கூட்டமைப்பு-சிவில் சமூகப் பிரதிநிதிகள் சந்திப்பு புரிந்துணர்வுக்கு வழிவகுந்துள்ளது: சிறிரெலோ செயலாளர் உதயராசா

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிவில் சமூகப் பிரதி நிதிகளுக்கு மிடையில் இடம் பெற்ற சந்திப்பானது வரவேற்கத்தக்க செயற்பாடாகும். இதன் மூலம் இரு தரப்பிற்கு மிடையில் நிலவி வந்த சந்தேகங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இத்தகைய பேச்சுவார்த்தைகள் தொடர்வது சிறந்ததாகும் என்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் சிவில் சமூக பிரதி நிதிகளுக்குமிடையில் நேற்று முன்தினம் வவுனியாவில் இடம் பெற்ற சந்திப்பானது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் சிவில் சமூக பிரதி நிதிகளுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேச்சு வார்த்தை அமைந்துள்ளது.

இனப்பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பான பேச்சு வார்த்தை விவகாரத்தில் கையாளவேண்டிய விடயங்கள் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை சிவில் சமூகப்பிரதிநிதிகள் எடுத்து விளக்கியுள்ளனர். இதேபோல் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் காணப்பட்ட சந்தேகங்களை தமிழ் கூட்டமைப்பினர் தெளிவுபடுத்தியிருக்கின்றனர். இதனால் இரு தரப்பிற்குமிடையில் தற்போது நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலை தமிழ் சமூகத்தின் விடிவுக்கு பக்கபலமாக இருக்கும்.

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் சிவில் சமூகத்தினரையும் இணைத்து இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் உறுதியான நிலைப் பாட்டை எடுக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் தீர்வினை பெறுவதற்கான வழி பிறக்கும்.

தமிழ் மக்களின் மனங்களை உணர்ந்து அவர்களின் விருப்பு, வெறுப்புக்களை அறிந்து தமிழ் தலைமைகள் செயற்பட வேண்டியது அவசியமாகும். அதற்கு வழிசமைக்கும் வகையில் சிவில் சமூகத்தினருடனான பேச்சுக்கள், கலந்துரையாடல்கள் தொடரவேண்டும். சகல தரப்பினரின் இணக்கத்துடன் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வைப் பெற பாடுபடுவதே எம்மனைவரினதும் தற்போதைய கடமையாக உள்ளது. இதற்கிணங்க நாம் செயற்படவேண்டும்.

http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=20_02_2012_002_005&mode=1

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply