பொலிஸ் அதிகாரம் இல்லாவிட்டால் அதிகாரப் பகிர்வில் அர்த்தமில்லை

மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டியது அவசியம். பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாவிடின் அதிகாரப் பகிர்வின் அர்த்தம் என்ன? அதன் நோக்கமே நிறைவேறாமல் போய் விடும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரம் இன்றி சட்டங்களை நடைமுறைப் படுத்த முடியாத அதிகார மற்ற சபைகளாக மாகாண சபைகள் இருப்பது அதிகாரம் எதுவுமே வழங்கப்படாத செயற்பாட்டை விட மோசமான தாகும்.

பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது தற்போதைய அரசியலமைப்பின் ஓர் அங்கம் என்பதாலும் கடந்த கால அரசியலமைப்பு மறு சீரமைப்பு யோசனைகளில் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளமையினாலும் அதனை அமுல்படுத்தாமல் இருக்கின்றமைக்கு நியாயமான காரணத்தைக் கூற முடியாது எனவும் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் அரசு முன்னுக்குப் பின் முரணான வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பொலிஸ் அதிகாரத்தைப் பகிர முடியாது என்று ஜனாதிபதி பகிரங்கமாகக் கூறினாலும் நாட்டின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதாகவும் அதனை அடிப்படையாகக் கொண்டு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்குச் செல்வதாகவும் ஜனாதிபதி இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் கூறியுள்ளார். கிருஷ்ணா அந்த விடயத்தைக் கூறியபோது அதனை எதிர்க்காத ஜனாதிபதி தற்போது அது தொடர்பில் தனக்குப் பொறுப்பு இல்லை என்று காட்ட முயற்சிக்கின்றார்.

பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை அரசுக்குத் தெளிவாகத் தெரியும். அப்படியானால் அரசின் நிலைப்பாடு என்ன? பொலிஸ் அதிகாரத்தைப் பகிர வேண்டியதன் அவசியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாகத் தெரிவித்துவருகின்றது.

இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவாக பொலிஸ் அதிகாரத்தைப் பகிரும் செயற்பாடு அவசியமாகும். விசேடமாக அனைத்து மாகாணங்களுக்கும் பொலிஸ்படை ஒன்றை உருவாக்குவது அரசியலமைப்பின்படி அவசியம். தற்போது அரசியலமைப்பின் கீழ் அதிகாரத்தைப் பகிர்வதற்கு தேவையான ஏற்பாடுகளில் 9 ஆவது பிரிவுக்கு அமைய பொலிஸ் அதிகாரம் குறித்து கூறப்பட்டுள்ளதுடன் மாகாணசபை பட்டியலில் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளது.

எமது அரசியலமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதிப்படுத்தலானது அயல் நாடு ஒன்றின் உயர் அதிகாரியிடமிருந்து தெரியவேண்டியுள்ளமை சிந்திக்கவேண்டிய விடயமாகும். எவ்வாறாயினும் தற்போது உறுதிப்படுத்தல் கிடைத்துள்ள நிலையில் அதனை நடை முறைப்படுத்தும் நம்பிக்கையைக் காட்ட வேண்டும்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் 1995, 1997, 2000 ஆம் ஆண்டுகளில் வந்த யோச்னைகள் மற்றும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை என்பவற்றில் கூட மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. பொலிஸ் அதிகாரத்தைப் பகிரவேண்டும் என இதில் கூறப்பட்டுள்ள நியாயப்படுத்தல்கள் பொதுவான சிங்கள மக்களின் கருத்து இதில் உடன்பட்டுள்ளது என்பதனை காட்டுகின்றதுஎன்றார் அவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply