அனைத்து அரசியல் கைதிகளின் அடையாளம் சரத் பொன்சேகா
சரத் பொன்சேகாவை அடைத்து வைத்து அரசாங்கம் அரசியல் செய்கிறது. அவரது சிறைவாழ்க்கை அனைத்து அரசியல் கைதிகளின் சிறை வாழ்க்கைக்கு அடையாளமாகத் திகழ்கிறது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி இன்று கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது, இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
இன்று எமக்கு நீதிமன்ற ஆணையை பொலிஸார் அறிவித்துள்ளனர். நாம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குத் தடை போடுகிறோம் என குற்றஞ்சாட்டப்படுகிறது. நாம் நீதிமன்றத்தை மதிப்பவர்கள். நீதியின் ஆட்சியை வேண்டி நிற்கும் நாம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தடை போடுவோமா? இந்த அரசாங்கம்தான் நாட்டில் ஜனநாயகத்திற்கு தடை போட்டுள்ளது.
இந்த அரசாங்கம்தான் நாட்டில் மக்களின் சுதந்திர வாழ்க்கைக்குத் தடை போட்டுள்ளது. இந்த அரசாங்கம்தான் நாட்டில் நல்லாட்சிக்குத் தடை போட்டுள்ளது. இந்த அரசாங்கம்தான் நாட்டில் நீதியின் ஆட்சிக்கு தடை போட்டுள்ளது. எங்களை நீதிமன்றத்தில் நிறுத்தினால் இதை எடுத்துக் கூறுவோம்.
சரத் பொன்சேகாவுக்கு 40 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வாக்களித்தார்கள். இன்று அவர்கள் அனைவரும் அவரை விடுதலை செய்யச் சொல்லிக் கேட்கிறார்கள். அவருக்கு வாக்களிக்காதவர்களும் அவரின் விடுதலைக்காக இன்று குரல் கொடுக்கிறார்கள். சிங்கள மக்களுடன், தேசிய பிரச்சினைகளில் நாம் கைகோர்ப்போம். சரத் பொன்சேகாவின் விடுதலைக் கோஷத்தில் தமிழ் மக்களையும் நாம் இணைக்கின்றோம். அதன் அடையாளமாகவே நான் இங்கு நிற்கின்றேன்.
அது மாத்திரம் அல்ல, நானும், நண்பர் விக்கிரமபாகுவும் சரத் பொன்சேகாவை அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் சிறை வாழ்க்கை தொடர்பிலான அடையாளமாகவே நாம் பார்க்கின்றோம்.
எப்படி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான இயக்கம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் இணைந்த இயக்கமாக இருக்கின்றதோ, அதுபோல் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான இயக்கமும் ஒரு தேசிய இயக்கமாக மாறவேண்டும்.
விக்கிரமபாகு கருணாரத்ன
அனோமா பொன்சேகா அலரி மாளிகை வாசலுக்கு சென்று மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் மன்னிப்பு கிடைக்கும். அத்துடன் அரச சுகபோகங்களும் கிடைக்கும். பதவிகளும், வரப்பிரசாதங்களும் கிடைக்கும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. அதை நாம் மதிக்கின்றோம். சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும். அதுபோல் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படவேண்டும். நாம் இதை வலியுறுத்துகின்றோம்.
கைதிகள் விடுதலை தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் செயல்படலாம். இது எமது வழி. நானும் மனோ கணேசனும் சரத் பொன்சேகாவுடன் சேர்த்து தமிழ்க் கைதிகள் விவகாரத்தையும் தேசிய இயக்கமாக மாற்ற முயற்சி செய்கிறோம். சரத் பொன்சேகாவிற்கு தமிழ் மக்களும் வாக்களித்துள்ளார்கள்.
வடக்கில், கிழக்கில், மேற்கில் வாக்களித்தார்கள். எனவே தமிழ், கைதிகள் தொடர்பில் கவனம் செலுத்தும் கடமை சரத் பொன்சேகாவிற்கு விடுதலை வேண்டி நிற்பவர்களுக்கும் இருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply