விடுதலைப் புலிகளை ஐ.நா.விலும் தடைசெய்ய இலங்கை முயற்சி எடுப்பதாக தகவல்

விடுதலைப் புலிகள் அமைப்பை ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் உள்ளடக்குவதற்கு இலங்கை அராசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பிரேரணையொன்றை முன்வைத்து அதன் ஊடாக விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வதற்கான முயற்சிகளை இலங்கை முன்னெடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறுகின்றன.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்கா மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதற்கமைய விடுதலைப் புலிகள் அமைப்பையும் தடைசெய்யும் முயற்சிகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை பயங்கரவாதத்தை தெளிவாக வரையறுத்துள்ளபோதும், விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னமும், ஐ.நா.வால் தடைசெய்யப்படவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட வேண்டும். இதற்காக நாம் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு தரப்பினரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். புலிகள் அமைப்பைத் தடைசெய்வதற்கான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம். இந்த வருட இறுதிக்குள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஐ.நா.வால் தடைசெய்யப்பட வேண்டும் என்பதே எமது இலக்கு என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply