இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர்
முல்லைத்தீவு மீதான இறுதித் தாக்குதலைப் படையினர் எவ்வேளையிலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாரம் இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும், ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸியுமே அடுத்த ஓரிரு தினங்களில் கொழும்பு வரவுள்ளனர்.
வடக்கே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு, தமிழக முதலைமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழகக் கட்சிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்தும், பலமுறை கடிதம் மூலமும் கோரியிருந்தன. எனினும் இக்கோரிக்கையை ஏற்க இந்திய மத்திய அரசு மறுத்த நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் கொழும்பு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றுவதற்கு முன்னரே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. எனினும் கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னரே இந்திய மத்திய அரசு தனது வெளிவிவகாரச் செயலாளரை கொழும்புக்கு அனுப்புகிறது.
இலங்கை வரும் சிவ்சங்கர் மேனன் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசியல் தீர்வு குறித்த இந்தியாவின் அக்கறையை தெரிவிக்கும் அதேநேரம் விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் இலங்கைப் படையினர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்யும் பட்சத்தில், ராஜீவ் கொலை தொடர்பான விசாரணைக்காக அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்துவாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் போரை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக வெளிவிகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அனுப்ப மறுத்த இந்தியா, தற்போது முல்லைத்தீவுக்கான இறுதிப் போர் தொடங்கவுள்ள நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவரைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தவே சிவ்சங்கர் மேனனை அனுப்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் பிரணாப் முகர்ஜியை அனுப்பக்கூடிய சூழ்நிலை இல்லையென்பதாலேயே அவருக்குப் பதிலாக சிவ்சங்கர் மேனனை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது அவர் யுத்த நிறுத்தம் குறித்து எதுவுமே பேசமாட்டாரெனவும் ஆனால், மீண்டும் பேச்சுக்குச் செல்லுமாறு கேட்பாரெனவும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேவேளை இவரது விஜயம் குறித்து கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ கூறுகையில்,
”இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புத் துறை செயலர் விஜய் சிங் உள்ளிட்டோர் அடங்கிய குழு எதிர்வரும் 15 அல்லது 16ஆம் திகதி இலங்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் சமீபத்தில் இலங்கை வருமாறு இந்திய அரசுக்கு அழைப்பு விடுத்தனர். இதன் அடிப்படையிலேயே இந்திய தூதுக் குழுவினர் இலங்கைக்கு வருகின்றனர். தற்போது இந்தியாவும் இலங்கையும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன” என்றார்.
அதேநேரம் ஜப்பானிய விசேட தூதர் யசூசி அகாஸியும் அடுத்த சில தினங்களில் கொழும்பு வரவுள்ளார்.
சிவ்சங்கர் மேனனும் அகாஸியும் அரசு தரப்பினருடன் பேச்சுகளை நடத்தும் அதேநேரம், அகாஸி கிழக்கிற்கும் விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply