அமெரிக்க இந்திய இராஜதந்திரிகள் சந்திப்பு

இறுதிப் போரில் நடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூறுதல் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசு ஏற்கனவே வழங்கியிருந்த உறுதி மொழிகளின் அமுலாக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இல்லை.

அந்த உறுதி மொழிகளில் எவையும் உரியவாறு ஒழுங்காக நிறைவேற்றப்படவில்லை. இதனாலேயே இலங்கை விடயத்தில் அமெரிக்கா அதிக அக்கறை செலுத்தியுள்ளதாக வாஷிங்டன் இராஜதந்திரிகள் புதுடில்லியிடம் விளக்கிக் கூறியுள்ளனர். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர் மரியா ஒட்டேரியா மற்றும் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் ஆகியோர் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மாத்தாயுடன் இரகசியச் சந்திப்பு நடத்தியுள்ளனர்.

நேற்றுமுன்தினம் இந்தச் சந்திப்பு வொஷிங்ரனில் நடைபெற்றது. முன்னதாக வெள்ளைமாளிகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ரனைச் சந்தித்துப் பேசினார் மாத்தாய். இதன் பின்னரே மரியா மற்றும் பிளேக் ஆகியோருடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்புக்கான பயணம் மேற்கொள்வது, அதன் நோக்கம் என்பன பற்றி அமெரிக்க அதிகாரிகள் இதன்போது மாத்தாயிடம் விரிவாக விளக்கமளித்துள்ளனர். இறுதிப்போரின் பின்னரான நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளின் அமுலாக்கம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லையென்று அமெரிக்கத் தரப்பிலிருந்து இந்திய வெளியுறவுச் செயலரிடம் சுட்டிக்காட்டப்பட்டதாக அறியமுடிந்தது.

இலங்கை தொடர்பான செயற்பாடுகளைக் கண்காணித்து வருவதாக இங்கு குறிப்பிட்டுள்ள இராஜாங்கச் செயலாளர்கள் இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகள் மேம்படுவதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியாவும் ஒத்துழைப்பை வழங்கவேண்டுமெனக் கேட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply