அமெரிக்கா சீனா இடையே விரிவான பேச்சு

சந்தை அடிப்படையிலான அன்னியச் செலாவணி மதிப்பிடுதலை துரிதப்படுத்துவது, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளிடையே விரிவான பேச்சு நடைபெற்றது.

சீன துணை அதிபர் ஜி ஜிங்பிங் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

வளர்ச்சிக்கான செயல் திட்டத்தில் இடம் பெற்றுள்ள அன்னியச் செலாவணி மதிப்பிடுதல் சீர்திருந்தம், குறுகியகால பாதிப்பை தவிர்க்கும் வேலைவாய்ப்பு, நிதி ஸ்திரத்தன்மை, இடைக்கால வளர்ச்சியை உறுதி செய்தல் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடிவு செய்யப்பட்டதாக இருநாட்டு கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

சர்வதேச அளவில் பணப் புழக்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, முதலீடுகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஆகியவற்றை எதிர்கொள்ள இந்த நடவடிக்கைகள் உதவும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே அன்னியச் செலாவணி மதிப்பிடுவதில் பிரச்னை உள்ளது. சீனா தனது நாணயத்தை குறைந்து மதிப்பீடு செய்வதை நிறுத்தி, சந்தைக்கு ஏற்ப மதிப்பிட வேண்டும் என்று அமெரிக்கா கோரி வருகிறது.

இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டாவும், சீனத் துணை அதிபர் ஜிங்பிங்கும் ஒப்புக் கொண்டுள்ளனர். மனிதநேய பணிகள், கடற்கொள்ளையைத் தடுப்பது ஆகிய நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பெனட்டா அப்போது கேட்டுக் கொண்டார்.

வேலைவாய்ப்பைப் பெருக்கும், நீடித்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருதரப்பும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. வர்த்தகச் சமநிலை, தத்தமது நாடுகளில் இருதரப்பு முதலீட்டை அதிகரிக்க கொள்கை வகுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் அமெரிக்க பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பதை சீனா விரும்புகிறது. ஐரோப்பிய நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து தொடர்ந்து கருத்து பரிமாறிக் கொள்வது, நிதி நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு உதவும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply