இந்திய வர்த்தகக் குழுவுக்கு அமெரிக்கா நிர்பந்தம்
ஈரானுக்கு இந்திய வர்த்தகக் குழுவை அனுப்பும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவுக்கு கடிதம் எழுதப் போவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மிகப்பெரிய வர்த்தகக் குழுவை ஈரானுக்கு அனுப்புவது என்ற முடிவு மிகுந்த கவலையளிக்கிறது. ஈரானில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதற்காக இந்தியக் குழு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதால் அந்நாட்டின் மீது ஐரோப்பிய யூனியன் நாடுகளும், அமெரிக்காவும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ஈரானிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனாவை, எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக் கொள்ளுமாறு சமீபகாலமாக அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் பெருமளவு ஈரான் பூர்த்தி செய்வதால், அதைக் குறைக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்நிலையில் அதிக எண்ணிக்கையிலான வர்த்தகக் குழுவினர் ஈரான் செல்லவுள்ளதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டீவ் இஸ்ரேல், ரிச்சர்ட் ஹன்னா, அணு ஆயுதங்களை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் இந்தியாவுக்குள்ள பொறுப்புணர்வை அமெரிக்கா நன்கறியும். ஆனால் அதற்காக சர்வதேச கட்டுப்பாடுகளை மீறி அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு ஆதரவாக இருப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது என்று அமெரிக்கா கருதுகிறது. சர்வதேச அணுசக்தி முகமையில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததையும் அமெரிக்கா பாராட்டுகிறது. அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலை ஈரானுக்கு அனுப்புவதில்லை என்ற முடிவடையும் வரவேற்கிறது. அத்துடன் ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிவாயுவைக் கொண்டு வரும் திட்டத்தை இந்தியா கைவிட்டதையும் அமெரிக்கா வரவேற்கிறது என்றும் பிப்ரவரி 15-ம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இப்போதைய சூழலில் ஈரானில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை ஆராய குழுவை இந்தியா அனுப்புவது சரியல்ல. மேலும் ஈரானுடன் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டிய அவசியமும் தேவையற்றது. எனவே குழுவை அனுப்பும் முடிவை இந்தியா மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
அமெரிக்காவின் நட்பு நாடுகள் அனைத்துமே தங்களது எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள மாற்று வழிகளைக் கண்டறிந்து வருகின்றன. அல்லது ஈரானுக்கு மாற்றாக வேறு வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. அதைப்போல இந்தியாவும், சீனாவும் கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால், சர்வதேச நிர்பந்தத்துக்கு ஈரான் பணியும். அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்தும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே அணு ஆயுதம் தயாரிக்கும் ஈரானுக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய வர்த்தக்க குழு செல்லும் முடிவைக் கைவிடுமாறு இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஈரானின் தலைமை இப்போது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் சூழலில் இந்திய வர்த்தகக் குழு அங்கு செல்வது சரியான முடிவாக இருக்காது என்று அந்த அமைப்பின் தலைவர் மார்க் வாலஸ் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையில் பாகிஸ்தான் சென்றுள்ள 120 பேரடங்கிய வர்த்தகக் குழுவினர் அங்கிருந்து ஈரானுக்குச் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply