக பிரசுரமாகி உள்ளது. முன்னதை காட்டிலும் பின்னதே நம்பும்படியாக உள்ளது. ஆனால், இந்த விடயத்தில் சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளின் செய்தி தவறாக அர்த்தப்படுத்தப்பட்டதா? அல்லது அவர்களே வேண்டுமென்றே தவறு இழைத்தார்களா என்பது ஆராயப்படவேண்டிய பிறிதொரு விடயம்.
தற்போதைய பிரச்சினை, பதின்மூன்றாவது திருத்தம் தவறானதா? அல்லது அதனை செயல்படுத்துவதில் அடுத்தடுத்து பதவியில் வந்த அரசாங்கங்கள் தாமதமாக இருந்ததா என்பதே. பொலிஸ் மற்றும் காணி தொடர்பான விடயங்களில் பதின்மூன்றாவது திருத்தம் தவறு இழைத்துவிட்டது என்பதே தற்போது ஆளும் மஹிந்த ராஜபக்ஷ அரசின் எண்ணவோட்டம் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அவற்றை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்வதால் மட்டுமே அந்த சட்டம் பல் இல்லாத பாம்பாக ஆக்கப்பட்டுவிட்டது என்ற அர்த்தத்திலேயே கூட்டமைப்பு தலைமை பேசியுள்ளது.
அதேசமயம், பதின்மூன்றாவது திருத்தம் – சட்டமாவதற்கு முன்பிருந்தே, இன்று கூட்டமைப்பில் அங்கம் வகித்து தலைமைதாங்கும் பல்வேறு தலைவர்களும் அதனை குறை கூறி வந்துள்ளார்கள். அப்போதெல்லாம் அவர்களது எதிர்ப்பு பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் அதற்கு வழிவகைசெய்த இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும் ஒருசேர தாக்கியது. அப்போது, அவர்களது நிலைப்பாட்டின் பின்னால் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் இருந்ததாக கருதப்பட்டுவந்தது. தற்போதுள்ள சூழலில், அவர்கள் அந்த சட்ட திருத்தத்தின் செயற்பாட்டின்மையை மட்டும் குறை கூறுகிறார்களா? அல்லது பதின்மூன்றாவது திருத்ததையே தொடர்ந்து எதிர்க்கிறார்களா என்று கூட்டமைப்பு தலைமை தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த தெளிவற்ற போக்காலும் கூற்றாலும் தான் கூட்டமைப்பு தலைமை சிங்கள – ஆங்கில பத்திரிகைகளில் இவ்வாறாக சித்திரிக்கப்படுகிறது. இதன் பின்னால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள், அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் ஒருபகுதியினர் உள்ளனரோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. இது தவறான எண்ணமாக இருந்தால் அதனை திருத்தவேண்டியது கூட்டமைப்பின் கடமை மட்டுமல்ல, கட்டாயமும் கூட. இல்லையென்றால், அவர்களுடைய நிலைப்பாடு தோற்றுவிக்கும் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிவரும்.
அதன் ஒருமுகம் தான் அரசு தலைவர்கள் – கூட்டமைப்பு தலைமையை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு தொடர்ச்சியாக சித்திரித்துவருவது. அதனை காரணம் காட்டி அதிகார பகிர்வு குறித்த பேச்சுவார்த்தையை அரசு முறித்துக் கொண்டதும் இதனுள் அடங்கும். இதன் வெளிப்பாடு கூட்டமைப்பு குறித்த சர்வதேச சமூகத்தின் எண்ணவோட்டத்தை பாதிப்பதாகவும் அமையலாம். உண்மையிலேயே கூட்டமைப்பு – விடுதலைபுலிகள் இயக்கத்தின் பிரதிபலிப்பாக இருப்பதை விரும்பவில்லை என்றால் அதனை தெளிவுபடுத்த கடினமான முயற்சிகள் எடுக்கத் தேவையில்லை. வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக அவர்கள் தௌ;ளத் தெளிவாக பேசலாம்.
அல்லாது ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால் என்றே தொடர வேண்டும் என்று கூட்டமைப்பு தொடர்ந்து நினைக்குமேயானால் அதற்கான விலையை அதுகொடுத்தே ஆக வேண்டும். அவ்வாறானால், இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஆதரவு தொடர்ந்து இருந்து வந்தாலும், அரசாங்கத்தில் பங்குபெற்று, அவர்களுக்கு பிரதியுபகாரமாக அவர்களது அன்றாட தேவைகளை உணர்ந்தறிந்து, ஆவன செய்வதற்கு வாய்ப்பு கூட்டமைப்பிற்கு இல்லாமலே போய்விடலாம். அப்படி இல்லாமல், தமது மக்களுக்கு தாங்கள் நன்மை செய்ய கடமைப்பட்டவர்கள் என்று அவர்கள் நினைப்பார்களேயானால் அதற்கான வழியில் பயணித்து ஆவன செய்யவேண்டும்.
இது அதிகார பகிர்வு விடயத்தில் அரசின் நிலைப்பாட்டை ஒட்டி செயல்பட வேண்டும் என்ற அர்த்தமல்ல. மாறாக பொலிஸ் மற்றும் காணி உள்ளிட்ட அதிகார பகிர்வு குறித்த விடயங்கள் உள்நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்கும் தங்களது தமிழ் சமூகத்தினருக்கு சேவை செய்வற்கான வழிமுறை மட்டுமே என்ற எண்ணத்தை அந்த மக்களிடமும் அரசு தலைமையிடமும் கூட்டமைப்பு தலைமை ஏற்படுத்த தவறிவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. மாறாக, தற்போது அவர்கள் கோரிவரும் பகிர்வு அதிகாரங்கள் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அட்டவணையில் உள்ளடங்கியிருந்த விடயங்கள் என்றும், அந்த இயக்கத்தின் குறிக்கோளையும் இலக்கினையும் அடையும் திறவுகோலே என்ற எண்ணத்தையும் அரசுதரப்பினரிடம் கூட்டமைப்பு தலைமை தோற்றுவித்துள்ளதாகவும்; எண்ணத் தோன்றுகிறது. அதே எண்ணத்தை கூட்டமைப்பு புலம்பெயர் தமிழினத்தினரிடமும் தோற்றுவித்திருந்தால் அது பிறிதொருவிதமான பிரச்சினைக்கு ஆரம்பம். ஆனால், அதுவே அனைத்திலும் தலையாய பிரச்சினையாகவும் முன்னிற்கும்.
: என். சத்திய மூர்த்தி (தமிழ்மிரர்)
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply