வட மத்திய மாகாணத்தில் வாழும் சகலருக்கும் சிறுநீர் பரிசோதனை

வடமத்திய மாகாணத்தில் வாழுகின்ற சகலரும் அடுத்தாண்டு (2013) சிறுநீர்ப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று பதில் சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்கா நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.

சிறுநீரகப் பாதிப்புக்கு வட மத்திய மாகாணத்தில் அதி களவிலானோர் உள்ளானதற்கான காரணத்தைக் கண்டறியும் திட்டத்தின் கீழேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட விருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, சிறு நீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட இரத்தம், சிறுநீர், நகம் மற்றும் தலைமயிர் என்பன மேலதிகப் பரிசோத னைக்காக பெல்ஜியம் நாட்டு மருத்துவ ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவற்றின் ஆய்வு அறிக்கை வெகுவிரைவில் கிடைக்கப் பெறும். அதற்கேற்ப நட வடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணி பாராளு மன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கா எழுப்பிய சபை கவனயீர்ப்பு வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே பதிலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பதில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:- சிறுநீரகப் பாதிப்பு தொடர்பாக 2000ம் ஆண்டு முதல் வழமைக்கு மாறாக பதிவாகும் நிலைமையை அவதானிக்க முடிந்தது. அதனால் அதற்கான காரணத்தைக் கண்டறியவும், பாதிப்புக்கான காரணியைத் தவிர்ப்பதற்கும், பாதிப்பைக் குணப்படுத்துவதிலும் அன்று முதலே விஷேட கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கென விஷேட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுக்களை ஈடுபடுத்தி ஆய்வுகள் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளன. என்றாலும் இப்பாதிப்புக்கான சரியான காரணிகள் இற்றைவரையும் இனம் காணப்படாதுள்ளன. என்றாலும் வட மத்திய மாகாணத்தில் நீரில் அதிக புலோரைட் காணப்படுவதும், தண்ணீரின் உவர் தன்மை (கியூல்)யும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. அத்தோடு வட மத்திய மாகாண விவசாயிகளே இப்பாதிப்புக்குப் பெரிதும் உள்ளாகின்றனர்.

இதன் காரணத்தினால் அனுராதபுரம் மாவட்டத்தில் இப்பாதிப்பு அதிகம் காணப்படுகின்ற பிரதேசங்களில் வாழும் மக்களுக்கான குடிநீரை சுத்திகரிக்கவென 12 மில்லியன் ரூபா செலவில் விஷேட வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இப்பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இரத்தம் சுத்திகரிக்கப்படுவது மிக அவசியம். அதனால் கொழும்பு, குருணாகல், மாளிகாவத்தை, யாழ்ப்பாணம், அனுராதபுரம், பொலன்னறுவை, கராபிட்டி ஆகிய ஆஸ்பத்திரிகளில் சிறுநீரகப்பாதிப்புக்கு உள்ளானவர்களின் இரத்தத்தை சுத்திகரிக்கவென 82 டயலிஸிஸ் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கென அரசாங்கம் 292 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சுமார் ஐயாயிரம் பேர் மாதா மாதம் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்கு அரச ஆஸ்பத்திரிகளுக்கு வருகின்றனர். இவர்களது மருத்துவ சிகிச்சைக்கென 237 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளான 742 பேருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. சிறுநீரகப் பாதிப்பு காணரமாக 191 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட மத்திய மாகாணத்தில் மாத்திரம் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்களாக 13 ஆயிரத்து 811 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். வட மத்திய மாகாணத்திலுள்ள பிரதான ஆஸ்பத்திரிகளில் சிறுநீரகப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென தனியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பங்களுக்கு மாதா மாதம் ஐநூறு ரூபா முதல் 1500 ரூபா வரை சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக விஷேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதே நேரம் இக்கொடுப்பனவை மூவாயிரம் ரூபா வரை அதிகரிக்கும் யோசனையை மாகாண சபை முன்வைத்துள்ளது. இந்த யோசனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply