உலக பொருளாதாரத்தினை ஆசியமயமாக்க ஈரான் நடவடிக்கை
மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் மையமாகக் கொண்டு இயங்கும் உலகின் பொருளாதாரத்தை ஆசியமயமாக்குவதற்கு ஈரான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் ஐரோப்பாவில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகும் என்று இலங்கையில் உள்ள புதிய ஈரானியத்தூதுவர் மொஹமத் உஷானி பெளர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தொடர்ந்தும் இலங்கைத் தேயிலையை வாங்குமென்றும் அத்துடன் இலங்கை உடனான தனது நட்புறவை எதிர்காலத்தில் மேலும் ஈரான் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே ஈரானியத்தூதுவர் மொஹமத் உஷானி பெளர், இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்;
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் விதித்துள்ள தடையினால் இலங்கைக்கான ஈரான் நாட்டின் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட மாட்டாது. தொடர்ந்தும் ஈரான் மசகு எண்¦ணையை இலங்கைக்கு வழங்கும்.
மேற்குலக நாடுகளை விட வளர்முக நாடுகளுடன் நட்புறவை வைத்திருப்பது பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது நல்லதென்று ஈரான் உணர்ந்திருக்கிறது.
ஈரானிலிருந்து பிறநாடுகள் பொருட்களை வாங்குவதற்கு பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கியிருந்தால், பொருட்களை பண்டமாற்று முறையில் அந்த நாடுகளுக்கு வழங்க ஈரான் தயாராக இருக்கின்றது.
ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நட்பு நாடுகள் எமது நாட்டிலிருந்து எண்ணெயை வாங்குவதன் மூலம் எமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு உதவி செய்கின்றன.
மேற்கு நடுகளும், அமெரிக்காவும் ஒருதலைப்பட்சமாக ஈரான் மீது விதித்த தடைகளை சீனாவும் இந்தியாவும் ஆதரிக்கவில்லை. இதற்காக அவ்விரு நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் ஈரானின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. ஆசியாவில் ஈரான் வலுவான பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதனால் ஆசியாவின் எரிசக்தி சந்தை வலுவடைந்து ஆசிய நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்காவும் ஈரான் மீது விதித்துள்ள தடைகள் தமது நாட்டிற்கு சிறிதளவேனும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. வறிய நாடுகளின் பொருளாதாரம் வலுவற்று இருக்கின்ற காரணத்தினால் இந்த தடைகளினால் வறிய நாடுகளே பாதிக்கப்படும்.
குறிப்பாக உலகில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதால் இந்த சிறிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply