சர்வதேச தலையீட்டில் எவ்விதமான தப்பும் தென்படவில்லை

இலங்கைக்கு நான்கு நாள் பயணமாக சென்றுள்ள, அமெரிக்க இராஜங்கத் துறையில் உலக குற்றவியல் நீதி விவகாரங்களுக்கான அலுவலகத்தைச் சேர்ந்த சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ராப் செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

இதன்போது, இலங்கையில் தற்போது நிலவுகின்ற சகல அரசியல் நிலைமைகள் குறித்தும் பேச்சு நடத்தப்பட்டதாக சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார்.

இலங்கைப் போரின்போது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களும் மனித உரிமைச் சட்டங்களும் மீறப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி சர்வதேசத்தின் கேள்விகள் சிலவற்றுக்கு தாம் இதன்போது ராப் அவர்களிடம் பதிலளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் கூறினார்.

ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம்

இம்மாத இறுதியில் நடைபெற இருக்கின்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை விவகாரம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டுக்குள்ளேயே இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாத பட்சத்தில் சர்வதேச சமூகத்தின் அக்கறை தேவைப்படுவதாகவும் அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தாம் இந்த சந்திப்பில் கருத்துக்களை விளக்கியதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இனப்பிரச்சனைக்கான தீர்வு உள்நாட்டிலேயே எட்டப்பட வேண்டும், வெளிநாட்டு சக்திகள் தலையிடக்கூடாது என்று இலங்கை அரசு கூறவதை ஏற்கமுடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பிரச்சனை உள்நாட்டில் தீர்க்கப்படவில்லை என்பதாலேயே இலங்கை அரசு சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகின்றது என்றும் சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதனாலேயே பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் சர்வதேச சமூகத்துடன் தமது பிரதிநிதிகள் பேசிவருவதாகவும் சர்வதேச தலையீட்டில் எவ்விதமான தப்பும் தென்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply