யுத்த காலத்தில் காணாமல் போன 553 பேர் விபரங்கள் சேகரிப்பு
யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள் குறித்த 553 முறைப்பாடுகள் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் கிடைக்கப்பெற்றிருப்பதாக கூறியுள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அப்பாத்துரை விநாயகமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது;
“யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமற் போனவர்கள் குறித்த விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு காணாமற் போனோர் தொடர்பான விபரங்களை பதிவு செய்யுமாறு விடுக்கப்பட்டட வேண்டுகோளை தொடர்ந்து கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் 31 வரையிலான காலப்பகுதிக்குள் யாழ். குடாநாட்டை சேர்ந்த 553 பேர் காணாமற்போனமை குறித்து உறவினர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் தங்களது குடும்பத்தவர்கள் காணாமற் போனமை குறித்த விபரங்களை குறிப்பிட்டுள்ளதுடன் இதற்கு ஆதாரமாக சத்தியக் கடதாசிகளையும் சமர்ப்பித்துள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் தாங்கள் நேரடியாக இராணுவத்திடம் ஒப்படைத்த குடும்பத்தவர்களை பின்னர் ஒரு போதும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர். இது தவிர இந்த முறைப்பாடுகளில் அனேகமானவை இராணுவத்தால் நேரடியாக கைது செய்யப்பட்டமை மற்றும் வெள்ளை வானில் கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாகவே உள்ளது.
அரசடி சந்தி, வட்டுக்கோட்டை, மாவடி, உடுவில், கொம்மாந்துறை, சாவகச்சேரி, ஈச்சமோட்டை, தெல்லிப்பழை உட்பட பல இடங்களில் வைத்து இவர்கள் காணாமற் போயுள்ளதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர். இது தவிர இராணுவத்தால் கைது செய்யப்பட்டும் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டும் வெள்ளை வானில் கடத்தப்பட்டும் இவர்கள் காணாமற் போயுள்ளனர்.
தமது உறவினர்களை இனந்தெரியாதவர்கள் வீட்டிற்குள் புகுந்து தூக்கிச் சென்றதாகவும் இராணுவ சீருடையில் வந்தவர்களே இவ்வாறு செய்ததாகவும் முறையிடப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தமது கணவரை வட்டுவாகலிலுள்ள இராணுவத்தினரிடம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஒப்படைத்ததாகவும் அதன் பின்னர் அவரைக் காணவில்லை எனவும் முறையிட்டுள்ளார்.
இதேபோன்று ஈச்சமோட்டை வீதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் மற்றும் சித்திரவேல் லிங்கராசா என்ற இருவரையும் உறவினர் ஒருவர் வட்டுவாகலில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் கையளித்ததாகவும் பின்னர் அவர்கள் இருவரிற்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஊரெழுவை சேர்ந்த பெண்மணியொருவர் தனது கணவரை ஊரெழு இராணுவத்தினர் கைது செய்ததாகவும் படை முகாம் அதிகாரி சமாதானத்திற்கு பின்னர் அவர்களை விடுவோம் என தெரிவித்ததாகவும் ஆனால் அதன்பின்னர் அவரை காணவில்லை எனவும் முறைப்பாடு செய்துள்ளனர் என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply