நாடு நகர திட்டமிடல் சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு: ஸ்ரீ. முஸ்லிம் காங்கிரஸ்
’’ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடு மற்றும் நகர திட்டமிடல் சட்ட மூலத்தை எதிர்ப்பது” என்ற தீர்மானத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது. பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்படவுள்ளதால் அவசர அவசமாக இச்சட்ட மூலம் கொண்டுவரப்பட வேண்டிய அவசியம் இல்லையென்றும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலளார் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி மேலும் தெளிவுபடுத்துகையில்,
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் கூடியது. இதன் போதே நாடு நகர திட்டமிடல் சட்ட மூலத்தை எதிர்ப்பதாக தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்படவுள்ளது.
இதில் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. இதன்போது இச்சட்ட மூலம் தொடர்பாக விவாதிக்க முடியும். அப்போது எமது கருத்துக்களையும் முன் வைப்போம். இதனை அரசாங்கம் ஆதரிப்பதால் பங்காளிக் கட்சியான நாமும் ஆதரிக்க வேண்டுமென்ற கடப்பாடு கிடையாது.
எமது கருத்துக்களையும் முன் வைக்கும் உரிமையுண்டு. இச் சட்ட மூலமானது மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை பறிப்பதாக அமைந்துள்ளது. எனவே சிறுபான்மை இன மக்கள் பாதிப்படையும் நிலை காணப்படுகிறது. எனவே எதிர்க்கின்றோம். இச்சட்ட மூலம் எதிர்வரும் 28 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் முன் வைக்கப்படவுள்ளது. இதன் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் கங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள்.
இது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டாலும் நாம் எதிர்த்தே வாக்களிப்போம். இச்சட்ட மூலம் தொடர்பாக ஆராய நேற்று காலை 10.30 மணிக்கு கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடக் கூட்டம் நண்பகல் 2.30 மணிக்கு முடிவடைந்ததாகவும் ஹசன் அலி எம்.பி. தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply