ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களும்

உலகப் பொலிஸ்காரனான அமெரிக்காவின் கவனம் எண்ணெய் வளமிக்க நாடான ஈரான் மீது திரும்பி விட்டதை உலகம் அறிந்த வண்ணமுள்ளது. தனக்கு நிகராக அல்லது தனது பணியை ஒத்த பணியை பிறிதொரு நாடு செய்யக்கூடாது அல்லது சவாலாக இருக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து தட்டிப்பறிப்பது அமெரிக்காவுக்கு கைவந்த கலையாகும்.

இந்தப் பின்னணியில் மசகு எண்ணெய் இறக்குமதியில் கூடுதலாக தனது நேச நாடான ஈரானை நம்பியிருக்கும் இலங்கைக்கு ஈரான் மீதான அமெரிக்க தடைகள் மசகு எண்ணெய் தொடர்பில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஈரான் மீதான தனது தடைவிதிப்புக்களில் இருந்து விதிவிலக்களிக்குமாறு இலங்கை அமெரிக்காவை கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய தடை நடவடிக்கை பொருளாதாரத்தை மோசமான முறையில் பாதிப்படையச் செய்யலாம் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

விளக்கமளிப்பு

விதித்த தடை முறையாக அமுலாக்கம் காண்கையில் அரசாங்கம் எதிர்நோக்கக் கூடிய பிரச்சினைகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க அதிகாரியிடம் விளக்கிக் கூறப்பட்டுள்ளதாம். முப்பது வீதமான மசகு எண்ணெய், 70 வீதமான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் உற்பத்திகள் உள்ளடங்கக்கூடிய ஈரானிடமிருந்தான எண்ணெய் இறக்குமதி நான்கு மாத கடன் வசதியை வழங்குவதாக துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்தார். இலங்கைக்கு சலுகைகள் வழங்கப்படாவிட்டால், அமெரிக்க தடைவிதிப்புகள் இவ்வாண்டு ஜுன் மாதமளவில் பொருளாதாரத்தை கடிக்கத்துவங்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மாற்று வழி

ஓமான் போன்ற மசகு எண்ணெய் வழங்குனர்களை அரசாங்கம் நாட நேரிடலாம் என்று குறிப்பிட்ட அமைச்சர் அமெரிக்க தடைகளின் ஒரு பெரிய அபாயம் சபுக்கஸ்கந்த எண்ணெய் சுத்தி கரிப்பு நிலைய பணிகள், குறைவடையலாம் அல்லது நின்று போகலாம் என்பதை சுட் டிக்காட்டத் தவறவில்லை. வேறு வழிகளை தேடுவதன் மூலம் இந்த நிலமையை தவிர்ப்பதற்கான சிறந்த முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.

துன்புறுத்தல்

ஈரானின் மத்திய வங்கியோடு தொடர்புபட்ட நிறுவனங்கள் மீதான தடைவிதிக்கும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியதன் விளைவு வேண்டியோ வேண்டாமலோ ஈரானிய எண்ணெயை கொள்வனவு செய்யும் நாடுகளை இடையூறுகளுக்குள் ளாக்கியுள்ளது எனலாம். ஆனால் அமெரிக்காவோ ஏனைய நாடுகளையன்றி ஈரானைத் துன்புறுத்துவதே தனது நோக்கம் என்கிறது. எவ்வாறாயினும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைத்த இலங்கை ஜனாதிபதி – அமெரிக்க – ஐரோப்பிய யூனியன் தடைகள் ஈரானைத் தண்டிப்பதன்றி எம்மைப் போன்ற சிறிய நாடுகளைத் தன்டிப்பதையே பொருள் படுத்தும் என்றவாறு கூறினார்.

பாதிப்பு

ஈரானின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதியில் இலங்கை ஒரு சிறிய கொள்வனவாளராக இருந்தாலும் நாட்டின் 90 வீதமான மசகு எண்ணெய் இறக்குமதி ஈரானிலேயே தங்கியுள்ளது. அந்த வகையில் குறித்த தடை இலங்கையை மோசமாக பாதிக்கும் என்றே உணரப்படுகிறது. 45 வருடங்கள் பழமை வாய்ந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பான் இயந்திரம் ஈரானிடமிருந்து கிடைக்கக் கூடியதும், சவூதியில் இருந்து கிடைக்கப்பெறும் சில வகை மசகு எண்ணெய் வகைகளையே கையாளக்கூடியது என்ற தகவல் நிலமையை மேலும் மோசமாக்கக்கூடும்.

கொள்வனவாளர்

இந்த விடயங்கள் தொடர்பில் இலங் கையைப் பொறுத்தவரையில் தவறுகள் ஏதும் இல்லாவிடினும் ஈரானுடன் இலங்கை சிநேகபூர்வ உறுவுகளையே பேணி வரு கிறது. அந்த நாடு எண்ணெய் இறக்குமதிக்கு ஏழு மாத கடன் வசதிகளை வழங்குவதற்கு மேலதிகமாக ஒரு பெரிய தேயிலை வாங்குனராகவும், பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் உதவுனராகவும் இருந்து வருகிறது. அதேநேரம் அமெரிக்காவும், நாட்டின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட நாடுகளுடன் நீண்டகால நல்லுறவுகளை கொண்டுள்ள இலங்கை ஒரு புறமிருக்க, ஆசியாவின் பெரிய நாடுகளாக பொலிவு பெற்றுவரும் இந்தியாவும், சீனாவும், ஈரானுக்கு எண்ணெய்க்கான கொடுப்பனவை மேற்கொள்ளும் வேறு வழிவகைகளைப் பற்றி தேடிக்கொண்டுள்ள நிலையில் அமெரிக்கத் தடைகளை சட்டை செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

அணு ஆற்றல்கள்

இத்தகைய தடைகளை சுமத்துவதன் அமெரிக்க அடிப்படைக்குறிக்கோள்கள் அடிப்படைக் காரணமின்றியே காணப்படுவதாக குறை கூறப்படுகிறது. ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் ஐரோப்பிய யூனியன் நேரடித்தடை விதித்துள்ளது. இஸ்லாமியக் குடியரசை, அதன் அணுத்திட்டத்திலிருந்து முடக்குவதற்காகவே குறிக்கோள் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஈரான் அணு ஆயுதத்தை விருத்தி செய்வதில் ஈடுபட்டு வருவதாக நம்பப்படுகிறது. அதேநேரம் ஈரான் தம்மக்கத்தே அணுகுண்டைக் கொண்டிருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் அமெரிக்க அதிகாரிகள் அணு ஆயுதம் விருத்தி செய்யப்படவில்லை ஆனால் அணு ஆற்றல்களை அபிவிருத்தி செய்ய முற்படுவதாக சுட்டிக்காட்டினார்.

எந்த வகையிலும் இத்தகைய குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தும் வகையில் உறுதியான சான்றுகளில்லையாம். மேற்குலகம் அந்த நாட்டின் மீது விதித் துள்ள தடைகள் சந்தையில் கொந்தளிப்பைத் தோற்றுவிப்பதிலும், இலங்கை போன்ற நாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்வதில் கடுமையான அசெளகரி யங்களையுமே வெற்றிகண்டுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

உற்பத்தியும் ஏற்றுமதியும்

சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் ஈரானே. அமெரிக்க சக்தி தகவல் நிர் வாகத்தின்படி உலகில் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரும் ஈரான். சக்தி தகவல் நிர்வாகத்தின் தகவல்களின் படி 2011 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதி வரை சீனா 22%, ஐரோப்பிய யூனியன் 18%, ஜப்பான் 14%, இந்தியா 13%, தென்கொரியா 10%, இத்தாலி 7%, துருக்கி 7%, ஸ்பெயின் 6%, தென்னாபிரிக்கா 4%, இலங்கை 2% ஏனைய நாடுகள் 10% என்ற அடிப்படையில் ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டிருக்கிறது. ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மொத்த எண்ணெய் விகிதாசாரம் வருமாறு இலங்கை 93%, துருக்கி 51%, தென்னாபிரிக்கா 25%, கிரேக்கம் 14%, இத்தாலி 13%, ஸ்பெயின் 13%, இந்தியா 11%, சீனா 11%, ஜப்பான் 10%, தென்கொரிய 10%

அச்சுறுத்தல்

நிலமைகள் இவ்வாறிருக்கும் தருணத்தில் ஐ.நா. மனித உரிமைகள் கவுண்ஸில் அமர்வுகளை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு ஈரான் மீதான அமெரிக்க தடைகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒரு அச்சு றுத்தலாக உள்ளது எனலாம். 2010 ஜுன் 09 ஆம் திகதி ஐ.நா. பாதுகாப்புச் சபை ஈரானின் அணுத்திட்டம், இராணுவ நடவ டிக்கைகள் போன்றவற்றின் மீது மேலதிகமான சர்வதேச தடைகளை சுமத்தி தீர்மானம் நிறைவேற்றியது. அமெரிக்க ஜனாதிபதி ஈரானின் புரட்சிப் பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை வங்கி சக்தித்துறை போன்றவற்றை இலக்காகக் கொண்ட தடைவிதிப்புச் சட்டத்துக்கு கையெழுத்திட்டார்.

ஈரானின் விருப்பம்

எது எப்படியிருந்த போதிலும், அமெரிக்க தடைகளையும் மீறி இலங்கையின் மசகு எண்ணெய் தேவையை நிறைவேற்றுவதற்கு ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளமை இலங்கைக்கு வேறு விளைவுகளை கொண்டு வரலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மிகப் பெரிய ஆடைச்சந்தையை இழக்க நேரிடலாம். அது வேறு வர்த்தக அல்லது பொருளாதார தடைகளுக்கு தாவலாம். அதாவது இங்கிருந்து துறைசார் முக்கியஸ்தரை அனுப்பி ஈரானுடன் பரஸ்பர திட்டங்களை புதிய திட்டங்களை வகுத்தமைத்துக்கொள்ளல் வெற்றியளிக்கலாம்.

ஐக்கிய ராச்சிய கார்டியன் பத்திரிகைக் குறிப்பொன்றில் ஈரான் அணு ஆயுத நிகழ்ச்சித்திட்டத்தில் ஈடுபடுவதான நம்பத்தகுந்த சான்று கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். மிகப்பிந்திய சர்வதேச அணு சக்தி முகவராண்மை கூட மறுபடியும் குறித்த விவகாரத்தை காண்பிக்கத் தவறியுள்ளதாம்.

எச்சரிக்கை

ஈரானுடைய அணு வசதிகளை எதிர்த்து மேற்கொள்ளப்படக்கூடிய அமெரிக்க அல்லது இஸ்ரேலின் ஒரு தாக்குதல் மத்திய கிழக்கில் மாபெரும் கிளர்ச்சி கலகத்தை தூண்டலாம் என்றும் ஈரானும் பிராந்தி யத்திலுள்ள அதன் நேச சக்திகளின் ஆதரவுடன் தாக்குதலுக்கு எதிர்த்து முகம் கொடுக்க முற்படலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஒரு இஸ்ரேலிய தாக்குதல் பலரும் வருந்தக்கூடிய முரண்பாட்டையும் மத்திய கிழக்கை மோதலுக்குள் இழுத்துவிடும் அபச குணத்தையும் தோற்றுவிக்கலாம்.

உரிமை

ஈரானுடைய இந்த அணுத்திட்டம் தொடர்பில் ஏன் இந்தத் தீவிரமான கண்ணோட்டம் என்று ஒருவர் கேட்டகலாம். சமாதான நோக்கங்களுக்காக அணுத் தொழில் நுட்பத்தை அபிவிருத்தி செய்யும் அதன் உரிமையையும் அணு உற்பத்தி பெருக்கத்துக்கு எதிரான உடன்படிக்கையின் ஒரு ஒப்பந்ததாரர் என்றும் ஈரான் வலியுறுத்திக் கூறுகிறது. நிஜமாகவே ஈரான் ஒரு அணு ஆயுதத்தை விருத்தி செய்ய விரும்பினால் மேற்கு யுத்த வெறிபிடித்தவர்களின் நடவடிக்கைகளே அவ்வாறு சுய பாதுகாப்புக்காக இதனைச் செய்ய நோக்கங் கொண்டிருக்கலாம் என வாதிடலாம். அவ்வாறு அணு ஆயு தம் கொண்ட ஈரானே மத்திய கிழக்கின் பலத்தை சமனிலைப்படுத்த வல்லதாகும். ஆனால் ஈரானை நோக்கிய அமெரிக்காவின் விரோதத்துக்கான உண்மையான காரணம் முஸ்லிம் நாடு சுயாதீனக் கொள்கையை கடைப்பிடிக்கிறது. மேற்குலக செல்வாக்கை தவிர்த்து அமெரிக்கா விரும்பாத சக்தி களுடன் உறவு பூணுகிறது என்பதனாலாகும்.

விலை அதிகரிப்பு

இதேவேளை தற்போதைய சராசரி விலையான 100 அமெரிக்க டொலரிலிருந்து 150 அமெரிக்க டொலர் வரையான விலை அதிகரிப்புக்கான எதிர்வு கூறல் எண்ணெய்க்கான கேள்வியை பெருகச் செய்ய இடமுண்டு. அத்தகைய அதிகரிப்பு இயல்பாகவே மற்றுமொரு எரிபொருள் அதிகரிப்பை உள்நாட்டில் ஏற்படுத்தும்.

சிநேகிதம்

இலங்கையின் ஒரு உறுதியான நண்பன் ஈரான் என்பதில் சந்தேகமில்லை. இந்த சிநேகிதம் இலங்கை ஜனாதிபதிக்கும், ஈரான் ஜனாதிபதிக்கும் இடையிலான நெருங்கிய நட்பில் பிரதிபலிக்கிறது. ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவினால் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் காரணமாகவே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு சற்று சிக்கலுக்குள்ளாகியிருப்பதாக உணரப்படுகிறது. பிற நாடுகளிடம் அமெரிக்கா ஈரானிட மிருந்து கொள்வனவு செய்ய வேண்டாம் என்று அழுத்தம் கொடுப்பதே நமது நாட்டை குழப்பத்திலாழ்த்தியுள்ளது. ஜனாதிபதிக்கும் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளையில் மத்திய வங்கியின் ஆளுநர் ஈரானிய எண்ணெயை கொள்வனவு செய்ய அமெரிக்க டொலர்களை பாவிப்பதன் மீதான தடை உட்பட புதிய விடயங்களை பேசுவதற்காக விரைவில் தெஹ்ரானை நோக்கி பயணிக்கவுள்ளதாக அரச வட் டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. அரச வங்கி ஒன்றின் கிளையை தெஹ்ரானில் திறந்து வைப்பதன் ஊடாக ஈரானிலிருந்து எண்ணெய் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளையில் அமெரிக்க – இலங்கை ஈரானுடனான அதன் கடன் சலுகைகளை அடைந்து கொள்ளும் வகையில் ஒரு சர்வதேச நிதி நிறுவனத்திடமிருந்து ஏற்பாடு செய்ய உடன்பட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது. அதேநேரம் இலங்கை – ஈரானுடன் கொண்டுள்ள அதன் வர்த்தக உறவுகளுக்கு அந்த நாடு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளில் விதிவிலக்களிக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கைக்கு அமெரிக்காவிடமிருந்து சாதகமான பதில் கிட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply