கூட்டமைப்பை விமர்சிக்க தமிழ் மக்களுக்கு மட்டுமே உரிமையுண்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் ஆகியோரின் செயற்பாடுகள் பற்றி விமர்சிக்கவும் கருத்துக்களைக் கூறவும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமே உரிமையும் தகுதியும் உண்டு என கூட்டமைப்பின் பா.உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போதே பா.உ அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தனது உரையில் கிழக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரைகள் கட்டப்படுவது குறித்து தகவல்களைத் தெரிவித்த போது,
இவ்வாறான பயங்கரமான விடயங்களை நீங்கள் கூறும்போது எதனையும் ஆதாரம் இல்லாது பேசக்கூடாது. அது இரு இனத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா என்று பா.உறுப்பினர் அஸ்வர், அரியநேத்திரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கூட்டமைப்பு புலிகளுக்கு வால் பிடித்தவர்கள் என்றும் உங்கள் தலைவர் சம்பந்தன் உங்களை அழைத்துச் செல்லாமல் தான் மட்டும் வெளிநாடுகளுக்குச் சென்று புலம்பெயர் தமிழர்களைச் சந்திக்கிறாரே, அதனால் உங்கள் நிலைமை தொடர்பில் நான் அனுதாபப்படுகின்றேன் எனவும் பா.உறுப்பினர் அஸ்வர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பா.உறுப்பினர் அரியநேத்திரன், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி புலிகள் முற்றாக அழிந்துவிட்டார்கள் என்று கூறியதும், 2012 ஆம் ஆண்டு புலிகள் இருக்கிறார்கள் என்று கூறுவதும் நீங்கள்தான். உங்களுக்கு புலிகளை விட்டால் பிழைப்பும் இல்லை, அரசியலும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தமது பிரதிநிதிகளாகக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கருதி எம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பிலோ அல்லது அதன் தலைவர் சம்பந்தன் குறித்தோ விமர்சிப்பதற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமே தகுதியும் உரிமையும் உண்டு. உங்களுக்கு எந்தவித அருகதையும் இல்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply